பன்னூலாசிரியர் கலாபூஷணம் ஏ. பீர்முகம்மது எழுதிய எஸ். பொன்னுத்துரை முஸ்லிம்களுடனான_உறவும், ஊடாட்டமும் நூல் தொடர்பான ஒரு ஊடோட்டம் - News View

About Us

About Us

Breaking

Friday, November 26, 2021

பன்னூலாசிரியர் கலாபூஷணம் ஏ. பீர்முகம்மது எழுதிய எஸ். பொன்னுத்துரை முஸ்லிம்களுடனான_உறவும், ஊடாட்டமும் நூல் தொடர்பான ஒரு ஊடோட்டம்

மருதநிலா நியாஸ்

எமது நாடு பன்மைச்சமூக நாடு என்பதும் அதற்குள் எத்தனை கழுத்தறுப்புக்கள், காட்டிக் கொடுப்புகள் துரோகத்தனங்கள் என்பதனை வரலாற்றைப் புரட்டிப் பார்க்கின்ற எவராலும் புரிந்து கொள்ள முடியும்.

இந்த வரலாற்றுத் தடத்தினுள் அகப்பட்டு மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட ஒரு தலைமுறையினராக 1970 களின் பிற்பகுதியில் பிறந்து முப்பது ஆண்டுகால யுத்த சூழ்நிலைக்குள் அகப்பட்டு முரண்பாடுகளுக்குள் தமது இளமைக் காலத்தை இழந்தவர்களாக இந்த தலைமுறையினரை நாம் அடையாளப்படுத்த முடியும்.

இந்தத் தலைமுறைக்கு முன்பு வாழ்ந்த தலைமுறையினர் ஏனைய இனத்தினர் மீது கொண்டிருந்த உறவும் ஊடாட்டமும் 1970 க்கு பின்னர் பிறந்தவர்களுக்கு திருப்திப்படும் அளவுக்கு கிடைக்காமலே போய்விட்டது.

ஏனைய சமூகத்தோடு பின்னிப்பிணைந்து வாழ்ந்த முன்னைய தலைமுறையினருக்கு இருக்கும் மற்ற இனத்தவர் மீதான ஊடாட்டம் இப்போது இருக்கின்ற இந்த தலைமுறையினர் மத்தியில் மிகக் குறைவாகவே காணப்படுகிறது என்பதற்கு பல சம்பவங்கள் சாட்சிகளாக உள்ளன.

ஆனால் அது தற்போது ஆரோக்கியமாமதொரு நிலைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றது என்பதும் அதற்குள் அரசியல் தனது சித்து விளையாட்டுகளை செய்து கொண்டிருக்கிறது என்பதும் உள்ளங்கை நெல்லிக்கனி.

இவ்வாறானதொரு காலகட்டத்தில்தான் பன்னூலாசிரியர் கலாபூஷணம் ஏ. பீர்முகம்மது அவர்கள் எழுதிய எஸ். பொன்னுத்துரை முஸ்லிம்களுடனான உறவும் கூடாட்டமும் எனும் நூல் அக்கரைப்பற்று பேஜஸ் புத்தக இல்லத்தின் வெளியீடாக வெளிவந்திருக்கிறது.

அன்று வாழ்ந்த முஸ்லிம்களும் தமிழர்களும் எவ்வாறு ஒற்றுமையோடு கலந்து வாழ்ந்திருக்கிறார்கள் என்பதற்கு ஒரு ஆதார ஆவணமாக இந்த நூலை நாம் அடையாளப்படுத்த முடியும்.

இன்றைய காலத்தில் இலக்கிய தளத்திலும் அரசியல் களத்திலும் கல்விப் புலத்திலும் இயங்கிக் கொண்டிருக்கின்ற இளம் சந்ததியினர் வாசிக்க வேண்டியதொரு நூலாகவே இந்த நூலை பதிவு செய்யலாம்.

அக்காலத்தில் எவ்வளவு ஒற்றுமையாக வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள் என்பதை ஒரு பாடமாக கொண்டு அதன்பால் தங்களது செயற்பாடுகளையும் கட்டமைத்து கொள்வதற்கு ஒரு படிக்கல்லாக இந்த நூலை நோக்கலாம்.

இந்த அடிப்படையில் நோக்குகின்றபோது இந்த நூலானது பதினேழு அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு அத்தியாயமும் மிகவும் அழகு தமிழில் அடுக்காக்கம் செய்யப்பட்டு மிக நேர்த்தியாக செப்பனிடப்பட்டிருக்கிறது.

எஸ்.பொ வோடு தொடர்புபடுத்தி அன்றைய இலக்கிய ஆளுமைகள் அரசியல், சமூக பெருந்தகைகள் சமூக ஒற்றுமையோடு எவ்வாறு இலக்கியம் மற்றும் அரசியல் சமூக ஒற்றுமையை வளர்த்தார்கள் என்பதற்கு பல ஆதாரங்களோடும் வரலாற்றுச் சம்பவங்களுடனும் நூலாசிரியர் சிறந்த முறையில் எடுத்துக் காட்டியிருப்பது சிறப்பு.

எஸ். பொ அவர்கள் காலத்தில் இருந்த இலக்கிய ஆளுமைகள் மற்றும் இலக்கியத்துடன் அவர் கொண்டிருந்த அவா காரணமாக அவரோடு முஸ்லிம் நண்பர்களை இணைத்து மிகவும் காத்திரமான இலக்கிய பணி செய்த வரலாற்றை மிக லாவகமாக ஆசிரியர் எடுத்து கூறியிருக்கிறார். இதற்கு எஸ்.பொ மற்றும் எம்.ஏ.ரஹ்மான் ஆகியோருக்கிடையிலான மிக நெருக்கமான உறவைக் குறிப்பிடலாம்.

அதேபோல் தனது இலக்கிய செயற்பாட்டுக்கு எதிரான சக்திகளை முஸ்லிம் நண்பர்களது துணைகொண்டு வெற்றி கண்டதனையும் இங்கே ஆதாரங்களோடு குறிப்பிடப்பட்டுள்ளதானது படிப்பினையாக அமைந்திருக்கிறது.

அதுமாத்திரமன்றி எம்.ஏ.எம்.சுக்ரி, மானா மக்கீன், புலவர்மணி ஆ.மு.ஷரிபுத்தீன், எஸ்.ஏ.ஆர்.எம்.செய்யத் ஹசன் மௌலானா, ஏ.இக்பால், போன்று இன்னும் பல இலக்கிய ஆளுமைகளின் பெயர் குறிப்பிட்டு எஸ்.பொ வினது இலக்கிய கல்வி உறவு பற்றியும் நூலாசிரியர் இந்நூலில் மிகச் சிறப்பாக எடுத்துக்காட்டியிருக்கிறார்.

அதேபோல் அப்போது மிகவும் சிறந்து விளங்கிய அரசியல் ஆளுமைகளான கலாநிதி பதியுத்தீன் மகுமூத், மூதூர் ஏ.எல்.ஏ.மஜீது, டாக்டர் பரீத் மீராலெப்பை, எம்.எம்.முஸ்தபா, எம்.ஏ.அப்துல் மஜீத், இசட்.எம்.மசூர் மௌலானா, எம்.ஏ.சி.ஏ.ரஹ்மான், எம்.எஸ்.காரியப்பர் போன்றவர்களுடனான அரசியல் தொடர்புகளையுப் இந்நூல் சிறப்பாக எடுத்துச் சொல்கிறது.

இந்த அடிப்படையில் நோக்குகின்ற பொழுது அவர் யாழ்ப்பாணத்தில் பிறந்தாலும் கிழக்கு மாகாணத்தில் அவர் புகுந்த வீடாக இருந்து கிழக்கு மாகாணத்தில் உள்ள முஸ்லிம் கிராமங்களோடு மிக நெருங்கிய உறவை ஏற்படுத்தி தனது இலக்கியத்தினை வளர்த்ததோடு கம்பளை மட்டக்களப்பு போன்ற பிரதேசங்களில் ஆசிரியராக இருந்த வேளையில் சிறந்த ஆழுமைகளை உருவாக்கியுள்ளமை இந்த புத்தகத்தில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள முஸ்லிம் கல்விமான்களை காணுகின்ற போது தெளிவாகின்றது.

அதேபோல் முஸ்லிம்களது வாழ்க்கை முறையினை ரசித்து அனுபவித்த ஒருவராகவும் இருந்த காரணத்தால் தான் முஸ்லிம்கள் தொடர்பான இலக்கியங்களை அவர் படைப்பதற்கும் காரணமாக இருந்தது என்பதனை நூலாசிரியர் சுவைபடத் தந்திருப்பது வாசிக்க ருசிக்கிறது.

இன்று  இதன் அறிமுக விழா சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற உள்ளது.

நூல் கிடைக்குமிடங்கள்
அக்கரைப்பற்று பேஜஸ் புத்தக இல்லம்.
தெமடகொட இஸ்லாமிக் புக் ஹவுஸ்.
கொழும்பு பூபாலசிங்கம் புத்தகசாலை.

No comments:

Post a Comment