ஜனாதிபதியுடன் பேச்சு நடத்த TNA எந்நேரமும் தயார், அழைப்பிற்காக காத்திருக்கின்றோம் : சர்வதேசத்தின் மனதை வெல்ல முதலில் நாட்டிலுள்ள தமிழரின் மனங்களை அரசு வெல்ல வேண்டும் என்கிறார் சம்பந்தன் - News View

About Us

About Us

Breaking

Monday, October 18, 2021

ஜனாதிபதியுடன் பேச்சு நடத்த TNA எந்நேரமும் தயார், அழைப்பிற்காக காத்திருக்கின்றோம் : சர்வதேசத்தின் மனதை வெல்ல முதலில் நாட்டிலுள்ள தமிழரின் மனங்களை அரசு வெல்ல வேண்டும் என்கிறார் சம்பந்தன்

புதிய அரசியலமைப்பு மற்றும் தமிழ் மக்கள் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் எப்போதும் பேச்சு நடத்த நாம் தயாராக இருக்கின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி. தெரிவித்துள்ளார். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தைக்கான அழைப்பு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடமிருந்து இன்னமும் வரவில்லை. அழைப்புக் கிடைத்தால் நேரடிப் பேச்சு நடத்த நாம் தயார். 

31ஆம் திகதி பிரித்தானியாவுக்கு செல்லும் ஜனாதிபதி, அந்தப் பயணத்தை நிறைவு செய்துகொண்டு நாடு திரும்பிய பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்துவார் என்று வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கதாகும்

இது சம்பந்தமாக அவரிடன் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர், பேச்சுவார்த்தைக்கான அழைப்பு அவரிடமிருந்து இன்னமும் வரவில்லை. இந்நிலையில், இம்மாத இறுதியில் வெளிநாடு செல்லும் ஜனாதிபதி, அடுத்த மாத முற்பகுதியில் நாடு திரும்பியதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களைச் சந்திப்பார் என்று வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் ஆங்கில ஊடகம் ஒன்றிடம் கூறியுள்ளார்.

எனினும், இது தொடர்பில் உத்தியோகபூர்வ அழைப்பு எதுவும் ஜனாதிபதி செயலகத்திலிருந்து எமக்கு இதுவரை வரவில்லை. அப்படி ஒரு அழைப்பு வந்தால் வரவேற்கத்தக்கது.

சர்வதேசத்தின் மனதை ஜனாதிபதி வெல்ல வேண்டுமெனில் முதலில் நாட்டிலுள்ள தமிழர்களின் மனதை அவர் வெல்ல வேண்டும். தேசிய பிரச்சினைக்கு புதிய அரசியலமைப்பு ஊடாக நிரந்தர தீர்வை ஜனாதிபதி கொண்டுவந்தால்தான் இங்குள்ள ஒட்டு மொத்த தமிழர்களின் மனதை அவரால் வெல்ல முடியும் என்றார்.

அப்துல் சலாம் யாஷிம்

No comments:

Post a Comment