எம்மை பயமுறுத்துவதன் மூலம் எமது போராட்டத்தை நிறுத்த முடியாது : பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த சட்டமா அதிபரும், ஜனாதிபதியும் தயங்குவது ஏன்? - அருட் தந்தை சிறில் காமினி - News View

Breaking

Tuesday, November 23, 2021

எம்மை பயமுறுத்துவதன் மூலம் எமது போராட்டத்தை நிறுத்த முடியாது : பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த சட்டமா அதிபரும், ஜனாதிபதியும் தயங்குவது ஏன்? - அருட் தந்தை சிறில் காமினி

(எம்.எம்.சில்வெஸ்டர்)

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதலின் உண்மைத் தன்மையை கண்டறியும் வரை, பலியான மக்களுக்கு நீதி கிடைக்கும் வரை போராட்டத்தை தொடர்வோம். எம்மை பயமுறுத்துவதன் மூலமோ எம்மீது அழுத்தம் பிரயோகிப்பதன் மூலமோ எமது போராட்டத்தை நிறுத்த முடியாது என அருட் தந்தை சிறில் காமினி அடிகள் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில் குறிப்பிட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தினால் உண்மையை கண்டறிய முடியும். அதில் குறிப்பிட்டுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு சட்டமா அதிபரும் ஜனாதிபதியும் தயங்குவது ஏன் என அருட் தந்தை கேள்வி எழுப்பினார்.

'வெபினார்' (இணையத்தள சந்திப்பு) இல் நடத்தப்பட்ட கலந்துரையாடலொன்றின்போது அரச புலனாய்வு திணைக்கள பணிப்பாளர் சுரேஷ் சாலே குறித்து அருட் தந்தை சிறில் காமினி அடிகளால் தெரிவிக்கப்பட்ட கருத்து தொடர்பில் வாக்கு மூலம் அளிப்பதற்காக அருட் தந்தை சிறில் காமினி அடிகளிடம் நேற்றையதினம் 4 மணித்தியாலங்கள் வாக்கு மூலம் பெறப்பட்டது. மூன்றாவது தினமாகவும் நேற்றையதினம் காலை 9.45 மணிக்கு சி.ஐ.டிக்கு சென்றிருந்த அருட் தந்தை சிறில் காமினி, பிற்பகல் 1.35 மணியளவில் வெளியே வந்தார்.

இதன்போது அருட் தந்தை ஊடகங்களுக்கு கூறுகையில், என்னுடைய வாக்கு மூலத்தை எடுப்பதை சி.ஐ.டி.யினர் இன்று (நேற்று) நிறைவு செய்தனர். எனக்கு தோன்றும் விடயம் என்னவெனில், அவர்களின் அநேகமான கேள்விகள் எனக்கு புரிந்து கொள்ள முடியாமல் இருந்தது.

சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக நடத்தப்பட்ட கலந்துரையாடல் குறித்து சமூக ஊடகங்கள் வாயிலாக சிலர் (comments - கமண்ட்ஸ்) கருத்து தெரிவித்திருந்தனர். அந்த கருத்து தொடர்பில் ஓர் விளக்கமில்லாதவொரு கேள்வியை சி.ஐ. டியினர் என்னிடம் முன்வைத்தனர்.

அவர்கள் போடும் கருத்துக்களுக்கு நான் பொறுப்புக்கூற முடியாது. அது அவர்களின் கருத்துச் சுதந்திரம். மக்கள் தாங்கள் நினைப்பதை பல்வேறு விதமாக தெரிவிக்கின்றனர். அது தொடர்பில் நாம் எவருமே பொறுப்புக்கூற முடியாது. இது போன்ற கேள்விகள் நேரத்தை வீணடிப்பவையாகும்.

எனக்கு கூற வேண்டிய விடயம் என்னவெனில், இங்கு நடத்தப்படும் செயற்பாடுகள் நடத்தப்பட வேண்டியவை அல்ல. நடத்தப்பட வேண்டியது என்னவெனில், உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பான விடயங்களாகும். இதன் பின்னணியில் யார் உள்ளனர்? இதன் உண்மைத் தன்மை என்ன? இதற்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் யார்? என்பதையே அவர்கள் தேடிப்பார்க்க வேண்டும்.

ஆணைக்குழு அறிக்கை மற்றும் பாராளுமன்ற குழு அறிக்கை ஆகியவற்றைக் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்த விடயங்கள் குறித்து மேலதிகமாக விசாரிக்கப்பட வேண்டும் என்பது குறித்து ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைத்தான் செய்ய வேண்டும்.

