இருபதுக்கு - 20 உலகக் கிண்ண கிரிக்கெட் சம்பியனாக முதல்தடவையாக முடி சூடிக் கொண்டது அவுஸ்திரேலியா - News View

About Us

About Us

Breaking

Sunday, November 14, 2021

இருபதுக்கு - 20 உலகக் கிண்ண கிரிக்கெட் சம்பியனாக முதல்தடவையாக முடி சூடிக் கொண்டது அவுஸ்திரேலியா

(துபாயிலிருந்து நெவில் அன்தனி)

14 வருட இருபதுக்கு - 20 உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் அவுஸ்திரேலியா முதல் தடவையாக உலக சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.

நியூஸிலாந்துக்கு எதிராக துபாய் சர்வதேச விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (14) இரவு மின்னொளியில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் 7 விக்கெட்களால் மிக இலகுவாக வெற்றியீட்டியதன் மூலம் அவுஸ்திரேலியா ஐசிசி ஆடவர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.

50 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட்டில் 5 தடவைகள் சம்பியனான அவுஸ்திரேலியா, இருபது 20 உலகக் கிண்ணத்தை சுவீகரித்தது இதுவே முதல் தடவையாகும்.

மறுபுறத்தில் இருபது 20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் முதல் தடவையாக பங்குபற்றிய உலக டெஸ்ட் சம்பியன் நியூஸிலாந்து இரண்டாம் இடத்தைப் பெற்று திருப்தி அடைந்தது.

சம்பியனான அவுஸ்திரேலியாவுக்கு பணப்பரிசாக 16 இலட்சம் அமெரிக்க டொலர்களும் (இலங்கை ரூபாவில் 323,264,960) நியூஸிலாந்துக்கு 8 இலட்சம் அமெரிக்க டொலர்களும் (இலங்கை ரூபாவில் 161,632,480 ) பணப்பரிசாக ஐசிசியினால் வழங்கப்படும்.

அவுஸ்திரேலியாவின் நேற்றைய வெற்றியில் ஜோஷ் ஹேஸ்ல்வூடின் துல்லியமான பந்துவீச்சு, மிச்செல் மார்ஷ், டேவிட் வோர்னர் ஆகியோரின் அதிரடியுடன்கூடிய துடுப்பாட்டங்கள் என்பன முக்கிய பங்காற்றியிருந்தன.

நியூஸிலாந்து சார்பாக அணித் தலைவர் கேன் வில்லியம்சன் தனி ஒருவராக துடுப்பாட்டத்தில் பிரகாசித்தபோதிலும் அது இறுதியில் பலனற்றுப் போனது.

நியூஸிலாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 173 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கிப பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 18.5 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 173 ஓட்டங்களை அடைந்து சம்பியன் பட்டத்தை வென்றெடுத்தது.

அணித் தலைவர் ஆரோன் பின்ச் வெறும் 5 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தபோது அவுஸ்திரேலியாவின் மொத்த எண்ணிக்கை வெறும் 15 ஓட்டங்களாக இருந்தது.

இந்நிலையில் 2ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்த டேவிட் வோர்னரும் மிச்செல் மார்ஷும் 59 பந்துகளில் 92 ஓட்டங்களைப் பகிர்ந்து அவுஸ்திரேலியாவை பலப்படுத்தினர்.

வோர்னர் 38 பந்துகளை எதிர்கொண்டு 4 பவுண்ட்றிகள், 3 சிக்ஸ்களுடன் 53 ஓட்டங்களைப் பெற்றார்.

மறுமுனையில் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய மிச்செல் மார்ஷ் இருபது 20 உலகக் கிண்ண இறுதி ஆட்ட வரலாற்றில் அதிவேக அரைச் சதத்தைக் குவித்து சாதனையாளரானார். 50 ஓட்டங்களைப் பூர்த்தி செய்ய அவருக்கு 31 பந்துகளே தேவைப்பட்டது.

இதே போட்டியில் கேன் வில்லியம்சன் 32 பந்துகளில் அரைச் சதத்தைப் பூர்த்திசெய்திருந்தார்.

மிச்செல் மார்ஷ், க்ளென் மெக்ஸ்வெல் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் 66 ஓட்டங்களைப் பகிர்ந்து அவுஸ்திரேலியாவின் வெற்றியை உறுதிசெய்தனர்.

மிச்செல் மார்ஷ் 50 பந்துகளில் 6 பவுண்ட்றிகள், 4 சிக்ஸ்களுடன் ஆட்டமிழக்காமல் 77 ஓட்டங்களைக் குவித்ததுடன் க்ளென் மெக்ஸ்வெல் 4 பவுண்ட்றிகள், ஒரு சிக்ஸ் அடங்கலாக 28 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

நியூஸிலாந்து பந்துவீச்சில் ட்ரென்ட் போல்ட் 4 ஓவரக்ளில் 18 ஓட்டங்களைக் கொடுத்து 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

நேற்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட நியூஸிலாந்து, அணித் தலைவர் கேன் வில்லியம்ஸின் அபார துடுப்பாட்ட உதவியுடன் 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்களை மாத்திரம் இழந்து 172 ஓட்டங்களைக் குவித்தது.

இந்த மொத்த எண்ணிக்கையில் ஏறத்தாழ அரைவாசி ஓட்டங்களை கேன் வில்யம்சன் குவித்திருந்தார்.

களம் புகுத்தது முதல் மிகவும் அபாரமாகத் துடுப்பெடுத்தாடிய கேன் வில்லியம்சன் 48 பந்துகளை எதிர்கொண்டு 10 பவுண்ட்றிகள், 3 சிக்ஸ்களுடன் 85 ஓட்டங்களைக் குவித்தார்.

நியூஸிலாந்தின் மொத்த எண்ணிக்கை 4ஆவது ஓவரில் 28 ஓட்டங்களாக இருந்தபோது டெரில் மிச்செல் 11 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

அவரைத் தொட்ந்து மார்ட்டின் கப்டிலுடன் இரண்டாவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்த கேன் வில்லியம்சன் 48 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது மார்ட்டின் கப்டில் 28 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

அதன் பின்னர் க்ளென் பிலிப்ஸுடன் 3ஆவது விக்கெட்டிலும் கேன் வில்லியம்சன் 37 பந்துகளில் 68 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த இணைப்பாட்டம் ஒன்றை ஏற்படுத்தினார். ஆனால், பிலிப்ஸின் பங்களிப்பு வெறும் 18 ஓட்டங்களாக இருந்தது.

நான்கு ஓட்டங்கள் கழித்து 18ஆவது ஓவரில் மொத்த எண்ணிக்கை 148 ஓட்டங்களாக இருந்தபோது கேன் வில்லியம்ஸன் ஆட்டமிழந்தார்.

ஜேம்ஸ் நீஷாம் 13 ஓட்டங்களுடனும் டிம் சீவேர்ட் 8 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

அவுஸ்திரேலிய பந்துவீச்சில் ஜொஷ் ஹேஸ்ல்வூட் 4 ஓவர்களில் 16 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

ஆட்டநாயகன் : மிச்செல் மார்ஷ், தொடர்நாயகன்: டேவிட் வோர்னர்.

No comments:

Post a Comment