இளையோர் சர்வதேச ஒருநாள் ‍போட்டியில் இங்கிலாந்திடம் தோல்வியைத் தழுவியது இலங்கை - News View

About Us

About Us

Breaking

Tuesday, November 30, 2021

இளையோர் சர்வதேச ஒருநாள் ‍போட்டியில் இங்கிலாந்திடம் தோல்வியைத் தழுவியது இலங்கை

(எம்.எம்.சில்வெஸ்டர்)

19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகள் மோதிக்கொண்ட முதலாவது இளையோர் சர்வதேச ஒருநாள் ‍போட்டியில் இலங்கை அணி 25 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.

இலங்கை அணித் தலைவர், துனித் வெல்லாலகேவின் சகல துறை ஆட்டம் மற்றும் ரனூத சோமரத்ன நிதானமான துடுப்பாட்டம் ஆகியன வீணானது.

இவ்விரண்டு அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட இளையோர் சர்வதேச ஒருநாள் ‍போட்டித் தொடர் கொழும்பு எஸ்.எஸ்.சீ. மைதானத்தில் நேற்று காலை ஆரம்பமானது. நாணயச் சுழற்சியில் வெற்றியீட்டிய இலங்கை அணித் தலைவர் துனித் வெல்லாலகே முதல் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை இங்கிலாந்துக்கு வழங்கியது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 49.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 242 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பில் வில்லியம் லக்ஸ்டன் (44), ஜேம்ஸ் ரியு (40), ஜேம்ஸ் சேல்ஸ் (28), ஜோர்ஜ் தோமஸ் (27) ஆகியோர் கைக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் துனித் வெல்லாலகே 5 விக்கெட்டுக்களையும், மல்ஷ தருப்பதி, ரவீன் டி சில்வா, மதீஷ பத்திரண, டிரவீன் மெத்தியூ ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

243 ஓட்டங்களை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 473 ஓவர்களில் 217 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து 25 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. ஒரு கட்டத்தில் 90 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறிய இலங்கை அணிக்கு, துனித் வெல்லாலகே மற்றும் ரனூ சோமரத்ன இருவரும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்துனர்.

நம்பிக்கையளிக்கும் விதத்தில் இந்த ஜோடி தமக்கிடையில் 102 ஓட்டங்களை பகிர்ந்திருந்தபோது, துனித் வெல்லாலகே ஆட்டமிழந்தார். இவர் 68 பந்துகளில் 6 பவுண்டரிகள் ,ஒரு சிக்ஸ்ர் அடங்கலாக 68 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இவரின் ஆட்டமிழப்பை அடுத்து, ரனூதவும் 57 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்கவே இலங்கை ‍ அணியின் வெற்றியீட்டும் கனவு கலைந்தது. துடுப்பாட்டத்தில் இவர்கள் இருவரைத் தவிர ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான, சமிந்து விக்கிரமசிங்க 34 ஓட்டங்களையும், அஞ்சுல பண்டார 20 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் இங்கிலாந்து சார்பில் ஜோஷுவா பொய்டன் 3 விக்கெட்டுக்களையும், டொம் ப்ரெஸ்ட், ரெஹான் அஹமட், ஜோஷ் பேக்கர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தி இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு பங்களித்தனர்.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து அணி 1க்கு 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

No comments:

Post a Comment