எரிவாயு சிலிண்டர் வெடிப்பு நாட்டில் 40 வீதமானவர்களின் பிரச்சினை, இதில் எதனையும் மறைக்கப்போவதில்லை : எதிர்க்கட்சி தலைவவரின் கேள்விக்கு பதிலளித்த லசந்த அழகியவண்ண - News View

About Us

About Us

Breaking

Tuesday, November 30, 2021

எரிவாயு சிலிண்டர் வெடிப்பு நாட்டில் 40 வீதமானவர்களின் பிரச்சினை, இதில் எதனையும் மறைக்கப்போவதில்லை : எதிர்க்கட்சி தலைவவரின் கேள்விக்கு பதிலளித்த லசந்த அழகியவண்ண

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

எரிவாயு சிலிண்டர் வெடிப்பு நாட்டில் 40 வீதமானவர்களின் பிரச்சினை. இதில் எதனையும் மறைக்கப்போவதில்லை. அரசாங்கம் மக்கள் பக்கம் இருந்தே இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுத்து வருகின்றோம் என நுகர்வோர் தொடர்பான இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (30) நிலையியற் கட்டளை 27/இன் 2கீழ் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேதமதாசவினால் முன்வைக்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

சஜித் பிரேமதாச தெரிவிக்கையில், இலங்கையில் 60 இலட்சம் மக்கள் வீடுகளில் சமையல் எரிவாயுவை பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக நாட்டின் பல்வேறு இடங்களில் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறிய சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.

கடந்த இரண்டு தினங்களில் மாத்திரம் இவ்வாறான சம்பவங்கள் 11 பதிவாகி இருக்கின்றன. இந்த பிரச்சினை இந்த வருடம் ஆரம்பத்தில் 18 லீட்டர் கொள்ளவு கொண்ட ஹைப்ரிட் வகை சிலிண்டர் ஒன்றை அறிமுகப்படுத்திய பின்னராகும். நுகர்வோரை ஏமாற்றி அதிக இலாபம் ஈட்டிக்கொள்ளும் நோக்கிலே இது மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

இது தொடர்பாக நுகர்வோர் அதிகார சபையால் நடவடிக்கை எடுக்கப்பட்டு, குறித்த நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளபோதும் இடம்பெற்ற நடவடிக்கையால் வெடிப்பு சம்பவங்கள் நாடு பூராகவும் இடம்பெறுவதை அறியக்கிடைகின்றன.

எரிவாயு சிலிண்டரின் இரசாயன கலவை அளவில் மாற்றம் ஏற்பட்டிருப்பதை பாதுகாப்பு அதிகார சபை முன்னாள் பணிப்பாளர் மற்றும் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திரகரிப்பு நிலைய இரசாயன பிரிவு முன்னாள் பிரதானி ஆகியோர் ஊடக சந்திப்பொன்றின்போது தெரிவித்திருந்தனர்.

எரிவாயு சிலிண்டரில் கசிவு இடம்பெறுவதை பொதுமக்கள் சவர்க்கார நுரையை சிலிண்டரின் எரிவாயு வெளியாகும் இடத்துக்கு இட்டு பரிசோதித்து பார்த்து, இவ்வாறான பல காஸ் சிலிண்டர்கள் நாட்டுக்குள் இருப்பதை உறுதிசெய்திருக்கின்றனர்.

அதனால் தற்போது நாட்டில் இருக்கும் எரிவாயு சிலிண்டர் ஒன்றில் இருக்க வேண்டிய இரசாயன கலவையின் அளவு எத்தனை, தர நிர்ணயம் உறுதிப்படுத்தி இருக்கும் கவலையின் அளவா தற்போதுள்ள கேஸ் சிலிண்டர்களில் இருக்கின்றது.

அதேபோன்று நாட்டுக்கு எரிவாயு சிலிண்டர் கொண்டுவரும் பிரதான இரண்டு நிறுவனங்களும் 2021 ஜனவரியில் இருந்து எந்தளவு தொகை எரிவாயு சிலிண்டர் கொண்டுவந்திருக்கின்றது.

அந்த எரிவாயு சிலிண்டர்களின் இரசாயன கலவையின் அளவு என்ன, தரம் அற்றது என சந்தையில் இருந்து எரிவாயு சிலிண்டர்களை அகற்றியதாக அமைச்சர் தெரிவித்திருந்தார். அவ்வாறு அகற்றிய எரிவாயு சிலிண்டர்களை என்ன செய்தது.

அத்துடன் இந்த பிரச்சினைக்கு குறுகிய, மத்திய மற்றும் நீண்டகால தீர்வுகளை வழங்கி இந்த பிரச்சினைக்கு தீர்வுகானவேண்டும். அதற்காக பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை அமைத்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தாெடர்ந்து பதிலளிக்கையில், இது நாட்டில் இருக்கும் குடும்பங்களில் 40 வீதமானவர்களின் பிரச்சினை. அதனை நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம். எரிவாயு வெடிப்பு பிரச்சினையால் வீடுகளில் இருப்பவர்கள் மாத்திரமல்ல வர்த்தக நிலையங்கள் உணவகங்களில் இருப்பவர்களும் பயத்திலேயே இருக்கின்றனர்.

