ஜனவரி முதல் மீற்றர் இல்லாத முச்சக்கர வண்டிகளுக்கு சட்ட நடவடிக்கை : இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம - News View

Breaking

Monday, November 22, 2021

ஜனவரி முதல் மீற்றர் இல்லாத முச்சக்கர வண்டிகளுக்கு சட்ட நடவடிக்கை : இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம

சகல பயணிகள் முச்சக்கர வண்டிகளுக்குமான மீற்றர் கட்டண நடைமுறையை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் கட்டாயமாக்குவதற்கான வர்த்தமானி அறிவித்தல் தயாரிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனவரி 01ஆம் திகதி மேல் மாகாணத்தில் இந்தச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு மூன்று மாதங்களுக்குள் நாடு பூராகவும் விஸ்தரிக்கப்பட்டு அதன் பின்னர் மீற்றர் இல்லாத முச்சக்கர வண்டிகளுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் (20) கண்டி நகர பஸ் போக்குவரத்து சேவையை ஆரமித்து வைத்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய அமைச்சர், அனைத்து முச்சக்கர வண்டிகளையும் மீட்டர் டக்சிகளாக மாற்றுவதை கட்டாயமாக்கும் வர்த்தமானி அறிவித்தல் கைச்சாத்திடப்பட்டுள்ள போதிலும், அது தொடர்பான வேலைத்திட்டம் தொடர்பில் முச்சக்கர வண்டி சங்கங்களின் பிரதிநிதிகளுக்கு அறிவிக்கப்படும் வரை அது இன்னும் வெளியிடப்படவில்லைஎன்றும் அவர் தெரிவித்தார்..

கட்டணத்தை காட்சிப்படுத்துவதற்கு மீட்டர்கள் இல்லாததால், இன்று சில முச்சக்கர வண்டி சாரதிகள் அறவிடும் நியாயமற்ற கட்டணங்கள் தொடர்பில் பொது மக்களிடமிருந்து அடிக்கடி முறைப்பாடுகள் கிடைக்கின்றன.

ஆகவே இரு தரப்பினரையும் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், மக்களுக்கு நம்பகமான மற்றும் தரமான சேவையை வழங்குவதே இதன் நோக்கமாகும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

எம்.ஏ.அமீனுல்லா

No comments:

Post a Comment