ATM இல் வைப்பிலிடச் சென்ற 6 கோடி ரூபா பணத்தை கடத்திய வேன் சாரதி GPS தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கைது - News View

About Us

About Us

Breaking

Tuesday, November 2, 2021

ATM இல் வைப்பிலிடச் சென்ற 6 கோடி ரூபா பணத்தை கடத்திய வேன் சாரதி GPS தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கைது

ஹட்டன் நகரில் வைத்து 6 கோடி ரூபா பணத்துடன் சினிமாப் பாணியில் வேனைக் கடத்திய சாரதியை விசேட அதிரடிப்படையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

ஹட்டன் நகரிலுள்ள தனியார் வங்கியின் ATM இயந்திரத்தில் வைப்பிலிடுவதற்காக கண்டியிலிருந்து தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் வேனில் கொண்டுவரப்பட்ட பணமே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளது.

குறித்த நிறுவனத்தின் அதிகாரி, பாதுகாப்பு அதிகாரி மற்றும் சாரதி ஆகியோர் ATM இயந்திரத்தில் பணத்தை வைப்பிலிடுவதற்காக நேற்று (01) மதியம் கண்டியிலிருந்து வந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து குறித்த அதிகாரியும், பாதுகாப்பு ஊழியரும் வேனியில் இருந்து இறங்கிய நிலையில், சாரதி வேனை செலுத்திக் கொண்டு பணத்துடன் தப்பிச் சென்றுள்ளார்.

நிறுவனத்தின் அதிகாரியும், பாதுகாப்பு ஊழியரும் அவரை பின்தொடர்ந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, தலவாக்கலை - லிந்துலை வழியாக அம்பேவல பகுதிக்கு வேன் செல்வதை, குறித்த வேனிலுள்ள GPS தொழில்நுட்ப உதவியுடன் கண்டறிந்துள்ளனர். இது தொடர்பில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து நுவரெலியா பதுளை பிரதான வீதியில் கெப்பட்டிபொல ரேந்தபொல பகுதியில் வைத்து நுவரெலியா விசேட அதிரடிப் படையினர் வேனை வழிமறித்து சாரதியை கைது செய்துள்ளனர்.

பின்னர் சாரதியையும், குறித்த பணத் தெகையையும், வேனையும் கெப்பட்டிப்பொல பொலிஸ் நிலையத்தில் வைத்து ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் கையளித்துள்ளனர்.

சந்தேக நபரையும், பணத் தொகையையும் ஹட்டன் பொலிஸாரால் இன்று (02) ஹட்டன் நீதிமன்றத்தில், முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக நுவரெலியா விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

மலையக நிருபர் கிரிஷாந்தன்

No comments:

Post a Comment