(எம்.மனோசித்ரா)
முல்லேரியாவில் வீடொன்றில் கொள்ளையிடச் சென்ற சந்தேகநபரொருவர் பிரதேசவாசிகளால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
ஒக்டோபர் 31 ஆம் திகதி முல்லேரியா பொலிஸ் பிரிவில் மாளிகாகொடெல்ல பிரதேசத்திலுள்ள வீடொன்றில் அத்துமீறி நுழைந்த மூவர் வீட்டிலிருந்தவர்களை அச்சுறுத்தி பொருட்கள் மற்றும் பணத்தை கொள்ளையிட்டுக் கொண்டிருந்தபோது வீட்டிலிருந்தவர்கள் கூச்சலிட்டுள்ளனர்.
கூச்சல் சத்தத்தைக் கேட்டு அயலவர்கள் குறித்த வீட்டுக்குள் நுழைந்து சந்தேகநபர்களை பிடித்துள்ளனர். இதன்போது மூவரில் இருவர் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளதோடு, எஞ்சிய ஒருவரை அயலவர்கள் தாக்கியுள்ளனர்.
இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளான சந்தேகநபர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் இன்று காலை வரை அடையாளம் காணப்படவில்லை என்று பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment