கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்கள் மீண்டும் இணைய தாய் வீட்டின் கதவுகள் திறந்துள்ளன : தேர்தல்களில் எமது பலம் வெளிப்படுத்தப்படும் என்கிறது சுதந்திரக் கட்சி - News View

About Us

About Us

Breaking

Friday, November 26, 2021

கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்கள் மீண்டும் இணைய தாய் வீட்டின் கதவுகள் திறந்துள்ளன : தேர்தல்களில் எமது பலம் வெளிப்படுத்தப்படும் என்கிறது சுதந்திரக் கட்சி

(எம்.மனோசித்ரா)

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கத்திற்குள் காணப்பட்டாலும், கட்சி என்ற ரீதியில் அரசியலில் ஈடுபடுவதற்கான உரிமை காணப்படுகிறது. அந்த உரிமையை எவராலும் தடுக்க முடியாது. கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்கள் மீண்டும் இணைவதற்காக தாய் வீட்டின் கதவுகள் திறந்தே காணப்படுவதாக இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

அரசாங்கம் எம்மை கவனத்தில் கொள்ளவில்லை என்று கூறிக் கொண்டிருக்கத் தேவையில்லை. பிரதேச சபை, மாகாண சபை, பாராளுமன்ற மற்றும் ஜனாதிபதித் தேர்தல்களின் போதே எமது பலம் வெளிப்படுத்தப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க சுட்டிக்காட்டினார்.

அநுராதபுரத்தில் நடைபெற்ற கட்சியின் மறுசீரமைப்பு கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியைப் போன்று இலங்கையில் வெற்றியீட்டிய வேறு எந்த கட்சியும் கிடையாது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவராகவே அன்று யுத்தத்தை வெற்றி கொண்டார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை வெற்றி பெறச் செய்த போதும், பாராளுமன்ற தேர்தல் நடத்தப்பட்ட போதும் நாம் மைத்திரிபால சிறிசேன தலைமையில் வேறு குழுவாக ஆதரவளிக்கவில்லை. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியாகவே செயற்பட்டோம்.

நாம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடனும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடனும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளோம். இவற்றில் நாம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி என்ற பெயரிலேயே கையெழுத்திட்டுள்ளோம். மாறாக தனியொரு பெயரால் அல்ல.

எனவே நாம் அரசாங்கத்திற்குள் அங்கத்துவம் வகித்தாலும் சுதந்திர கட்சி என்ற ரீதியில் அரசியலில் ஈடுபடுவதற்கான உரிமை எமக்கிருக்கிறது. அந்த உரிமையை எவராலும் தடுக்க முடியாது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பலப்படுத்தும் வேலைத்திட்டத்தை எவராலும் தடுத்து நிறுத்தவும் முடியாது. கட்சியைப் பலப்படுத்துவதற்கு யாரிடமும் அனுமதி பெற வேண்டிய தேவையும் எமக்கு கிடையாது.

அரசாங்கம் எம்மை கவனத்தில் கொள்ளவில்லை என்று கூறிக் கொண்டிருக்கத் தேவையில்லை. பிரதேச சபை, மாகாண சபை, பாராளுமன்ற மற்றும் ஜனாதிபதித் தேர்தல்களின் போதே எமது பலம் வெளிப்படுத்தப்படும்.

சுதந்திர கட்சியின் உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைவடைந்திருக்கலாம். இதற்கான காரணம் கட்சிக்குள் ஏற்பட்ட சில முரண்பாடுகள், கருத்து வேறுபாடுகளாகும். எவ்வாறிருப்பினும் எம்மிலிருந்து பிரிந்து சென்ற அனைவருக்கும் அவர்களது தாய் வீடு சுதந்திர கட்சி என்பது நினைவிலிருக்கும்.

எனவே தற்போது சிறியதாக தெரியும் சுதந்திர கட்சியே உங்களது தாய் வீடு என்பதை மறந்து விட வேண்டாம். எனவே சில காரணங்களால் பிரிந்து சென்றவர்கள் மீண்டும் இணைவதற்கு தாய் வீட்டின் கதவுகள் திறந்தே உள்ளன என்றார்.

No comments:

Post a Comment