அதில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை சட்டமா அதிபர் நடைமுறைப்படுத்த வேண்டும். அப்படி செய்தால் இதன் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ள முடியும். ஆனாலும் அதனை நிறைவேற்றாமல், நியாயத்தை பெற்றத் தரக்கோரும் நபர்களையும், அமைப்புக்களையும் இலக்காகக் கொண்டு அவர்க‍ளை அழுத்தத்திற்கு உள்ளாக்குவது முறையாகாது. இவ்வாறு நடந்துகொண்டால் உண்மைத் தன்மையை கண்டறிய முடியாது போகும்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பாக உண்மைகளை கண்டறிவதா? அல்லது அதனை மூடி மறைப்பதற்கான தேவையா? சட்டமா அதிபர் மற்றும் அரசாங்கத்துக்கும் உள்ளது என்ற கேள்வி எழுகிறது.

ஆகையால், நான் கடைசியாக அங்கு குறிப்பிட்டிருந்த விடயம் என்னவெனில், நாங்கள், ஜனாதிபதிக்கும் கடிதமொன்றை அனுப்பியிருந்தோம். அந்த கடிதத்தில், ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றை நடைமுறைப்படுத்துமாறு குறிப்பிட்டிருந்தோம்.

மேலும், பாராளுமன்றத்தில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் ஆராயுமாறும், முன்னாள் சட்டமா அதிபர் தப்புள டி லிவேராவினால் குறிப்பிடப்பட்டிருந்த பாரிய சூழ்ச்சி குறித்தும் விசாரணை நடத்துமாறும் அந்த கடிதத்தில் கூறியிருந்தோம். இந்த விசாரணைகள் நடத்தப்பட வேண்டியவை. இவற்றை செயற்படுத்தாது, தேவையில்லாதவற்றை செயற்படுத்துகின்றனர்.

நாம் மீண்டும் மீண்டும் கூறுகிறோம், உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையிலுள்ள பரிந்துரைகளை நடத்துமாறு கேட்டுக் கொள்கிறோம். அதில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்கள் மீது விசாரணை நடத்துமாறும், ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறும் கூறப்பட்டுள்ளது.

இந்த பரிந்துரைகளை அரசாங்கம் நடைமுறைப்படுத்தாது இருப்பது தொடர்பில் எமக்கு பிரச்சினை உள்ளது. இந்த அரசாங்கத்துக்கும், ஜனாதிபதிக்கும் இதில் தொடர்பு இல்லை என்றால் எதற்காக அஞ்ச வேண்டும்.

ஆகவே, அரசாங்கத்தினதும், ஜனாதிபதியினதும் செயற்பாடுகள் குறித்து எமக்கு சந்தேகம் எழுகிறது. இது எவருக்கும் ஏற்படும் சந்தேகமாகும். இந்த சந்தேகம் எமக்கு ஏற்படும்போது நாம் அதனை தெரிவிக்கிறோம். அது எமது உரிமையாகும். இதனை யாராலும் தடுக்க முடியாது.

அழுத்தம் கொடுப்பதனாலும், பயமுறுத்துவதாலும் இதனை நிறுத்த முடியும் என எவரேனும் நினைத்தால் அது வேடிக்கைக்குரிய விடயமாகும்.

உண்மைத் தன்மையை கண்டறியும் வரை, நீதி கிடைக்கும் வரை இந்த போராட்டத்தை தொடர்வோம். இதனை நாம் நிறுத்த மாட்டோம். எம்மை பயமுறுத்தியோ, அழுத்தம் பிரயோகிப்பதன் மூலமோ நிறுத்த முடியாது.

இந்த தாக்குதலுக்கு பின்னால் அரசியல் சூழ்ச்சிய இடம்பெறவில்லை என தீவிரவாத தாக்குதல் குறித்த சர்வதேச நிபுணரான ரொஹான் குணரத்ன கூறியுள்ளார். இது குறித்து உங்களின் நிலைப்பாடு என்ன என ஊடகவியலாளர் ஒருவர் கேட்டதற்கு,

"இதனை கூறுவது ரொஹான் குணரத்ன அல்லவா. இந்த தாக்குதல் சம்பவம் குறித்த அறிக்கைகள் அனைத்தும் முன்னாள் சட்டமா அதிபரிடம் உள்ளன. எங்களுக்கு கொடுக்கப்படாத 21 அறிக்கைகளும் அவரிடமே உள்ளன. ரொஹான் குணரத்னவை விடவும் அவர் நன்கு அறிவார். நாம் ரொஹன் குணரத்னவை அல்ல தப்புல டி லிவேராவை நம்புகிறோம். ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை, பாராளுமன்ற குழு அறிக்கை மற்றும் பாராளுமன்றத்தில் கூறப்பட்ட விடயங்களையே நாம் நம்புகிறோம் " என பதிலளித்தார்.

No comments:

Post a Comment