டோக்கியோவில் பயணிகள் ரயிலொன்றில் ஞாயிற்றுக்கிழமை மாலை நபர் ஒருவர் நடத்திய கத்திக்குத்து மற்றும் துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் காயமடைந்துள்ளதாக ஜப்பான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து நேற்று வழக்கம்போல் மின்சார ரயில் ஒன்று புறப்பட்டு சென்றது. இந்த ரயில் கோகுரியோ ரயில் நிலையத்துக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது, அதிலிருந்த 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சக பயணிகளை திடீரென கத்தியால் குத்தத் தொடங்கினார்.
இதனால் ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. ஆனாலும் அந்த வாலிபர் பயணிகளை தொடர்ந்து கத்தியால் குத்தினார். இதில் 17 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும், அந்த வாலிபர் பயணிகளை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினார்.
தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த போலீசார் அந்த வாலிபரை மடக்கி பிடித்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சந்தேக நபர் பேட்மேன் திரைபடத்தில் ஜோக்கரின் கதாபாத்திரத்தை சித்தரிக்கும் ஆடையை அணிந்திருந்தார் என்று சாட்சியங்கள் தெரிவித்துள்ளன.
தாக்குதலினால் 70 வயதுடைய பயணியொருவர் மார்பில் குத்தப்பட்டு, ஆபத்தான நிலையில் உள்ளார்.
தாக்குதல் நடந்தபோது, ரயிலுக்குள் இருந்து பயணிகள் ஓடும் காட்சிகள் கையடக்கத் தொலைபேசிகளில் பதிவு செய்யப்பட்டு, சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன.
அதில் தாக்குதல் நடத்தியவரிடம் இருந்து தப்பிக்க பயணிகள் ரயில் பெட்டிகளில் ஓடுவதையும், ஜன்னல் வழியாக குதிப்பதையும் வெளிக்காட்டுகின்றது.
இதேபோன்று டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி நடந்தபோது, ஆகஸ்டு 6ம் திகதி ஓடும் ரயிலில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் 10 பேர் படுகாயமடைந்தனர்.
No comments:
Post a Comment