(எம்.மனோசித்ரா)
நாட்டில் அந்நிய செலாவணி இருப்பு வீழ்ச்சியடைந்துள்ளமையால் பாரிய நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளமை உண்மையாகும். அதற்காக எரிபொருள் விநியோகத்திற்கான ஏகாதிபத்திய உரிமத்தை இந்தியாவிற்கு வழங்க அரசாங்கம் தீர்மானிக்கவில்லை என்று அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு செவ்வாய்கிழமை (30) இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டில் அந்நிய செலாவணி இருப்பு வீழ்ச்சியடைந்துள்ளமையால் பாரிய நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளமை ஏற்றுக் கொள்கின்றோம். அதற்காக எரிபொருள் விநியோகத்திற்கான ஏகாதிபத்திய உரிமத்தை இந்தியாவிற்கு வழங்க அரசாங்கம் தீர்மானிக்கவில்லை. அதற்கான எந்தவொரு கலந்துரையாடல்களும் இடம்பெறவுமில்லை.
கொவிட் தொற்றின் காரணமாக உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் தாக்கமே இலங்கையிலும் ஏற்பட்டுள்ளது.
அத்தோடு இரண்டு வருடங்களுக்கு முன்னர் காணப்பட்டதை விட மசகு எண்ணெணெய்யின் விலை உலக சந்தையில் இரு மடங்காக அதிகரித்துள்ளது. அதனால் இறக்குமதி செலவும் இரு மடங்காக அதிகரித்துள்ளது. எவ்வாறிருப்பினும் நாட்டில் எரிபொருள் விநியோகத்தில் எவ்வித தடையும் ஏற்படவில்லை.
மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்கள் மற்றும் எரிபொருள் இறக்குமதிகளுக்கு மாத்திரமே அரசாங்கம் முன்னுரிமையளிக்கும். அத்தோடு நாட்டில் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் மக்களின் வாழ்வாதாரத்தை வழமையாகக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 6 மாதங்களுக்குள் உலக பொருளாதாரமும் வழமைக்கு திரும்பி இலங்கையின் பொருளாதாரமும் வழமைக்கு திரும்பும் என்று எதிர்பார்க்கின்றோம் என்றார்.
No comments:
Post a Comment