மனிதம் மறந்த கதைகள் - News View

About Us

About Us

Breaking

Friday, November 5, 2021

மனிதம் மறந்த கதைகள்

காலம் காலமாக பின்பற்றப்பட்டு வந்த பழக்க வழக்கங்கள் எல்லாம் கரைந்து போய்விட, கலாச்சாரம் என்ற பெயரில் இன்று கொரோனா பெருந்தொற்றை வாங்கிக்கொண்டு குறுகிய வாழ்க்கை வட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். முன்னோர்கள் அன்று சொன்னவை அனைத்தும் இன்றைக்கு கொரோனாவினால் மீண்டும் உயிர் பெற்று விட்டது.

பூமி உருவான ஆண்டு தொடக்கம் இன்று வரையிலும் எத்தனையோ ஜீவராசிகளை அது தாங்கி நிற்கின்றது. வன ஜீவராசிகள், இயற்கைகள், நுண்ணுயிர்கள், மனித மூலம் என அனைத்து உயிர்களும் பரிணமிக்க கூடிய இடமாக பிரகாசிக்கின்றது.

நாகரீகம் வளர வளர மனித வாழ்வின் வளர்ச்சியோடு தொடங்கிய தொழில்நுட்ப உலகத்தில் மனித குலம் முன்னேறி கொண்டிருக்கின்ற காலம் இது. அறிவியல் வளர வளர ஆரம்ப பழக்கவழக்கங்கள் அனைத்தும் அடியோடு புதைக்கப்பட்டு விட்டன.

வீட்டு திண்ணையில் இருந்து நம் முன்னோர்கள் சொல்லி வைத்தவை அனைத்தும் இன்றைக்கு ஒவ்வொரு வீட்டிலும் பழக்கத்திற்கு வந்து விட்டது. நம் முன்னோர்கள் ஒன்றும் அர்த்தமின்றி கூறிவிட்டுச் செல்லவில்லை. ஒவ்வொரு பழக்க வழக்கங்களும் ஒவ்வொருவிதமான போதனைகளை போதித்து விட்டு சென்றுள்ளது.

முன்னைய காலங்களில் பெண்கள் அதிகாலை எழுந்து, வாசல் பெருக்கி, சாணம் தெளித்து, அரிசி மாவில் கோலமிட்டு, நடுவில் சாணத்தில் பிள்ளையார் பிடித்தும் வைப்பார்கள். காரணம் வீட்டு வாசலில் தெளிக்கப்படும் சாணம் வீட்டுக்குள் கிருமிகளை அண்டவிடாமல் கிருமிநாசினியாக செயல்படுகிறது. ஆனால் தற்காலத்தில் மாடி வீடுகளும் அடுக்குமாடி தொடர்களும் பல்கிப் பெருகிவிட்ட நிலையில், கோல அலங்காரத்திற்கும், சாண பிள்ளையாருக்கும் வேலையில்லாமல் போய்விட்டது. தன் குழந்தைகளையே பராமரிப்பதற்கு நேரமில்லாமல் விடுதிகளிலும் பக்கத்து வீட்டுக்காரர்கள் இடமும் விட்டுச் செல்லும் அளவிற்கு வேலைப்பளு நிறைந்த இவ்வுலகில் கோலம் போட யாருக்குத்தான் நேரம் இருக்க போகிறது.

முன்னைய காலப்பகுதிகளில் குழந்தை பிறந்தவுடனேயே வெளியாட்கள் எவரையும் வீட்டுக்குள் வருவதை அனுமதிப்பதில்லை. அதேசமயம் பத்து பதினைந்து நாட்கள் குழந்தை பிறந்த வீட்டிற்கு சென்றால் அது தீட்டு என முன்னோர்கள் கூறினார்கள். காரணம் உண்மையில் பிறந்த குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியானது குறைவாக இருப்பதால், வெளியில் இருந்து நோய்களுடன் வருபவர்களால் குழந்தைக்கு இலகுவாக நோய்த்தொற்றிவிடும் என்பதால் அது தீட்டு என நம் முன்னோர்கள் கூறி வைத்துள்ளனர்.

