நாட்டில் அனைத்து மதங்களையும் பாதுகாப்பது அரசின் பொறுப்பு, அரசியலமைப்பிலும் அதுவே கூறப்பட்டுள்ளது - பிரதமர் மஹிந்த - News View

Breaking

Wednesday, November 24, 2021

நாட்டில் அனைத்து மதங்களையும் பாதுகாப்பது அரசின் பொறுப்பு, அரசியலமைப்பிலும் அதுவே கூறப்பட்டுள்ளது - பிரதமர் மஹிந்த

நாட்டின் அரசியலமைப்புக்கிணங்க அனைத்து மதங்களையும் பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகுமென பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அதற்கிணங்க அனைத்து மதங்களின் வழிபாட்டுத் தலங்களை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் அதேபோன்று ஒழுக்கமுள்ள சமூகத்தை உருவாக்குவதற்கும் பல்வேறு திட்டங்களை புத்த சாசன, மத விவகார, கலாசார அலுவல்கள் அமைச்சு மேற்கொண்டு வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

அதேவேளை, நாட்டில் நிலையான அபிவிருத்தி ஏற்பட வேண்டுமானால் பொருளாதார அபிவிருத்தியைப் போன்றே ஆன்மீக ரீதியான அபிவிருத்தியும் அவசியம் என்றும் சபையில் தெரிவித்த பிரதமர், ஒழுக்கமுள்ள சமூகத்தை கட்டியெழுப்புவது முக்கியமாகும் என்றும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, தேசிய மரபுரிமைகள் அமைச்சு, பொது நிர்வாகம்,மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு உள்ளிட்ட அமைச்சுக்களுக்கான வரவு செலவு திட்டம் மூன்றாம் வாசிப்பு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ இவ்வாறு தெரிவித்தார்.


விவாதத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர், நாட்டின் பிரஜைகளை சிறந்த குணாதிசயம் மற்றும் ஒழுக்கமுள்ள பிரஜைகளாக உருவாக்குவதற்கான பொறுப்பு புத்த சாசன, மத அலுவல்கள் மற்றும் கலாசார விவகார அமைச்சுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதற்கிணங்க புத்த தர்மத்தை திரிபு படுத்தாமல் பாதுகாப்பது, புத்த சாசனத்தை பாதுகாப்பது, பௌத்த மத வழிபாட்டுத் தலங்களை மேம்படுத்துவது, பாதுகாப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எமது அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்

No comments:

Post a Comment