பல்தேசிய கம்பனிகளின் பசளை நிறுவனங்களை நாட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று கூறியவர்கள் இன்று இரசாயன உரத்தை வைத்து அரசியல் செய்கின்றனர் என நீர்ப்பாசன அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கண்டியில் வைத்து நேற்று (01) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், விவசாயிகள் என்ற சித்திரத்தைக் காட்டிக் கொண்டு ஒரே ஒரு கூட்டம் மட்டுமே பல இடங்களிலும் ஆர்பாட்டம் செய்வது தெளிவாகத் தெரிகின்றது. உர விவகாரம் இன்று அரசியலாக்கப்பட்டிருப்பது இதன் மூலம் உறுதியாகிறது.
இயற்கை பசளையுடனான விவசாயம் பற்றிய பல தசாப்தங்களாக பேசப்பட்டு வருகிறது. ஏற்கனவே பல வருடகாலமாக இயற்கைப் பசளையூடாகவே விவசாயம் மேற்கொள்ளப்பட்டது. 1999 ல் நான் விவசாய பிரதி அமைச்சராக இருந்தேன். அப்போது அமைச்சரவை அமைச்சராக இருந்தவர் முன்னாள் பிரதமர் தி.மு. ஜயரத்ன. விவசாயம், உற்பத்திக்கு உள்நாட்டில் பசளை தயாரிக்க ஆரம்பிக்கப்பட்டது .
இன்றும் பல இடங்களில் அத்தகைய களைக் கொல்லிகளும், பூச்சிக் கொல்லிகளும் பயன்படுத்தப்படுகின்றன. தங்களுக்குத் தேவையான உரத்தை தமது வயல்களிலே உற்பத்தி செய்கின்றனர். இத்திட்டம் தொடர்பில் விவசாயிகளுக்கு தெளிவுபடுத்துவதில் சில குறைபாடுகள் காணப்பட்டன.
கமநல சேவை நிலையங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் காபன் உர உற்பத்தியை அல்லது இயற்கைப் பசளை உற்பத்தியை காணும் சந்தர்ப்பம் விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை. உயர்தர நஞ்சற்ற சத்தான உணவு வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும். இதன் வெற்றிக்கு பங்களிக்கும் சிறந்த பணிரயச் செய்வோர் விவசாயிகள்.
இரசாயன உரங்களை கைவிட்டு இயற்கை உரங்களுக்கு மாறுவதற்கு விவசாயிகள் முயற்சித்து அதில் நம்பிக்கை கொள்ள வேண்டும். அது விளைச்சலை அதிகரிப்பதுடன் நச்சுத்தன்மையற்ற உணவு உற்பத்தி திக்கு வழிகாணலாம்.
நானும் ஒரு விவசாயிதான். 08 ஏக்கரில் இயற்கை உரம் போட்டு பயிரிட்டேன். ஆரம்பத்தில் இயற்கை உரமிடுவதால் ஏற்பட்டும் சில பிரச்சினை காரணமாக, எதிர்வரும் பருவத்தில் அறுவடை சற்று குறையலாம்.
நாம் உழைக்கும் செல்வத்தை வெளிநாட்டு பல்தேசியக் கம்பணிகளுக்கு கொடுத்து அவர்களை விரட்ட வேண்டும் என்று சொன்னவர்கள் தற்போது ரசாயன உரம் இறக்குமதி செய்யுங்கள் என்று கூறுகின்றனர்.
மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகே, இராஜாங்க அமைச்சர்களான அனுராத ஜயரத்ன, திலும் அமுனுகம, குணதிலக ராஜபக்ஷ மற்றும் உதயன கிரிந்திகொட ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர்.
(எம்.ஏ. அமீனுல்லா, அக்குறணை குறூப் நிருபர்)
No comments:
Post a Comment