இப்படி எத்தனையோ விடயங்களில் நோய் தொற்றினை தடுப்பதற்காக சுமூகமாக பல்வேறு விடயங்களை சொல்லி சென்று உள்ளனர். குறிப்பாக முன்னைய காலங்களில் வீட்டை விட்டு வெளியில் சென்று வந்த பின்னர் செருப்பை வாசலிலேயே கழட்டிவிட்டுஇ கை கால்களை நன்றாக கழுவிய பின்னரே வீட்டினுள் நுழைவர். வழியில் கண்ட கண்ட இடங்களில் எச்சில் துப்புவது மனிதனுக்கு உரிய ஒரு பழக்கமாகும். எனவே வெளியில் செல்லும்போது செருப்பின் வழியாக கிருமிகள் பரவுவதால் செருப்பை வெளியிலேயே விடுவது, எச்சில் நரவை மூலம் கிருமிகள் பரவுவதை தடுக்க முடிந்தது.

ஆனால் நாகரிகம் வளர ஆரம்பித்தவுடன் செருப்புகள் வீட்டினுள்ளே செக்குகளில் அடுக்கப்பட தொடங்கிய நாள் முதலே நோய்களும் பரவ தொடங்கிவிட்டன. அத்தோடு ஆரம்ப காலங்களில் வீட்டுக்கு வெளியில் கொல்லைப்புறத்தில் வைக்கப்பட்ட கழிவறையும், குளியலறையும் மொர்டன் என்றபெயரில் வீட்டுக்குள் கட்டப்பட கண்ணுக்கு தெரியாத எத்தனையோ கிருமிகளின் வாழ்விடமாக வீட்டுகள் மாறத் தொடங்கின.

அதுமட்டுமன்றி வாரத்திற்கு ஒரு முறையேனும் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என முன்னோர்கள் வழி வந்த மரபுகளில் காணப்பட்டது. குறிப்பாக சனிக்கிழமைகளில் எண்ணை தேய்த்து குளிப்பது சாலச் சிறந்தது என்பர். இவ்வாறு செய்வதால் எண்ணைக்குளியல் உடற் சூட்டினைத் தணித்து சளிக்கிருமிகளை போக்குவதோடு, நுரையீரலையும் தூய்மையாக வைக்கின்றது.

ஆனால் தற்காலத்தில் அதனை யாரும் பின்பற்றுவதும் கிடையாது. எம் முன்னோர்கள் கூறிய அனைத்து விடயங்களின் பின்னும் நாம் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த அறிவியல்கள் ஒளிந்து கொண்டிருக்கின்றன.

கொரோனா தொற்று வந்த பின்னரே, செய்கின்ற செயல்களான வெளியில் சென்று வந்த பின்னர் கை கால் கழுவுதல், உணவில் மஞ்சள் சேர்த்தல், வீட்டில் மஞ்சள் நீர் தெளித்தல், சாம்பிராணி புகை பிடித்தல், மூலிகைகள் சேர்த்து ஆவி பிடித்தல், என அத்தனை அம்சங்களும் ஒவ்வொரு செயல்களுக்கு பின்னாலும் உள்ள அறிவியலை எம் முன்னோர்கள் அன்றே கணித்து விட்டனர் என்பது புலப்படுகின்றது.

நோய்கள் அண்டாத பாதுகாப்பான வாழ்வியல் முறையில் வாழ நம் முன்னோர்கள் நமக்காக விட்டு சென்ற மரபுகளையும் பழக்க வழக்கங்களையும் இன்றைக்கு மேலை நாட்டு நாகரீகம் என்ற பெயரில் சிரித்து விட்டு அதற்கான விலையை இன்று நாம் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்.

ஆயிரம் ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே சொல்லி வைத்த பழக்க வழக்கங்களை மறந்து போன மனிதம் இன்று வரை உணரவில்லை நாம் தேடிக்கொண்டிருக்கும் அறிவியல் அதனுள் புதைந்து கிடக்கின்றது என்பதை.

க.மதனராஜ்
ஊடக கற்கைகள் துறை,
யாழ்ப்பாண பல்கலைக்கழகம்.

No comments:

Post a Comment