ஆசியாவின் மிக உன்னதமான அரசியல் சக்தியினை உருவாக்குமளவுக்கு தைரியமிக்கவர்களாக மாறினோம், அதுவே ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி - பஷில் ராஜபக்ஷ - News View

About Us

About Us

Breaking

Friday, November 12, 2021

ஆசியாவின் மிக உன்னதமான அரசியல் சக்தியினை உருவாக்குமளவுக்கு தைரியமிக்கவர்களாக மாறினோம், அதுவே ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி - பஷில் ராஜபக்ஷ

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

நல்லாட்சி காலத்தின் வெறுப்புமிக்க அரசியல் மூலம் தளர்ந்துபோகாத நாம் காட்டுமிராண்டித்தனமான அரசியல் சூழ்நிலைக்குள் ஆசியாவின் மிக உன்னதமான அரசியல் சக்தியினை உருவாக்குமளவுக்கு தைரியமிக்கவர்களாக மாறினோம். அதுவே ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியாகும் என தனது வரவு செலவுத் திட்ட உரையில் தமது அரசியல் பயணத்தை நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.

பொதுஜன முன்னணி அரசின் எதிர்வரும் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு நிதி அமைச்சர் பஷில் ராஜபக் ஷவினால் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது. இதன்போது நிதி அமைச்சர் இந்த விடயங்களை சபையில் சுட்டிக்காட்டினார்.

அவர் மேலும் கூறுகையில், அனைத்து எதிர்முகாம்களினையும் தோல்வியடையச் செய்து நாம் இத் தேர்தலில் மகத்தான வெற்றியினைப் பெற்றோம். பின்னர் ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்றது. அதுவரை இந்த நாட்டில் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் இல்லாத ஒப்பற்ற அரசியல் காரணிகள் மூன்று எம்மிடம் காணப்பட்டது.

அதில் முதலாவது, மஹிந்த ராஜபக்ஷவின் நிகரற்ற அரசியல் தலைமைத்துவமாகும். இரண்டாவது, மிகவும் ஒழுங்காக கட்டமைக்கப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியாகும். மூன்றாவது, மக்களினால் பெயர் குறிப்பிடப்பட்ட வெற்றி வேட்பாளரொருவர் எமது அரசியல் முகாமிற்குள் இருந்ததாகும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சவால்கள் பலவற்றுக்கு மத்தியில் 2019 ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ அவர்கள் அமோக வெற்றியீட்டினார். அறுபத்தொன்பது இலட்சம் மக்கள் கோட்டாபாய ராஜபக்ஷ அவர்களுக்கு வாக்களித்தனர்.

அது பதின்மூன்று இலட்சத்தினை விஞ்சிய அதிகப்படியான வாக்குகளின் மூலம் கிடைக்கப் பெற்ற சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த மக்கள் ஆணையாகும்.

கோட்டாபாய ராஜபக்ஷ அவர்களின் தலைமைத்துவத்தின் மகத்துவத்தினை மீண்டும் சான்றுபகரும் வகையில் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெற்று 9 மாதங்களின் பின்னர் 2020 பாராளுமன்றத் தேர்தலிலும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றி கிடைத்தது. இது எதிர்க்கட்சிகளை நடுங்கச் செய்யுமளவு மக்கள் வழங்கிய பதிலடியாகும் என்றார்.

No comments:

Post a Comment