இந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கம் நுகர்வோருடனே இருக்கின்றனர். பொலன்னறுவையில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் பெண் ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் குறித்த பெண் தற்கொலை செய்துகொண்டே இறந்ததாகவே பொலிஸார் தெரிவித்திருக்கின்றனர்.

அதேபோன்று எரிவாயு சிலிண்டர் வெடிப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை ஒரு எரிவாயு சிலிண்டர்கூட வெடித்துச் சிதறவில்லை. எரிவாயு சிலிண்டர் வெடிப்பதில்லை என்பது பரிசோதனைகளில் உறுதியாகி இருக்கின்றது.

அத்துடன் இடம்பெற்ற மோசடி என்ன வென்றால் 12.5 கிலாே எரிவாயு சிலிண்டரை 18 லீட்டர் எரிவாயு சிலிண்டராக மாற்றி விலையை அதிகரித்தார்கள். அதுதான் இவர்கள் செய்த மோசடி, அவ்வாறு இல்லாமல் எரிவாயு சிலிண்டரின் இரசாயன அளவில் மாற்றம் செய்தது அல்ல. அவர்களின் அந்த மோசடிக்கு எதிராகவே நாங்கள் நடவடிக்கை எடுத்து, வழக்கு தொடுத்திருக்கின்றோம்.

நீதிமன்ற உத்தரவுக்கமைய அந்த கேஸ் சிலிண்டர்களை சந்தையில் இருந்து அகற்றினோம். அதனால் தற்போது 18 லீற்றர் எரிவாயு சிலிண்டர் சந்தையில் இல்லை என்பதை பொறுப்புடன் தெரிவிக்கின்றோம்.

அதேபோன்று எமக்கு இருக்கும் கேள்விதான் காஸ் சிலிண்டரின் கலவையின் அளவில் 50 க்கு 50 மாற்றம் செய்திருந்தால், ஏன் அன்று எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பு சம்பவங்கள் இடம்பெறவில்லை என்பதாகும். அதனால் இது தொடர்பில் தொழிநுட் ரீதியான தகவல்களை வழங்குமாறு மொரட்டுவ பல்கலைக்கழகத்துக்கு அறிக்கை சமர்ப்பித்திருக்கின்றோம்.

அதேபோன்று நாட்டின் பல பிரதேசங்களில் இருந்தும் எரிவாயு மாதிரிகளை பெற்று இரசாயன ஆய்வுக்கு அனுப்பி இருக்கின்றோம். அந்த அறிக்கை கிடைத்ததுடன் அதனையும் மொரட்டுவ பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி அறிக்கை பெற்றுக் கொள்ள இருக்கின்றோம். அந்த அறிக்கையின் அடிப்படையில் எதிர்கால நடவடிக்கை மேற்கொள்ள இருக்கின்றோம். இதில் மறைப்பதற்கு எதுவும் இல்லை. இந்த பிரச்சினையை தீர்ப்பதே எமது நோக்கம் என்றார்.

இதன்போது எழுந்த எதிர்க்கட்சி தலைவர், கலவையின் அளவில் மாற்றம் செய்யப்பட்ட எரிவாயு சிலிண்டர்கள் சந்தையில் இருக்கின்றதா என்பதை தெரிவிக்க முடியுமா? இன்றைய தினமும் நான்கு இடங்களில் வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

மக்கள் வாழ்வா சாவா என்ற பிரச்சினையிலேயே வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். வெடிப்பு சம்பவங்கள் இடம்பெறாத நாட்டொன்றை ஏற்படுத்துவதாக தெரிவித்தே ஆட்சிக்கு வந்தீர்கள். அதனால் இந்த விடயத்தை தொடர்ந்தும் இழுத்தடிக்காமல் விரைவாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

இதன்போது எழுந்த சபைமுதல்வரும் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன தெரிவிக்கையில், இது பாரிய பிரச்சினை மக்களின் உயிரை பாதுகாப்பதற்கு நாங்கள் முன்னுரிமை வழங்க வேண்டும். அதனால் இது தொடர்பாக விசேட பாராளுமன்ற ஆலாேசனை குழுவொன்றை அமைத்து, அதற்கு இதனுடன் சம்பந்தப்பட்டவர்களை அழைத்து தகவல்களை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக நாளை (இன்று) காலை இதனை கூட்டுமாறு அமைச்சருக்கு சபாநாயகர் உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.

அதனைத் தொடர்ந்து எழுந்த இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண, நாளை (இன்று) கூடவுள்ள ஆலாேசனை குழு கூட்டத்துக்கு பாராளுமன்றத்தை பிரதிநிதி்த்துவப்படும் கட்சி தலைவர்கள் மற்றும் பிரதிநிதித்துவப்படுத்தாத கட்சி தலைவர்கள் அனைவரும் வந்து கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.

No comments:

Post a Comment