தமிழர்களின் பணத்தை பயங்கரவாதமாக காட்டி இலங்கையில் முதலீடுகள் செய்வதனை தடுக்காதீர்கள் : ஸ்ரீதரன் எம்.பி. - News View

About Us

About Us

Breaking

Saturday, November 13, 2021

தமிழர்களின் பணத்தை பயங்கரவாதமாக காட்டி இலங்கையில் முதலீடுகள் செய்வதனை தடுக்காதீர்கள் : ஸ்ரீதரன் எம்.பி.

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

தமிழர்களின் பணத்தை பயங்கரவாதமாக காட்டி இலங்கையில் தமிழர்கள் முதலீடுகள் செய்வதனை தடுக்காது அடுத்த வரவுசெலவுத் திட்டமேனும் மிகையானதாக வருவதற்கு தமிழர்களின் பொருளாதாரத்தை அரசு பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் சபையில் கோரிக்கை விடுத்தார்.

பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (13) இடம்பெற்ற 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கோரிக்கையொன்றை முன்வைத்தார்.

அவர் மேலும் கூறுகையில், உலகளாவிய ரீதியில் மிகப்பலம் வாய்ந்த அமைப்பாக தமிழ் புலம்பெயர் அமைப்பு உள்ளது. அவர்களிடம் நிதி பலம் உள்ளது. அவர்களினால் முதலீடு செய்யக்கூடிய வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளன. சபையில் கருத்து தெரிவித்த ஹர்ஷ டி சில்வா எம்.பி, பயங்கரவாதத்தினூடான நிதியைத்தான் அல்லிராஜா இந்த நாட்டுக்குள் கொண்டு வருவதாக கூறினார். இவ்வாறான ஒரு தவறான செய்தியை ஹர்ஷ டி சில்வா போன்ற படித்த எம்.பி. க்கள் கூறக்கூடாது.

அல்லிராஜா போன்றவர்கள் பெரும் முதலீட்டாளர்கள். அவர்கள் லைக்கா என்கின்ற தொலைபேசி வலையமைப்பை உலகத்தில் வைத்திருப்பவர்கள். பல்வேறு நிதியூட்டங்கள் ஊடாக உலகத்தில் பல தொழில் வருமானங்களை ஏற்படுத்திக் கொண்டவர்கள். அந்த வகையில் அவர்கள் இலங்கையில் பல முதலீடுகளை செய்கின்றனர். இலங்கை மக்களுக்கு இன, மொழி பாராது வீடுகளை அமைத்துக் கொடுத்துள்ளார்கள். கல்விக்கு உதவி செய்துள்ளார்கள். கொரோனா நிவாரண உதவிகளை வழங்கியுள்ளார்கள்.

அல்லிராஜா தமிழர் என்ற காரணத்திற்காக ஹர்ஷ டி சில்வா போன்ற கலாநிதிகள் தவறான கருத்துக்களை இந்த சபையில் கூறக்கூடாது. அல்லிராஜா மட்டுமல்ல ஐ.பி.சி. பாஸ்கரன் கூட லிபரா என்ற தொலைபேசி வலையமைப்பின் ஊடாக உலகத்தில் உழைத்த தன்னுடைய வருமானங்களை இலங்கையில் முதலீடு செய்துள்ளார். வடக்கு, கிழக்கில் பல முதலீடுகளை செய்து தமிழ் முதலீட்டாளர்களாக மாறியுள்ளார்கள். குகநாதன் தனது தொலைக்காட்சி சேவை ஊடாக வடக்கு, கிழக்கில் பல வேலை வாய்ப்புக்களை வழங்கியுள்ளார்.

ஆகவே இலங்கையில் தமிழர்கள் முதலீடுகள் செய்வதனை தடுக்காதீர்கள். தமிழர்களின் பணத்தை பயங்கரவாதமாக காட்ட முற்படாதீர்கள். இது ஆரோக்கியமான விடயமல்ல. இன்னும் பல தமிழர்கள் முதலீடு செய்யக் காத்திருக்கிறார்கள்.

ஆனையிறவு குறிஞ்சாத்தீவு உப்பளத்தை தங்களிடம் தருமாறும் தாங்கள் முதலீடு செய்து அதன் மூலம் வடக்கிலுள்ளவர்களுக்கு வேலை வாய்ப்புக்களை உருவாக்குகின்றோம் என யாழ் வணிகர் கழகம் கோரியது. ஆனால் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் மூலமும் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் ஊடாகவும் அந்த உரிமம் மன்னாரிலுள்ள மாதோட்டம் உப்பளத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. அதனை தென்பகுதியை சேர்ந்தவர்தான் உரிமையாக எடுத்துக் கொள்ளவுள்ளார்.

வடக்கிலுள்ள தமிழர்கள் அதனை கேட்கிறார்கள். ஆனால் அதனை கொடுப்பதற்கு எங்களுடைய அதிகாரிகள்தான் தடையாக இருக்கின்றார்களா அல்லது தென்பகுதி அரச அதிகாரிகள்தான் தடையாக இருக்கின்றார்களா? அல்லது அமைச்சுதான் தடையாக இருக்கின்றதா? என்பதனை பிரதமர் கவனத்தில் எடுத்து குறிஞ்சாத்தீவு உப்பளத்தை யாழ் வணிகர் கழகத்திடம் கையளிக்க நடவடிக்கை எடுத்தால் அது பெரும் உதவியாக இருக்கும்.

இந்த நாட்டின் வளர்ச்சி, அபிவிருத்தி இன ஒற்றுமையில்தான் தங்கியுள்ளது. இனங்களுக்கிடையிலான புரிதலில் தான் தங்கியுள்ளது. தமிழர்களை அனைத்து செல்கின்றபோது நாட்டில் மாற்றத்தை, முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும்.

வரவு செலவுத் திட்டங்கள் பற்றாக்குறையில் போகும் நிலைமை வராது. இங்கு யுத்தம் நடைபெற்றது. யுத்தத்தை சிங்கள தலைவர்கள் வழி நடத்தினார்கள். இவர்களின் யுத்த வழிநடத்தல்கள்தான் இந்த நாட்டிலே மேலோங்கியிருந்தது. இந்த அடிப்படையில்தான் இந்த மண்ணில் தமிழர்கள் அழிக்கப்பட்டார்கள்.

இந்நிலையில்தான் இன்று தமிழர்கள் அரசியல் தீர்வொன்றுக்காக ஏங்குகிறார்கள். ஆகவே இந்த நாட்டிலே மொழி அடிப்படையிலான அதாவது தமிழ், சிங்கள மொழி அடிப்படையிலான சமஸ்டி தீர்வை புதிய அரசியலமைப்பின் மூலம் முன்வைக்க வேண்டும். இதன் மூலம் அடுத்த வரவு செலவுத் திட்டம் மிகையானதாக வருவதற்கு தமிழர்களின் பொருளாதாரத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment