வீண் அச்சத்தை ஏற்படுத்த எதிரணி முயன்றாலும் நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்படாது : ஜனாதிபதி 5 சதமாவது மோசடி செய்ததாக நிரூபித்தால் அவர் சார்பில் நான் உடனடியாக பதவி விலகுவேன் என்கிறார் அமைச்சர் மஹிந்தானந்த - News View

About Us

About Us

Breaking

Tuesday, November 23, 2021

வீண் அச்சத்தை ஏற்படுத்த எதிரணி முயன்றாலும் நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்படாது : ஜனாதிபதி 5 சதமாவது மோசடி செய்ததாக நிரூபித்தால் அவர் சார்பில் நான் உடனடியாக பதவி விலகுவேன் என்கிறார் அமைச்சர் மஹிந்தானந்த

உணவுப் பற்றாக்குறை தொடர்பில் வீண் அச்சம் ஏற்படுத்த எதிரணி முயன்றாலும் நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்படாது என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்தார்.

இந்த ஆட்சியில் மோசடிக்கு இடமில்லை என்று தெரிவித்த அவர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ 5 சதமாவது மோசடி செய்திருந்தால் நிரூபியுங்கள். அவர் சார்பில் நான் பதவி விலகுவேன் என்றும் கூறினார்.

வரவு செலவுத்திட்ட 2 ஆம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் குறிப்பிட்டதாவது, சுற்றுச்சூழலுக்கு உகந்த பயிர்ச் செய்கை கொள்கையை முன்னெடுக்க நாம் கைகோர்த்துள்ளோம். 

விவசாய அமைச்சரும் ராஜாங்க அமைச்சரும் அமைச்சின் செயலாளரும் வெவ்வேறு கருத்துக் கூறுவதாக எதிரணி சொல்கிறது. ஆனால் நாம் ஜனாதிபதியின் கொள்கையுடனே இருக்கிறோம். 

நெனோ நைட்ரஜன் திரவப் பசளை இறக்குமதிக் கம்பனியுடன் பேசி அதன் விலைகளை குறைத்தோம். இதனால் பெருமளவு நிதியை சேமிக்க முடிந்தது. இதில் மோசடி இருந்தால் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல் பெறலாம். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அரசில் மோசடிக்கு இடமில்லை. 

கடந்த காலத்தில் இரசாய பசளை இறக்குமதி செய்வதில் மோசடி செய்த நபர்களை வீட்டுக்கு அனுப்பினோம். உங்கள் ஆட்சியிருந்தால் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புள்ள எவரும் பிடிபட்டிருக்கமாட்டார்கள். எமது ஆட்சியில் சூத்திரதாரிகளுக்கு எதிராக வழங்கு தொடரப்பட்டுள்ளது. புலனாய்வு பிரிவு எவ்வாறு இருந்தது பாதுகாப்பு நிலைமை எவ்வாறு இருந்தது என்று அனைவருக்கும் தெரியாது.

பெருந்தோட்ட அமைச்சரின் மகள் ஒரு கிலோ தேயிலை கொழுந்தில் இருந்து 20 ரூபா பெற்றுள்ளார். அவரது மனைவிக்கு காணி வழங்கப்பட்டுள்ளது. கபீர் ஹாசிமின் மருமகனுக்கு ஹந்தானை மாளிகையை இலவசமாக கொடுத்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 5 சதமாவது மோசடி செய்திருந்தால் நிரூபியுங்கள். அவர் சார்பில் நான் பதவி விலகுவேன். 

அரசில் யாராவாவது மோசடி செய்திருந்தால் பாராளுமன்ற குழுக்களுக்கு அழைத்து நிரூபியுங்கள். கடந்த ஆட்சியில் தரமற்ற இரசாயன பசளை தருவித்து விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. நெல் பயிர்ச் செய்கைக்காக இரசாயனப் பசளை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படவில்லை. மரக்கறி பயிர்ச் செய்கைக்காக விசேட பசளை வகையொன்றைற தருவிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது தவிர எதற்கும் அனுமதி வழங்கப்படவில்லை. 

2022 ஆம் ஆண்டு வரை தேவையான அரிசி உள்ளது. உணவுப் பற்றாக்குறை தொடர்பில் வீண் அச்சம் ஏற்படுத்த முயன்றாலும் அவ்வாறு பற்றாக்குறையும் ஏற்படாது என அமைச்சர் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்

No comments:

Post a Comment