இலங்கைப் பொலிஸாருக்குப் பயிற்சிகளை வழங்கும் ஒப்பந்தத்தை மீளப் புதுப்பிக்கப்போவதில்லை - இலங்கையிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திற்கு அறிவித்தது ஸ்கொட்லாந்து பொலிஸ் - News View

About Us

About Us

Breaking

Thursday, November 25, 2021

இலங்கைப் பொலிஸாருக்குப் பயிற்சிகளை வழங்கும் ஒப்பந்தத்தை மீளப் புதுப்பிக்கப்போவதில்லை - இலங்கையிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திற்கு அறிவித்தது ஸ்கொட்லாந்து பொலிஸ்

(நா.தனுஜா)

இலங்கைப் பொலிஸாருக்குப் பயிற்சிகளை வழங்குவதற்கான ஒப்பந்தம் எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிவிற்குவரவுள்ள நிலையில், இலங்கையின் கரிசனைக்குரிய மனித உரிமைகள் நிலைவரத்தின் காரணமாக அவ்வொப்பந்தத்தை மீளப் புதுப்பிக்கப்போவதில்லை என்று ஸ்கொட்லாந்து பொலிஸ் இலங்கையிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திற்கு அறிவித்துள்ளது.

ஸ்கொட்லாந்து பொலிஸாரினால் இலங்கைப் பொலிஸாருக்குப் வழங்கப்பட்டு வரும் பயற்சிகள் தொடர்பில் தற்போது நடைமுறையிலுள்ள ஒப்பந்தம் எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிவிற்குவரவுள்ள நிலையில், அவ்வொப்பந்தம் மீளப் புதுப்பிக்கப்படக் கூடாது என்று ஸ்கொட்லாந்து மற்றும் பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர்களாலும் சர்வதேச சிவில் சமூக மற்றும் மனித உரிமைகள் அமைப்புக்களாலும் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டுவந்தது.

இவ்வாறானதொரு பின்னணியிலேயே ஸ்கொட்லாந்து பொலிஸின் தலைமை கான்ஸ்டபிள் லெய்ன் லிவிங்ஸ்றன் மேற்கண்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது, எம்மால் இலங்கைப் பொலிஸாருக்கு வழங்கப்பட்டு வந்த பயிற்சி கடந்த 2020 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இடைநிறுத்தப்பட்டது. இலங்கையில் போர் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னர் கடந்த 2010 ஆம் ஆண்டில் அந்நாட்டுப் பொலிஸாருக்கு பயிற்சிகளை வழங்குவதற்காக எமது பொலிஸார் அங்கு சென்றனர்.

இந்நிலையில் இலங்கையின் தற்போதைய பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகள் நிலைவரத்தை உரியவாறு பிரதிபலிக்கக் கூடியவாறு பாதுகாப்பு மற்றும் நீதித்துறைசார் வெளிநாட்டு உதவி தொடர்பில் மதிப்பீடொன்றை மேற்கொள்ள வேண்டியிருந்தமையால் 2020 ஆம் ஆண்டு தொடக்கத்தின் பின்னர் ஸ்கொட்லாந்து பொலிஸார் பயிற்சி வழங்கலுக்காக இலங்கைக்குச் செல்லவில்லை.

இலங்கைக்கான பாதுகாப்பு மற்றும் நீதித்துறைசார் வெளிநாட்டு உதவி தொடர்பான மதிப்பீட்டுப் பணிகள் இன்னமும் பூர்த்திசெய்யப்படவில்லை. ஆகையினால் ஒப்பந்தத்தின்படி ஏற்கனவே பயிற்சி வழங்குவதற்கு இணங்கிய 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையான காலப்பகுதியில் இலங்கைப் பொலிஸாருக்குப் பயிற்சி வழங்குவதற்காக ஸ்கொட்லாந்து பொலிஸார் இலங்கைக்கு அனுப்பப்படமாட்டார்கள்.

அதற்கு மேலதிகமாக இலங்கைப் பொலிஸாருக்குப் பயிற்சி வழங்குவதற்கான ஒப்பந்தத்தைப் புதுப்பிக்குமாறு கோரப்போவதில்லை என்று இலங்கையிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திற்கும் கடிதம் மூலம் அறிவித்திருக்கின்றோம்.

உலகளாவிய ரீதியில் பொலிஸ் சேவையை மேம்படுத்துவதற்கான ஒத்துழைப்பை வழங்குவதற்குரிய கடப்பாட்டை நாங்கள் கொண்டிருக்கின்றோம். அதன் மூலம் மனித உரிமைகளை வலுப்படுத்துவதுடன் பொலிஸ்சேவையின் கௌரவத்தையும் நியாயாதிக்கத்தையும் மேம்படுத்த முடியும்.

ஸ்கொட்லாந்திலும் சர்வதேச ரீதியிலும் நாங்கள் வழங்குகின்ற அனைத்து சேவைகளின்போதும் அதனை மனதிலிருத்திச் செயற்படுவோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைப்பொலிஸாருக்குப் பயிற்சிகளை வழங்கும் ஸ்கொட்லாந்து பொலிஸாரின் வகிபாகமானது இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களை அரசியல் ரீதியில் மூடிமறைப்பதற்கான திரையாக அமைகின்றது.

ஆகவே இப்பயிற்சி வழங்கல் தொடர்பில் தற்போது நடைமுறையிலுள்ள ஒப்பந்தம் எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முடிவிற்கு வரவுள்ள நிலையில், அவ்வொப்பந்தத்தை மீளப் புதுப்பிக்காமல் முடிவிற்குக் கொண்டுவருவதற்கு ஏற்றவகையிலான மதிப்பீடுகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி பிரித்தானிய மற்றும் ஸ்கொட்லாந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் 16 பேர் இணைந்து இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டனுக்கு இம்மாத ஆரம்பத்தில் கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment