கடந்த ஆண்டை விடவும் இம்முறை சுகாதாரத்துறைக்கு குறைவான நிதியே ஒதுக்கீடு, கல்முனை சுகாதார வைத்திய பணிமனை நகர்ப்புற அபிவிருத்தியையே முன்னெடுக்கிறது - தவராசா கலையரசன் - News View

About Us

About Us

Breaking

Tuesday, November 30, 2021

கடந்த ஆண்டை விடவும் இம்முறை சுகாதாரத்துறைக்கு குறைவான நிதியே ஒதுக்கீடு, கல்முனை சுகாதார வைத்திய பணிமனை நகர்ப்புற அபிவிருத்தியையே முன்னெடுக்கிறது - தவராசா கலையரசன்

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

நாட்டின் கொவிட்-19 உள்ளிட்ட அச்சுறுத்தல் நிலைமைகள் காணப்படுகின்ற நிலையிலும் கடந்த ஆண்டை விடவும் இம்முறை சுகாதாரத்துறைக்கு குறைவான நிதியே ஒதுக்கப்பட்டுள்ளதாக சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (30) இடம்பெற்ற சுகாதார அமைச்சுக்கள் நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், கிளிநொச்சி மாவட்டத்திலே பல வைத்தியசாலைகள் தரமுயர்த்தப்பட வேண்டியுள்ளன. அந்த அடிப்படையில் தர்மபுரம் வைத்தியசாலை, பளை வைத்தியசாலை, பூநகரி வைத்தியசாலை, வேரவில் வைத்தியசாலை போன்றவை தரமுயர்த்தப்பட வேண்டும்.

ஏ 9 வீதியிலே தற்போது அதிகமான விபத்துக்கள் ஏற்படுகின்றன. இவ்வாறான நிலையில் அங்கு அவசர விபத்து சேவைப் பிரிவொன்று அமைக்கப்படவில்லை. எனவே அதனை விரைவாக அமைக்க வேண்டும்.

ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் சுகாதாரத்துறை மேலோங்கி நிற்கின்றது. அந்த வகையில் மருத்துவர்கள், தாதியர்கள் ,சுகாதார பிரிவினர் மற்றும் அமைச்சருக்கு நாம் நன்றி கூறுபவர்களாக இருந்தாலும் 2022 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டை பார்க்கின்றபோது 153.536 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

2021 இல் 159.48 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்தது. கடந்த காலத்தை விட குறைவாகவே ஒதுக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் இரண்டு பிராந்திய சுகாதார பணிமனைகள் உள்ளன. ஒன்று அம்பாறையில் சிங்கள மக்களை மையமாக வைத்தும் அடுத்தது தமிழ் முஸ்லிம்களை மையமாக வைத்து கல்முனையிலும் இயங்கி வருகின்றன.

ஆனால் இந்த பணிமனைகள் 2017 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலத்தில் மிக மோசமான பணிகளைத்தான் செய்தன. குறிப்பாக கல்முனையை மையமாக வைத்து இயங்கிய சுகாதார பணிமனையில் பாரிய அரசியல் தலையீடுகள் இருந்ததன் காரணமாக தமிழ் பிரதேசங்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டன.

கல்முனை, திருக்கோவில் உட்பட மூன்று வைத்தியசாலைகளும் பழைமையான வைத்தியசாலைகள், ஆனால் திருக்கோவில் வைத்தியசாலை என்பது 2017 ஆம் ஆண்டு தரமுயர்த்தப்பட்டு அடிக்கல் நாட்டு விழா எல்லாம் நடைபெற்றன. ஆனால் அதற்கான அபிவிருத்தி பணிகள் இன்றுவரை முன்னெடுக்கப்படவில்லை. வைத்தியதிகாரிகைளை நியமித்துள்ளமைக்கு அமைச்சருக்கு நன்றி கூறுகின்றேன்.

கல்முனை சுகாதார வைத்திய பணிமனை என்கின்றபோது கூடுதலாக நகர்ப்புறங்களை அண்மித்த அபிவிருத்தியே முன்னெடுக்கப்பட்டது. கிராமப்புறங்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டிருந்தன. அங்குள்ள மக்கள் வைத்தியசாலைகளை தரமுயர்த்திடுமாறு கோரிய போதும் அங்குள்ள அரசியல்வாதிகளினாலும் அதிகாரிகளினால் அது தட்டிக்கழிக்கப்பட்டது.

நான் மாகாண சபையில் இருந்த போது பல தடவைகள் அந்த வைத்தியசாலைகள் தரமுயர்த்தப்பட வேண்டுமென்ற பிரேரணையை முன்வைத்தபோதும் நிராகரிக்கப்பட்டன. ஏனெனில் அந்த பிரதேசங்கள் குடியேற்ற கிராமங்களாக இருப்பதல்ல ஆரம்ப வைத்தியசாலைகளாகவே உள்ளன.

இந்த அடிப்படையில் 2020 ஆம் ஆண்டு மூன்று வைத்தியசாலைகள் தரமுயர்த்தப்பட்டுள்ளன. பனங்காடு வைத்தியசாலை, எல்லைக் கிராமத்தில் இருக்கின்ற மல்வத்தை வைத்தியசாலை, அன்னமலை வைத்தியசாலை என்பனவே பிரதேச வைத்தியசாலைகளாக தரமுயர்த்தப்பட்டுள்ளன. இதற்கு நன்றி தெரிவிக்க வேண்டும். தரமுயர்த்தலோடு அதற்கான வளங்களும் சமமாக பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். கிராம மக்கள் வேறு வைத்தியசாலைகளுக்கு போவதென்றால் பெருமளவு பணத்தை போக்குவரத்துக்கே செலவிட வேண்டியுள்ளது.

பொத்துவிலில் கோமாரி வைத்தியசாலை குறுகிய வட்டத்துக்குள் உள்ளது. அங்குள்ள மக்கள் இதனால் சொல்ல முடியாத துன்பத்தை அனுபவிக்கின்றனர். மத்திய முகாம் சொறிக்கல்முனை வைத்தியசாலைகள் இன்னும் மேம்படுத்தப்பட வேண்டும். எமது பிரதேசங்கள் மிகவும் வறிய பிரதேசங்கள் என்பதனால் அங்கு வைத்திய சேவைகளை மேம்படுத்த வேண்டும்.

கல்முனை சுகாதார பணிமனை பரந்துபட்ட பிரதேசமாக உள்ளது. இருந்தாலும் 25 கிலோ மீற்றருக்குட்பட்ட பிரதேசங்களை நாம் பார்க்கின்றபோது குறிப்பாக கல்முனையிலிருந்து அக்கரைப்பற்று வரையிலுமாக இருக்கின்ற பகுதிகளை நாம் பார்க்கின்ற போது அந்த இடங்களிலே 5 ஆதார வைத்தியசாலைகள் உருவாக்கப்பட்டு சகல வளங்களும் குறிக்கப்பட்ட தூரத்துக்குள்ளே குவிக்கப்படுகின்ற நிலைமை உள்ளது.

இதனை பார்க்கின்ற போது நகரங்களை அண்மித்த அபிவிருத்தியும் கிராமங்களை புறக்கணிக்கின்ற நிலையும் உள்ளது. இந்த நிலைமை மாற வேண்டும். இதே நிலையே கரடியனாறு . நாவிதன்வெளி போன்ற இடங்களிலும் உள்ளன என்றார்.

No comments:

Post a Comment