(எம்.எப்.எம்.பஸீர்)
தனது கட்சி உறுப்புரிமை மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பறிக்க, அபே ஜன பல கட்சி எடுத்துள்ள தீர்மானத்தை செல்லுபடியற்றதாக அறிவிக்கக் கோரி, பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் உயர் நீதிமன்றில் மனுவொன்றினை தாக்கல் செய்துள்ளார்.
அபே ஜன பல கட்சி, அக்கட்சியின் செயலர் நிஷாந்த ரத்நாயக்க, தவிசாளர் சமன் பெரேரா, விஜய தரணி தேசிய சபையின் செயலர் சமந்த கீர்த்தி பண்டார, தேர்தல்கள் ஆணைக் குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா உள்ளிட்ட அதன் உறுப்பினர்கள், தேர்தல்கள் ஆணைக் குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க, பாராளுமன்ற செயலாளர் நாயகம் உள்ளிட்ட 11 பேர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
தான் அபே ஜன பல கட்சியின் உறுப்பினர் இல்லை என்பதால், ஒழுக்க விதிகளை மீறியதாக கூறி தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பறிக்க, அக்கட்சியின் மத்திய செயற்குழுவுக்கோ அல்லது ஒழுக்காற்றுக் குழுவுக்கோ அதிகாரம் இல்லை என மனுதாரரான அத்துரலியே ரத்ன தேரர் மனுவூடாக தெரிவித்துள்ளார்.
தனது விடயத்தில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க அக்கட்சிக்கு எந்த அதிகாரமும் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் தனது கட்சியின் உறுப்புரிமை மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பறிக்க பிரதிவாதிகள் எடுத்துள்ள முயற்சி, தனக்கும் அபே ஜன பல கட்சிக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்டுள்ள இணக்கப்பாடுகளுக்கு முரணானது என மனுவில் அத்துரலியே ரத்ன தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதன்படி, கட்சியின் உறுப்பினர் பதவி, பாராளுமன்ற உறுப்பினர் பதவி ஆகியவற்றிலிருந்து தன்னை நீக்க எடுக்கப்பட்டுள்ள முடிவு, சட்டத்தின் முன் செல்லுபடியற்றது என தீர்ப்பறிவிக்குமாறு மனுதாரர் உயர் நீதிமன்றைக் கோரியுள்ளார்.
அத்துடன் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவி ரத்தாகவில்லை என்பதை அறிவித்து தீர்ப்பளிக்குமாறும் அவர் மனுவூடாக கோரியுள்ளார்.
No comments:
Post a Comment