வரலாற்றில் இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஐக்கிய தேசிய கட்சியே மீட்டுள்ளது : எமது ஆட்சியின் அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஒரே நாடு ஒரே சட்டம் காணப்பட்டது - ருவன் விஜேவர்தன - News View

About Us

About Us

Breaking

Sunday, November 21, 2021

வரலாற்றில் இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஐக்கிய தேசிய கட்சியே மீட்டுள்ளது : எமது ஆட்சியின் அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஒரே நாடு ஒரே சட்டம் காணப்பட்டது - ருவன் விஜேவர்தன

(எம்.மனோசித்ரா)

நாட்டில் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டால் வெளிநாடுகளிலிருந்து உணவை இறக்குமதி செய்ய நேரிடும். இதற்கு டொலர் தேவைப்படும். எனினும் தற்போது அரசாங்கம் எதிர்கொண்டுள்ள பாரிய டொலர் நெருக்கடியால் மக்கள் அன்றாடம் உண்ணும் பருப்பும் கூட இல்லாத நிலைமை ஏற்படும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார்.

வரலாற்றில் இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஐக்கிய தேசிய கட்சியே அதனை மீட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியால் மாத்திரமே வங்குரோத்து நிலையை அடைந்துள்ள நாட்டைக் கட்டியெழுப்ப முடியும். ஐ.தே.க. ஜனாதிபதியின் கீழ் நாட்டை கட்டியெழுப்புவோம் என்றும் ருவன் விஜேவர்தன தெரிவித்தார்.

மொனராகலை மாவட்டத்தில் நடைபெற்ற ஐ.தே.க. மறுசீரமைப்பு கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், உர தட்டுப்பாட்டினால் முற்றாக விசாயம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வெளிநாடுகளிலிருந்து உணவையும் இறக்குமதி செய்வதற்கு டொலர் இன்றியுள்ள அரசாங்கம் நாட்டு மக்களுக்கும் பருப்பு கூட அற்ற நிலைமையை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளையே முன்னெடுத்துள்ளது.

நாட்டில் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டால் வெளிநாடுகளிலிருந்து உணவை இறக்குமதி செய்ய நேரிடும். இதற்கு டொலர் தேவைப்படும். எனினும் தற்போது அரசாங்கம் எதிர்கொண்டுள்ள பாரிய டொலர் நெருக்கடியால் மக்கள் அன்றாடம் உண்ணும் பருப்பும் கூட இல்லாத நிலைமை ஏற்படும்.

இலங்கையில் ஐக்கிய தேசிய கட்சியே மிகப்பழமையானதாகும். எவ்வாறிருப்பினும் கடந்த ஆட்சிக் காலத்தில் நாம் பல்வேறு நிபந்தனைகளுக்கு கட்டுப்பாட்டிருந்தமையால் கட்சி ஆதரவாளர்களுக்கு உதவ முடியாத நிலைமை ஏற்பட்டது.

நல்லாட்சி அரசாங்கத்தில் சுதந்திர கட்சியிடமே அதிக தொழில் வாய்ப்புக்களைக் கொண்ட அமைச்சுக்கள் காணப்பட்டன. எம்மிடம் கொள்கைகளை அமைக்கும் அமைச்சுக்கள் மாத்திரமே காணப்பட்டன.

ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியமைக்கும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் உரிய அதிகாரம் கிடைக்கப் பெறாமையால் மக்களுக்கு பாரிய வேலைத்திட்டங்களை ஆற்ற முடியாத நிலைமை காணப்பட்டது.

ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து ஒருவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படாமையே இதற்கான காரணமாகும். எவ்வாறிருப்பினும் நாடு என்ற ரீதியில் எம்மால் இயன்ற அனைத்து வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்திருக்கின்றோம்.

சுவசெரிய அம்புலன்ஸ் சேவை பெற்றுக் கொடுக்கப்பட்டது. கர்ப்பிணிகளுக்கு 20000 ரூபா பெறுமதியுடைய போசாக்குணவு வழங்கப்பட்டது. அரச உத்தியோகத்தர்களின் சம்பளம் 10000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை அறிமுகப்படுத்தி அரச சேவையிலுள்ள மோசடிகள், ஊழல்கள் தொடர்பிலான விடயங்களை வெளிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எமது ஆட்சி காணப்பட்ட அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஒரே நாடு ஒரே சட்டம் காணப்பட்டது. எனினும் ஆட்சி மாற்றங்கள் ஏற்படும் போது ஒரே நாடு பல சட்டங்கள் காணப்படுவதை அனைவரும் அறிவார்கள். எமது கட்சி ஆதரவாளர்களுக்கு உதவ முடியாமல் போனமைக்கு இதுவே காரணமாகும்.

அடுத்த அரசாங்கத்தில் நாம் முதலாவதாக எமது கட்சி ஆதரவாளர்களின் தேவைகளையே நிறைவேற்றுவோம். அதற்கு எமது கட்சி ஆதரவாளர்கள் ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து ஒருவரை ஜனாதிபதியாக நியமிப்பதற்கு முயற்சிக்க வேண்டும்.

இம்முறை வரவு செலவு திட்டத்தில் மக்களுக்கு எவ்வித நிவாரணமும் வழங்கப்படவில்லை. வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னிருந்தே சமையல் எரிவாயுவிற்கான வரிசை, எரிபொருளுக்கான வரிசை, பால்மாவிற்கான வரிசை என்பவற்றால் மக்கள் பெரும் அசௌரியங்களை எதிர்கொண்டிருந்தனர்.

இதன் காரணமாக உணவு சரியாக கிடைக்கப் பெறவில்லை. இதனால் வரவு செலவு திட்டத்தின் ஊடாக ஏதேனும் சலுகை கிடைக்கப் பெறும் என்று மக்கள் எதிர்பார்த்திருந்தனர். அந்த எதிர்ப்பார்ப்பு நிறைவேற்றப்படவில்லை.

பொருளாதாரத்தை மேம்படுத்த அரசாங்கத்திற்கு எவ்வித வேலைத்திட்டமும் இல்லை. டொலர் இன்மையே நாட்டில் காணப்படும் பிரதான பொருளாதார பிரச்சினையாகும்.

டொலரை சேமிப்பதற்கான எந்தவொரு வேலைத்திட்டத்தையும் அரசாங்கம் இம்முறை வரவு செலவு திட்டத்தில் முன்வைக்கவில்லை. இந்த அரசாங்கத்தால் இனி நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது. மக்களைக் கொல்லாமல் கொல்லும் பொருளாதாரத் திட்டமே தற்போது செயல்படுத்தப்படுகிறது.

வரலாற்றில் இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஐக்கிய தேசிய கட்சியே அதனை மீட்டுள்ளது. எனவே தற்போது மக்களுக்கு காணப்படும் ஒரேயொரு மாற்று வழி ஐக்கிய தேசிய கட்சி மாத்திரமேயாகும். ஐக்கிய தேசியக் கட்சியால் மட்டுமே வங்குரோத்து நாட்டைக் கட்டியெழுப்ப முடியும். ஐ.தே.க. ஜனாதிபதியின் கீழ் நாட்டை கட்டியெழுப்புவோம் என்றார்.

No comments:

Post a Comment