முன்னாள் அமைச்சர்கள், எம்.பிக்கள் உட்பட 30 பேருக்கு தொடர்ந்தும் அதிவிசேட பாதுகாப்பு : ஆராய்வதாக அமைச்சர் சரத் வீரசேகர ஆலோசனைக்குழுவில் தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, November 15, 2021

முன்னாள் அமைச்சர்கள், எம்.பிக்கள் உட்பட 30 பேருக்கு தொடர்ந்தும் அதிவிசேட பாதுகாப்பு : ஆராய்வதாக அமைச்சர் சரத் வீரசேகர ஆலோசனைக்குழுவில் தெரிவிப்பு

முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுமார் 30 பேருக்கு கடந்த 15 மாதங்களாக பிரபுக்களுக்கான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களுக்கு மேலதிகமாக முன்னாள் ஆளுநர்கள் சிலருக்கும் அவ்வாறான பிரபுக்களுக்கான விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதற்கிணங்க கடந்த வருடம் நடைபெற்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலில் தோல்வியடைந்துள்ள மேற்படி அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரபுக்களுக்கான பாதுகாப்புக்காக பாதுகாப்பு அதிகாரிகள் இரண்டு பேர் வரை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் முக்கிய அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் முன்னாள் நகர சபை தலைவர் ஒருவருக்கும் சில வருடங்களாக பிரபுக்களுக்கான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் கடந்த வாரம்தான் அவ்வாறான இரண்டு பாதுகாப்பு அதிகாரிகளை அந்தக் கடமையில் இருந்து விலக்கிக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பாராளுமன்றத்தில் நடைபெற்றுள்ள பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக்குழு கூட்டத்தின் போது இந்த விடயம் சில பாராளுமன்ற உறுப்பினர்களின் எதிர்ப்புக்கு இலக்காகியுள்ளதாக மேற்படி வட்டாரங்கள் தெரிவித்தன.

எந்த அடிப்படையில் மேற்படி முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரபுக்களுக்கான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என பின்வரிசை எம்பிக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

முன்னாள் பாதுகாப்பு அமைச்சர்கள் பொலிஸ் துறைக்கு பொறுப்பான அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய அமைச்சு பதவியில் இருந்தவர்களுக்கு அவ்வாறு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமை பிரச்சனையல்ல என்றும் அவ்வாறு இல்லாதவர்களுக்கு அத்தகைய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது ஏன் என்றும் அவர்களால் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. 

இதன்போது கருத்துத் தெரிவித்துள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, மேற்படி விடயம் தொடர்பில் தாம் ஆராய்ந்து பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment