(நா.தனுஜா)
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கடந்த வியாழக்கிழமை நாட்டை வந்தடைந்த ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் ரொமோயா ஒபொகாடா கடந்த நான்கு தினங்களில் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், தொழிற்சங்கப் பிரதிநிதிகள், பெருந்தோட்டத் தொழிலாளர்கள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
அடிமைத்துவத்தின் சமகால வடிவங்கள் தொடர்பான ஐ.நா விசேட அறிக்கையாளர் ரொமோயா ஒபொகாடா, எதிர்வரும் டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி வரையான 9 நாட்களுக்கு நாட்டில் தங்கியிருப்பார்.
இந்நிலையில் முதலாவது நாளான கடந்த 26 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அவர் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அதன் கிளை அமைப்புக்களின் பிரதிநிதிகள், தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
மேலும், இரண்டாம் மற்றும் மூன்றாம் தினங்களான கடந்த 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் கண்டிக்கு விஜயம் மேற்கொண்ட ரொமோயா ஒபொகாடா, அங்கு பெருந்தோட்டப் பயிர்ச் செய்கை நடவடிக்கைகளைப் பார்வையிட்டதுடன் பெருந்தோட்டத் தொழிலாளர்களுடனும் சந்திப்புக்களை நிகழ்த்தியுள்ளார்.
அதுமாத்திரமன்றி மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களைச் சந்தித்த அவர், இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் மற்றும் தொழிலாளர் உரிமைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.
அதேவேளை நான்காவது நாளான நேற்று திங்கட்கிழமை இலங்கை மற்றும் மாலைதீவிற்கான குடிப்பெயர்வு தொடர்பான சர்வதேச அமைப்பின் பிரதிநிதிகளை சந்தித்த ஐ.நா விசேட அறிக்கையாளர் ரொமொயா ஒபொகாடா, இலங்கையில் இடம்பெற்றுவரும் ஆட்கடத்தல் சம்பவங்கள் மற்றும் அதனைத் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
No comments:
Post a Comment