(எம்.மனோசித்ரா)
நாட்டில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் என்று இரசாயன உர இறக்குமதி நிறுவனங்களால் வீண் அச்சத்தை தோற்றுவிப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. அவ்வாறு நாட்டில் எந்த சந்தர்ப்பத்திலும் உணவு தட்டுப்பாடு ஏற்படாது என்று விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் என்று இரசாயன உர இறக்குமதி நிறுவனங்களால் வீண் அச்சத்தை தோற்றுவிப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. அவ்வாறு நாட்டில் எவ்வித உணவு தட்டுப்பாடும் ஏற்படப் போவதில்லை.
சேதன உர பாவனையால் உற்பத்தி 10 - 15 வீதம் குறைவடைந்துள்ளமைக்காக உணவு தட்டுப்பாடு ஏற்படும் என்று கூற முடியாது. இவை அனைத்திற்குமான தயார்படுத்தல்கள் செய்யப்பட்ட பின்னரே நாம் இந்த சவாலை ஏற்றுக் கொண்டோம்.
கடந்த ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாhய ராஜபக்ஷவினால் இரசாயன உரத்தை இறக்குமதி செய்யாமலிருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது. இந்த தீர்மானம் அறிவிக்கப்பட்ட போதே விவசாயிகள் உரம் இல்லை என்று தெரிவித்து வீதியில் இறங்கி போராடினர். எனினும் அந்த சந்தர்ப்பத்தில் நாட்டில் போதுமானளவு உரம் காணப்பட்டது.
இதன் காரணமாக விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில் உர களஞ்சியசாலைகளுக்குச் சென்று அவற்றை விநியோகிப்பதற்கான நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டியேற்பட்டது.
தற்போது பெரும்போகம் ஆரம்பித்த பின்னர் விவசாயிகள் மீண்டும் உரத்தை வழங்குமாறு கோரி ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கின்றனர்.
பெரும்பாலான விவசாயிகள் தமது விவசாய செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளனர். எனினும் சில விவசாயிகளை இணைத்துக் கொண்டு அரசியல் கட்சிகள் தலையிட்டு போராட்டங்களை முன்னெடுக்கின்றன. பொலன்னறுவை மாவட்டத்திலேயே அதிகளவான ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. தற்போது இரசாயன உரத்தை வழங்குமாறு கோரி ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கின்றனர்.
என்னுடைய உருவப்படங்கள் வைக்கப்பட்ட கொடும்பாவிகள் எரிக்கப்படுகின்றன. அவற்றுக்கு இலைகளை ஊட்டுகின்றனர். விவசாயிகள் எந்த இடத்திலும் இவ்வாறு நடந்து கொள்ள மாட்டார்கள். இதன் பின்னணியில் அரசியல் சூழ்ச்சி இடம்பெறுகிறது. இவ்வாறு எதனை செய்தாலும் நாம் முன்னெடுத்துச் செல்லும் மாற்றம் சரியானது என்பது எனது மனசாட்சிக்கு தெரியும்.
கொள்கை ரீதியான அரசியலுக்காகவே நாம் கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக தெரிவு செய்தோம். இதுவரையான ஆட்சியாளர்களால் மக்கள் விரும்புகின்றவை வழங்கப்பட்டன. ஆனால் நாம் நாட்டுக்கு தேவையானவற்றையே செய்கின்றோம்.
அரசாங்கத்திற்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்ற போதிலும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக எவ்வித ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படுமாயின் நான் அரசியலிலிருந்து முழுமையாக விலகுவேன் என்றார்.
No comments:
Post a Comment