மருத்துவ விநியோக பரிந்துரை மீளாய்வுக் குழுவின் அனுமதியின்றி 06 வருடங்களில் கொள்வனவு செய்துள்ள மருத்துவப் பொருட்களின் செலவு 10,193 மில்லியன் ரூபாய் : அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுக் கூட்டத்தில் அம்பலம் - News View

About Us

About Us

Breaking

Monday, November 22, 2021

மருத்துவ விநியோக பரிந்துரை மீளாய்வுக் குழுவின் அனுமதியின்றி 06 வருடங்களில் கொள்வனவு செய்துள்ள மருத்துவப் பொருட்களின் செலவு 10,193 மில்லியன் ரூபாய் : அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுக் கூட்டத்தில் அம்பலம்

2011 ஆம் ஆண்டு முதல் 2016 வரையான காலபகுதியில் மருத்துவ விநியோக பரிந்துரை மீளாய்வுக் குழுவின் (Formulary Revision Committee) அனுமதியின்றி 10,193 மில்லியன் ரூபாய் செலவில் 4,619 மருத்துவப் பொருட்கள் கொள்வனவு செய்துள்ளமை தொடர்பில் அண்மையில் (17) இடம்பெற்ற அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுக் கூட்டத்தில் புலப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையில் குழு கூடிய போதே இந்தவிடயம் புலப்பட்டது.

சுகாதார, போசாக்கு மற்றும் சுதேச வைத்திய அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவினால் மேற்கொள்ளப்படும் மருத்துவ விநியோக செயற்பாடு தொடர்பில் 2018 மார்ச் 14 ஆம் திகதியிடப்பட்ட கணக்காய்வாளர் நாயகத்தின் விசேட கணக்காய்வு அறிக்கை தொடர்பில் மதிப்பாய்வு செய்வதற்கு இந்தக்குழு கூடியது.

உலகில் பல்வேறு நாடுகளில் பயன்படுத்தும் மருத்துவப் பொருட்களின் எண்ணிக்கை குறைவானதாக காணப்பட்டாலும், இந்நாட்டில் 2017 ஆம் ஆண்டு வரை 19,844 மருத்துவப் பொருட்கள் நுகர்வு செய்யப்பட்டுள்ளமை இங்கு புலப்பட்டது.

2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் 14 முறை 891 மில்லியன் ரூபாய் செலவு செய்து Herticad என்ற வியாபாரப் பெயரில் 8,945 Trastuzumab injection 440mg with solvent in 20ml vials உள்நாட்டு சந்தையில் தனியொரு விநியோகத்தரிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்டுள்ளமை குழுவில் புலப்பட்டது. 

இந்தக் கொள்வனவின் போது கொள்முதல் குழு குறைந்த விலைமனுவை நிராகரித்தமையால் 230.9 மில்லியன் ரூபாய் மேலதிக செலவு ஏற்பட்டுள்ளது.

மேலும், கொள்முதல் செயற்பாட்டின் போது ஏற்படும் தாமதம் காரணமாக மருத்துவ பொருட்களுக்கு உருவாகும் தட்டுப்பாட்டை நீக்குவதற்கு அவற்றை உள்நாட்டு சந்தையில் கொள்வனவு செய்ய வேண்டி ஏற்பட்டதால் 2007 முதல் 2017 வரையான 10 வருட காலத்தில் 5,166 மில்லியன் ரூபாய் மேலதிக செலவு ஏற்பட்டுள்ளமை தொடர்பிலும் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு ஔடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சிடம் கேள்வியெழுப்பியது.

தரம் உறுதிப்படுத்தப்படாமல் வருடாந்தம் மருத்துவப் பொருட்கள் நாட்டிற்குள் கொண்டுவரப்படுவது நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும், அதன்மூலம் நோயாளர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை அளவிட முடியாது எனவும் தேசிய கணக்காய்வு அலுவலகம் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் சுட்டிக்காட்டியது.

2016 ஆம் ஆண்டு வரை தேசிய மருந்துத் தரம் உறுதிப்படுத்தல் ஆய்வுகூடத்தில் காணப்பட்ட பௌதீக மற்றும் மனிதவள அபிவிருத்திகளை மேற்கொள்ள 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி வரை நடவடிக்கை எடுக்காமை தொடர்பிலும் அதிகாரிகளிடம் குழு வினவியது.

கொள்வனவு செய்யப்படும் அனைத்து மருத்துவ பொருட்களினதும் மாதிரிகளின் தரத்தை ஆய்வு செய்வதற்கான முறை இல்லாமை, தரம் குறைந்த மருத்துவப் பொருட்களுக்கான அறவிடும் முறையிலுள்ள பலவீனங்கள், தரம் குறைந்த மருத்துவப் பொருட்களை நோயாளர்களுக்கு வழங்கியுள்ளமை, மருத்துவப் பொருட்களின் கொள்கலன்களில் அரச இலட்சினை அச்சிடப்படாமை, மருத்துவப் பொருட்களின் களஞ்சியசாலைகள் உரிய தரத்தில் இல்லாமை, மருத்துவப் பொருட்கள் கிடைக்கப்பெற்ற பின்னர் பெற்றுக்கொண்ட பத்திரத்தை வழங்காமை (GRN), நான்கொடைகளாக கிடைக்கப் பெற்ற மருத்துவப் பொருட்களை உரிய முறையில் களஞ்சியப்படுத்தி விநியோகிக்காமை, மருத்துவப் பொருட்கள் காலாவதியாதல், மருத்துவப் பொருட்களின் முகாமைத்துவ தகவல் வலையமைப்பை (MSMIS) இற்றைப்படுத்தாமை போன்ற பல்வேறு சிக்கல்கள் தொடர்பில் இந்தக் குழுக் கூட்டத்தில் விசேட அவதானம் செலுத்தப்பட்டது.

இந்தக் குழுக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண, வைத்திய கலாநிதி சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே, பிரசன்ன ரனவீர், பாராளுமன்ற உறுப்பினர்களான திஸ்ஸ அத்தநாயக்க, அஷோக் அபேசிங்க, நிரோஷன் பெரேரா, வைத்திய கலாநிதி உபுல் கலப்பத்தி, காதர் மஸ்தான், வீரசுமன வீரசிங்க மற்றும் சுகாதார அமைச்சு உள்ளிட்ட நிறுவனங்களின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment