உங்களுக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தவில்லையா? : ரவூப் ஹக்கீம், மனோ கணேசனுக்கு ஆனந்தசங்கரி பகீரங்க மடல் - News View

About Us

About Us

Breaking

Friday, November 5, 2021

உங்களுக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தவில்லையா? : ரவூப் ஹக்கீம், மனோ கணேசனுக்கு ஆனந்தசங்கரி பகீரங்க மடல்

இறுதி யுத்தத்தில் விடுதலைப் புலிகளும் தமிழ் மக்களும் அழிவதை அன்று வேடிக்கை பார்த்துவிட்டு இன்று மனித உரிமைகள் பற்றிப்பேசுகின்ற இவர்களுக்கு எங்கிருந்து ஞானம் வந்தது. இவ்வாறானவர்களிடம் கலந்துரையாடுவது என்பது பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், மனோ கணேசன் ஆகிய உங்களுக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தவில்லையா? என தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், மனோ கணேசன் ஆகியோருக்கு பகீரங்க மடல் ஒன்றை இன்று (05) அனுப்பி ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சமீபத்தில் தமிழ் கட்சிகளின் கலந்துரையாடலில் தாங்கள் இருவரும் கலந்துகொண்டு தெரிவித்த கருத்துக்களை வரவேற்கின்றேன். தமிழ் முஸ்லீம் உறவுகள் ஒன்றிணைந்து பலமான அமைப்பாக உருவாக வேண்டும் என்ற தங்கள் இருவரின் கருத்துக்களும் காலத்தின் தேவை என்பதை தமிழர் விடுதலைக் கூட்டணி நன்கு உணர்ந்துள்ளது. தங்களின் முயற்சி வெற்றி பெற வேண்டும் என நான் வாழ்த்துகிறேன்.

அதேவேளை தமிழ் முஸ்லீம் மக்களின் உறவுகள் பற்றியும் சிறுபான்மை இனத்தவர்களின் பிரச்சனைகள் பற்றியும் இதற்கு தீர்வு வேண்டும் என முதன்முதலாக தமிழர் விடுதலைக் கூட்டணியே இந்தியா உட்பட சர்வதேச சமூகத்திற்கு எடுத்துச் சென்றது.

இருந்த போதும் இவ்வாறான பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வு வேண்டும் என்று குறிப்பாக தாங்கள் இருவரும் மறந்தது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழர் விடுதலைக் கூட்டணி உருவாகிய நாள் தொடங்கி பல்வேறு இன்னல்களையும் சந்தித்து பல தலைவர்களை துப்பாக்கி குண்டுகளுக்கும் தற்கொலை குண்டுதாரிகளுக்கும் பலி கொடுத்து இன்று வரை ஜனநாயக ரீதியில் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு கட்சி என்பது தங்களின் ஞாபகத்திற்கு வராதது எனக்கு வியப்பை தருகின்றது.

இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் மற்றும் ஜனநாயக விரோத செயல்களை தட்டிக் கேட்பதற்கு ஒரு ஜனநாயக அமைப்பால் மட்டுமே முடியும். ஆனால் தாங்கள் இருவரும் கலந்துகொண்ட கலந்துரையாடலில் ஏனையவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை நீங்கள் ஒரு கனம் சிந்தித்து பார்க்க வேண்டும்.

2004ம் ஆண்டு தேர்தல் ஜனநாயகத்தை முற்று முழுதாக குழிதோண்டிப் புதைத்துவிட்டு விடுதலைப் புலிகளின் முழு ஒத்துழைப்புடனும், ஆசியுடனும் தேர்தலில் களமிறங்கி வாக்குச்சாவடிகளில் அவர்களின் ஆதரவாளர்களும் விடுதலைப் புலிகளும் நடந்து கொண்டவிதம் உலகத் தமிழர்களையே வெட்கித்தலைகுனிய வைத்தது என்பதை எவ்வாறு மறந்தீர்கள்?

அதுமட்டுமல்ல 2009ம் ஆண்டு இறுதி யுத்தத்தில் விடுதலைப் புலிகளும், தமிழ் மக்களும் அழிவதை வேடிக்கை பார்த்துவிட்டு இன்று மனித உரிமைகள் பற்றிப் பேசுகிறார்கள். 2015ம் ஆண்டு நீங்கள் சேர்ந்து ஆதரவு கொடுத்த நல்லாட்சி அரசாங்கத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவி சுகத்தை அனுபவித்துக் கொண்டிருந்தார்கள்.

அப்போது சிறுபான்மை மக்களின் பிரச்சனைகள் பற்றி ஏன் பேசி ஒரு முடிவுக்கு வரவில்லை. பிரச்சினைகளை தீர்த்து வைக்கக் கூடிய ஒரு சந்தர்ப்பம் இருந்தும் கண்டும் காணாமல் விட்டுவிட்டு இப்போது மட்டும் எங்கிருந்து ஞானம் வந்தது. பதவிகள் வந்த போது அவர்களின் வசதி வாய்ப்புக்களை பெருக்கிக் கொண்டார்களே தவிர தமிழ் மக்களின் பிரச்சினைகள் அவர்களின் கண்ணை மறைத்து விட்டது.

இவ்வாறானவர்களிடம் கலந்துரையாடுவது என்பது உங்களுக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்த வில்லையா? ஜனநாயக விரோத சக்திகளுடன் கலந்துரையாடி மீண்டும் மீண்டும் தமிழ் மக்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்தப் போகின்றீர்களா?

கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக அரசியலில் ஈடுபட்டு பல சவால்களுக்கு முகம்கொடுத்து உயிரைப்பனையம் வைத்து இன்றுவரை துணிச்சலுடன் செயல்பட்டு வரும் என்னைப் போன்ற ஒரு ஜனநாயக வாதியிடம் இருந்தும் கருத்துக்களை பெற வேண்டும் என்று உணர்வு உங்களுக்கு எழவில்லையா? அல்லது எவராவது தடுத்தார்களா? 

எது எவ்வாறாயினும் தங்களின் செயற்பாடுகள் வெற்றி பெறுவதற்கு என்னைப் போன்ற ஜனநாயக செயற்பாடுகளுடன் செயற்படும் ஒரு சிலரின் கருத்துக்களையும் பெற்று தாங்கள் இருவரும் இனியாவது சிந்தித்து செயற்படுவீர்கள் என எதிர்பார்க்கின்றேன் என அந்த பகுஜரங்க மடலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு நிருபர் சரவணன்

No comments:

Post a Comment