வரவு செலவு திட்டத்தை எதிர்த்து வாக்களிக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானம் : எதிராக உள்ள ஹரீஸ், நஸீர் அஹமட், பைசல் காசிம் : தமது நிலைப்பாட்டை முன்வைக்காத தலைவர் - News View

About Us

About Us

Breaking

Monday, November 22, 2021

வரவு செலவு திட்டத்தை எதிர்த்து வாக்களிக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானம் : எதிராக உள்ள ஹரீஸ், நஸீர் அஹமட், பைசல் காசிம் : தமது நிலைப்பாட்டை முன்வைக்காத தலைவர்

(ஆர்.யசி)

நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை எதிர்த்து வாக்களிக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம் ஹரீஸ், நஸீர் அஹமட் மற்றும் பைசல் காசிம் ஆகியோர் கட்சியின் தீர்மானத்திற்கு எதிராக உள்ளதாக தெரியவருகின்றது. நேற்றைய கூட்டத்தையும் மூவரும் புறக்கணித்துள்ளனர்.

நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ முன்வைத்துள்ள 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று இடம்பெறவுள்ள நிலையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடம் நேற்று காலை 10.30 மணிக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹகீம் தலைமையில் கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் கூடியது.

இதன்போது அரசாங்கத்தின் செயற்பாடுகள், அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்கள் குறித்து கூடுதலாக கலந்துரையாடப்பட்ட நிலையில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடியுள்ளனர்.

வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகள், வடக்கு கிழக்கு விவசாயிகளின் பிரச்சினைகள் மற்றும் ஜனாஸா விவகாரம் போன்றவற்றை ஆராய்ந்துள்ளதுடன் "ஒரே நாடு ஒரே சட்டம்" ஜனாதிபதி செயலணியின் தலைவராக ஞானசார தேரரை நியமித்ததன் பின்னரான முஸ்லிம் சமூகத்தின் கொந்தளிப்பு குறித்தும் பேசியுள்ளனர்.

ஆகவே இவ்வாறான நாசகரமான செயற்பாடுகளில் ஈடுபடும் அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்தை ஆதரிப்பதில்லை என்ற ஒருமனதான நிலைப்பாட்டிற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடம் வந்துள்ளது.

நேற்றைய சந்திப்பில் திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபிக் மற்றும் கட்சியின் உயர் பீட உறுப்பினர்கள் கலந்துகொண்ட போதிலும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களாக எச்.எம்.எம் ஹரீஸ், நஸீர் அஹமட் மற்றும் பைசல் காசிம் ஆகியோர் நேற்றைய கூட்டத்தில் கலந்துகொள்ளாது கூட்டத்தை புறக்கணித்துள்ளனர்.

தாம் சுகவீனமுற்றுள்ளதாகவும், ஆகவே கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாது எனவும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவரும் அறிவித்துள்ள போதிலும் அது கட்சிக்குள் பாரிய முரண்பாடுகளை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று முன்தினம் சபையில் அரசாங்கத்தை நியாயப்படுத்தி பேசிய வேளையில் ஆரோக்கியமாக இருந்தவர்கள் இன்று திடீர் சுகவீனமுற்றதாக கூறுவதும், நாளை (இன்று) பாராளுமன்றத்திற்கு வருவதாக கூறியுள்ளமையும் கட்சியின் உயர்பீட கூட்டத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அவர்கள் தொடர்ச்சியாக கட்சியின் தீர்மானங்களை மீறிய செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்ற காரணத்தினால் அவர்களுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவும், அவர்களை கட்சியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நேற்றைய கூட்டத்தில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. எனினும் தலைவர் ஹக்கீம் இது குறித்து தமது நிலைப்பாட்டை முன்வைக்கவில்லையாம்.

எவ்வாறு இருப்பினும் அரசாங்கத்துடன் இணையும் மனநிலையை தொடர்ச்சியாக வெளிப்படுத்திவரும் எச்.எம்.எம் ஹரீஸ், நஸீர் அஹமட் மற்றும் பைசல் காசிம் ஆகியோர் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கட்சியின் மேல்மட்டம் கூறியது.

No comments:

Post a Comment