(எம்.ஆர்.எம்.வசீம்)
'ஒரே நாடு ஒரே சட்டம்' தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவராக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் நியமிக்கப்பட்டிருப்பது தொடர்பாக ஜனாதிபதியுடன் கலந்துரையாட இருக்கின்றேன். வெளிநாடு ஒன்றுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு சென்றிருக்கும் ஜனாதிபதி நாடு திரும்பியதுடன் இது தொடர்பில் கலந்துரையாட எதிர்பார்க்கின்றேன் என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
'ஒரே நாடு ஒரே சட்டம்' தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவராக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் நியமிக்கப்பட்டிருப்பமை தொடர்பாக பல்வேறு விமசனங்கள் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் நீதி அமைச்சர் என்ற வகையில் தனது நிலைப்பாட்டை தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இதேவேளை, ஞானசார தேரரின் இந்த நியமனம் தொடர்பாக தனக்கு தெரியாது என்றும் இது தொடர்பில் ஜனாதிபதி தன்னுடன் கலந்துரையாடவில்லை எனவும் அத்துடன் இந்த நியமனம் தொடர்பில் தனக்கு திருப்தியடைய முடியாது என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்திருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் ஜனாதிபதி செயலணி அமைத்து அதற்கு உறுப்பினர்கள் நியமிப்பது ஜனாதிபதியின் அதிகாரத்துடன் சம்பந்தமானது. அது தொடர்பில் யாருடனும் கலந்துரையாட வேண்டும் என்றில்லை. சட்டத்துடன் சம்பந்தப்பட்ட விடயம் என்ற காரணத்தினாலே பலரும் இந்த செயலணி தொடர்பில் வினவுகின்றனர் என தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த மாதம் 26 ஆம் திகதி விசேட வர்த்தமானி அறிவிப்பொன்றை வெளியிட்டு 'ஒரே நாடு ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணியை அமைத்து அதற்கான 13 உறுப்பினர்களின் பெயர்களையும் வெளியிட்டிருந்தார்.
அத்துடன் ஞானசார தேரரின் தலைமையிலான 'ஒரே நாடு ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணி முதல் தடவையாக கடந்த 31ஆம் திகதி கூடியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
No comments:
Post a Comment