நான்கு நாடுகள் பங்கேற்கும் பிரதமர் கிண்ண சர்வதேச அழைப்பு கால்பந்தாட்ட தொடர் இன்று கொழும்பில் ஆரம்பம் - News View

About Us

About Us

Breaking

Sunday, November 7, 2021

நான்கு நாடுகள் பங்கேற்கும் பிரதமர் கிண்ண சர்வதேச அழைப்பு கால்பந்தாட்ட தொடர் இன்று கொழும்பில் ஆரம்பம்

இலங்கை, பங்களாதேஷ், மாலைதீவுகள் மற்றும் சீசெல்ஸ் ஆகிய நாடுகள் பங்கேற்கும் கால்பந்து தொடர் இன்று 8ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை இலங்கையில் இடம்பெறுகிறது.

பங்களாதேஷ், மாலைதீவுகள், சிஷெல்ஸ், இலங்கை ஆகிய நான்கு நாடுகள் பங்குபற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கிண்ண சர்வதேச அழைப்பு கால்பந்தாட்டப் போட்டி கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் இன்று திங்கட்கிழமை (8) இரவு 9.00 மணிக்கு நடைபெறும் ஆரம்ப விழாவுடன் தொடங்கவுள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைய இலங்கை கால்பந்தாட்ட சம்மேளத்தினால் இப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மிக நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த சர்வதேச அழைப்பு கால்பந்தாட்டப் போட்டி இலங்கையில் மீண்டும் கால்பந்தாட்டம் உயரிய நிலையை அடைவதற்கான ஒரு படிக்கல்லாக அமையும் என இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் ஜஸ்வர் உமர் தெரிவித்தார்.

பங்களாதேஷ் அணிக்கும் சிஷெல்ஸ் அணிக்கும் இடையில் ஆரம்பப் போட்டி நடைபெறும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டிருந்த போதிலும் சிரற்ற காலைநிலை காரணமாக அப் போட்டியை ஒரு தினத்தால் பிற்போட நேரிட்டதாக அவர் மேலும் கூறினார்.

அதேவேளை இலங்கைக்கும் மாலைதீவுகளுக்கும் இடையிலான போட்டி ஆரம்ப வைபவத்தைத் தொடர்ந்து மின்னொளியில் இன்று இரவு நடைபெறும்.

மாலைதீவுகளில் கடந்த மாதம் நடைபெற்ற தெற்காசிய கால்பந்தாட்ட சம்மேளன சம்பியன்ஷிப் போட்டியில் மாலைதீவுகளுக்கு பலத்த சவாலாக விளங்கி 0 - 1 என்ற கோல் அடிப்படையில் தோல்வி அடைந்த இலங்கை, தனது சொந்த மண்ணில் முதல் தடவையாக மாலைதீவுகளை வெற்றி கொள்ள முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த சுற்றுப் போட்டியில் இலங்கை அணி மிகுந்த நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புகளுடனும் பங்குபற்றும் என தலைமைப் பயிற்றுநர் அமிர் அலாஜிக் தெரிவித்தார்.

'மாலைதீவுகளில் நடைபெற்ற சாவ் சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெறாத போதிலும் அதன் திறமையில் முன்னேற்றம் காணப்பட்டது.

அந்த சுற்றுப் போட்டியில் கற்றுக் கொண்ட படிப்பினைகளைக் கொண்டு திறமையாக விளையாட முயற்சிப்போம். ஆனால், நான் எப்போதும் கூறுவதுபோல் நீண்ட பயணத்தைத் தொடர வேண்டியுள்ளது' என்றார் அலாஜிக்.

கத்தாரில் நடைபெற்ற 23 வயதின் கீழ் ஆசிய கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் பங்குபற்றிய இலங்கை அணியில் இடம்பெற்ற சில வீரர்கள் தேசிய அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

ஆனால், அவர்கள், சர்வதேச மட்டத்தில் விளையாடும் அளவுக்கு போதிய அனுபவத்தைப் பெறவில்லை. எனவே இந்த சுற்றுப் போட்டியில் கிடைக்கும் வாய்ப்பை அவர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்வார்கள் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை, இப் போட்டியை முன்னிட்டு சிறிது காலமே பயிற்சியில் ஈடுபட்டதாகக் குறிப்பிட்ட அணித் தலைவர் சுஜான் பெரேரா, உலகக் கிண்ண தகுதிகாண் சுற்று, சாவ் சம்பியன்ஷிப் ஆகியவற்றில் பெற்ற அனுபவங்களைக் கொண்டு முழுத் திறமையுடன் விளையாடி வெற்றிபெற முயற்சிப்பதாகத் தெரிவித்தார்.

கொவிட் தடுப்பூசிகளை முழுமையாக ஏற்றிக் கொண்ட இரசிகர்கள் இப் போட்டிகளைக் கண்டுகளிக்க அனுமதிக்கப்படுவர். ஆனால் அரங்கில் 50 வீத பார்வையாளர்களே அனுமதிக்கப்படுவார்கள் என இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் அறிவித்துள்ளது.

லீக் அடிப்படையில் நடத்தப்படும் இந்த சுற்றுப் போட்டியில் சம்பயினாகும் அணிக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கிண்ணத்துடன் 30,000 டொலர் பணப்பரிசு வழங்கப்படும்.

திங்கட்கிழமை இரவு நடைபெறவுள்ள ஆரம்ப விழா வைபவத்தின்போது மாலைதீவுகள் ஜனாதிபதி இப்ராஹிம் மொஹம்மத் சோலிஹ், விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் உட்பட விசேட பிரமுககர்கள் பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

லீக் முறையில் இடம்பெறவுள்ள இந்த தொடரில் நான்கு அணிகளும் எதிரணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் போட்டிகள் இன்று 8ஆம், 11ஆம் மற்றும் 14ஆம் திகதிகளில் இடம்பெறும். குறித்த திகங்களில் மாலை 4 மணிக்கு முதல் போட்டியும் இரவு 9 மணிக்கு இரண்டாவது போட்டியும் இடம்பெறும்.

லீக் சுற்று நிறைவில் முதல் இரண்டு இடங்களையும் பெறும் அணிகள் இம்மாதம் 17ஆம் திகதி இடம்பெறவுள்ள இறுதிப் போட்டியில் மோதுவதற்குத் தகுதி பெறும். இறுதிப் போட்டி 17ஆம் திகதி இரவு 7 மணிக்கு ஆரம்பமாகும்.

அன்றைய தினம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு வெற்றிக் கிண்ணத்தை வழங்குவார். சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் ஜியோவன்னி இன்பன்டீனோ விசேட அதிதியாக கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளார்.

தொடரில் பங்கேற்கும் மாலைதீவுகள் அணி பிபாவின் அணிகளுக்கான தரவரிசையில் 156ஆவது இடத்திலும், பங்களாதேஷ் அணி 187ஆவது இடத்திலும், சீசெல்ஸ் அணி 199ஆவது இடத்திலும் இருக்கும் அதேவேளை இலங்கை அணி 204ஆவது இடத்தில் உள்ளது.

இந்தத் தொடரில் இடம்பெறும் போட்டிகளில் வெற்றிகளைப் பெறும் பட்சத்தில் இலங்கை கால்பந்து அணிக்கு பிபா தரப்படுத்தலில் முன்னேற்றம் காண்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

No comments:

Post a Comment