மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி தேர்தல் காலத்தில் பின் கதவினூடாக தப்பித்து சென்றார் : மாகாண, உள்ளுராட்சி தேர்தலை காட்டிலும் மாற்றீடாக பிறிதொரு தேர்தல் இடம்பெறலாம் - அமைச்சர் ரொஷான் ரணசிங்க - News View

About Us

About Us

Breaking

Tuesday, November 2, 2021

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி தேர்தல் காலத்தில் பின் கதவினூடாக தப்பித்து சென்றார் : மாகாண, உள்ளுராட்சி தேர்தலை காட்டிலும் மாற்றீடாக பிறிதொரு தேர்தல் இடம்பெறலாம் - அமைச்சர் ரொஷான் ரணசிங்க

(இராஜதுரை ஹஷான்)

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தன் சார்பில் ஒருவரை களமிறக்க முடியாததன் காரணமாகவே சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் பின் கதவின் ஊடாக தப்பித்து சென்றார். ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் நடுநிலை வகிப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு ஐக்கிய மக்கள் சக்திக்கு இரகசியமாக ஆதரவு வழங்கினார். ஆகவே இவரது கருத்துக்களை மக்கள் ஏற்கமாட்டார்கள் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.

சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய தேர்தல்களை நடத்த எதிர்பார்த்துள்ளோம். மாகாண சபைத் தேர்தல், உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கு மாறாக பிறிதொரு தேர்தல் சிலவேளை இடம்பெறலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

பொலன்னறுவையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், 2016 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட பொதுஜன பெரமுன கட்சி குறுகிய காலத்திற்குள் இரண்டு பிரதான அரசியல் கட்சிகளையும் வீழ்த்தி 2018ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வெற்றி பெற்றது. அத்துடன் ஜனாதிபதித் தேர்தலிலும், 2020ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலிலும் கட்சி அமோக வெற்றி பெற்றது.

2020 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை கொவிட் தாக்கம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பலம் பொருந்திய நாடுகள் கொவிட் தாக்கத்தினால் பெரும் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ள நிலையில் அரசாங்கம் நாட்டு மக்களை கொவிட் தாக்கத்திலிருந்து பாதுகாத்துள்ளது.

2019ஆம் ஆண்டின் இறுதி காலாண்டின் போது ஆட்சியதிகாரத்தை பொறுப்பேற்றோம். அப்போது பொருளாதார வளர்ச்சி 2.7வீதமாக காணப்பட்டது.

கொவிட் தாக்கத்திற்கு மத்தியில் பொருளாதாரத்தையும், முன்னேற்றமடைய செய்யும் திட்டங்களை செயற்படுத்துவதுடன்,நாட்டின் அபிவிருத்தி பணிகளையும் சிறந்த முறையில் முன்னெடுத்துள்ளோம்.

ஊரப் பிரச்சினையால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று குறிப்பிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. தன்னால் இயலாத விடயம் தோல்வி என்று குறிப்பிடுவதில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திறமையானவர்.

ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் தேர்தலில் போட்டியிடாமல் பின் கதவின் ஊடாக அவர் தப்பி சென்றார். தேர்தலில் போட்டியிட்டால் படுதோல்வியடைவோம் என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார்.

2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் நடுநிலை என குறிப்பிட்டுக் கொண்டு ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவிற்கு மறைமுகமாக ஆதரவளித்தார். ஆகவே சேதனப் பசளை திட்டத்திற்கெதிராக அவர் முன்வைக்கும் கருத்துக்களை மக்கள் ஏற்கமாட்டார்கள்.

தேர்தலை நடத்துவதற்கான சுகாதார பாதுகாப்பான சூழல் காணப்படுகிறது என சுகாதார தரப்பினர் ஆலோசனை வழங்கினால் தேர்தலை நடத்த தயாராகவுள்ளோம். மாகாண சபை, உள்ளுராட்சி மன்ற சபை தேர்தலை காட்டிலும் மாற்றீடாக பிறிதொரு தேர்தல் இடம்பெறலாம் என்றார்.

No comments:

Post a Comment