(எம்.மனோசித்ரா)
அமைச்சரவை அமைச்சர்களுக்கு கூட தெளிவுபடுத்தப்படாமல் கெரவலப்பிட்டி ஒப்பந்தம் போன்ற முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன. இவ்வாறான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் போது அதனை எதிர்க்கும் அமைச்சர்கள் அரசாங்கத்திற்குள் இருந்து கூச்சலிட்டுக் கொண்டிருக்காமல், அரசாங்கத்திலிருந்து வெளியேறி எதிர்ப்பை வெளியிட வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.
ஆளுந்தரப்பின் பங்காளி கட்சிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான முரண்பாடு தொடர்பில் கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், கோட்டாபய ராஜபக்ஷவிற்கு வாக்களிக்க வேண்டாம் என்று கூறிய முதலாவது நபர் நான் ஆவேன். 40 வருடங்களுக்கும் அதிக அரசியல் அனுகுபவத்தின் ஊடாகவே நான் அதைக் கூறினேன். குறைந்தபட்சம் பிரதேச சபை உறுப்பினராகக் கூட சேவையாற்றிய அனுபவம் கூட அற்ற அவரால் எவ்வாறு நாட்டை முறையாக நிர்வகிக்க முடியும்? அன்று என்னை தூற்றிய மக்கள் இன்று நான் கூறியது சரி என்று ஏற்றுக் கொண்டுள்ளனர்.
நாம் எதிர்க்கட்சியினர் என்பதால் அமைச்சரவைக்குள் என்ன நடக்கிறது என்பது எமக்கு தெரியாது. எனினும் இரவோடிரவாக கெரவலப்பிட்டி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளமை குறித்த தகவல் எமக்கு கிடைக்கப் பெற்றது.
அமைச்சரவை அமைச்சர்களுக்கு கூட தெளிவுபடுத்தாமல் இவ்வாறான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகிறது எனும் போது அவர்கள் அரசாங்கத்திற்குள் இருந்து கூச்சலிட்டுக் கொண்டிருக்காமல், அரசாங்கத்திலிருந்து வெளியேற எதிர்ப்பை வெளியிட வேண்டும்.
அமைச்சு பதவி என்பது அந்தளவிற்கு பெரிய விடயமல்ல. அனைத்து சந்தர்ப்பங்களிலும் அமைச்சு பதவி அனைவருக்கும் நிலைக்காது. மக்கள் அதனை எதிர்பார்க்கவும் இல்லை. வீதிக்கிறங்கி தமக்காக போராடுபவர்களையும், அவர்களுக்காக பேசுபவர்களையுமே மக்கள் எதிர்பார்க்கின்றனர். இதற்கு அரச அதிகாரம் தேவையல்ல. நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாரிய எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment