அரசாங்கத்துக்குள்ளேயே இருந்து கொண்டு கலகம் ஏற்படுத்தும் நடிகர்களுக்கு எதிராக தீர்மானம் எடுக்க வேண்டி வரும் : தாராளமாக வெளியில் செல்லலாம் யாரையும் பலவந்தமாக நாங்கள் வைத்துக் கொள்ளவில்லை - பொதுஜன பெரமுன பின் வரிசை உறுப்பினர்கள் - News View

About Us

About Us

Breaking

Monday, November 1, 2021

அரசாங்கத்துக்குள்ளேயே இருந்து கொண்டு கலகம் ஏற்படுத்தும் நடிகர்களுக்கு எதிராக தீர்மானம் எடுக்க வேண்டி வரும் : தாராளமாக வெளியில் செல்லலாம் யாரையும் பலவந்தமாக நாங்கள் வைத்துக் கொள்ளவில்லை - பொதுஜன பெரமுன பின் வரிசை உறுப்பினர்கள்

(எம்.ஆர்.எம்.வசீம்)

நாட்டின் பொருளாதாரத்தை வீழ்ச்சியடையச் செய்ய அரசாங்கத்துக்குள் இருந்து கொண்டே குழுவொன்றினால் சதித்திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதனால் அரசாங்கத்துக்கு உள்ளேயே இருந்து கொண்டு கலகம் ஏற்படுத்தும் நடிகர்களுக்கு எதிராக தீர்மானம் எடுக்க வேண்டி வரும் என ஆளும் கட்சி பின் வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துக்கு தெரிவித்து வருகின்றனர்.

பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் பிரமித் பண்டார தென்னகோன் தெரிவிக்கையில், அரசாங்கத்தின் பங்காளி கட்சிகளின் பிளவு தொடர்பாக மக்களுக்கு தெளிவுபடுத்திக் கொண்டு, அரசாங்கத்துக்குள்ளேயே கலகக்கார குழு இருப்பதாக தெரிவிப்பவர்கள், கலகக்காரர்கள் அல்ல. அவர்கள் நாடகக்காரர்கள். இந்த நாடக்ககாரர்கள் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ஏதாவதொரு நாடகமொன்றை கொண்டுவருவார்கள்.

அரசாங்கத்துக்குள் இருந்துகொண்டு இவ்வாறான நாடகங்களை அரங்கேற்றுவதற்கு இவர்களுக்கு இடமளிக்க முடியாது. அவர்களது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களை அரசாங்கத்துக்குள் இருந்துகொண்டு செயற்படுத்த அனுமதிக்க இயலாது. அரசாங்கத்துக்குள் இருந்து கொண்டு கலகக்கார முறையில் செயற்படுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துடன் கொவிட் காரணமாக நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்திருக்கும் நிலையில் தொடர்ந்தும் பொருளாதாரத்தை வீழ்ச்சியடையச் செய்வதற்காக வேறு குழுவொன்றுடன் இணைந்து சதித்திட்டம் ஒன்று அரசாங்கத்துக்குள்ளேயே இடம்பெற்று வருகின்றது. அவர்களுக்கு ஏதாவது பிரச்சினை இருந்தால் அதனை அரசாங்கத்துக்குள் இருந்து பேசித் தீர்த்துக் கொள்ள முடியும் என்றார்.

பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாரச்சி தெரிவிக்கையில், அரசாங்கத்தில் இருந்து கொண்டு அமைச்சுப் பதவிகளையும் ஏனைய வரப்பிரசாதங்களையும் அனுபவித்துக் கொண்டு அரசாங்கத்தை விமர்சிப்பதற்கு இடமளிக்க முடியாது.

அமைச்சரவையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டால் அதற்கு முழு அமைச்சரவையும் பொறுப்பு. அவ்வாறு இல்லாமல் எடுக்கப்பட்ட தீர்மானங்களை வெளியில் வந்து விமர்சிப்பது கூட்டுப் பொறுப்பை மீறும் செயலாகும்.

அவர்களுக்கு அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் இணக்கம் இல்லை என்றால் அரசாங்கத்தை விட்டு வெளியில் செல்லலாம். யாரையும் பலவந்தமாக நாங்கள் வைத்துக் கொள்ளவில்லை. அவர்கள் யாருடன் வேண்டுமானாலும் இணைந்து கூட்டணி அமைத்து செயற்பட முடியும் என்றார்.

No comments:

Post a Comment