தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பு இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுவருக்கு கடிதம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 6, 2021

தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பு இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுவருக்கு கடிதம்

(நா.தனுஜா)

இலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை வழங்குவதற்கு முன்னதாக, முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்களில் பணியாற்றும் ஊழியர்களின் நிலை தொடர்பில் ஆராயுமாறு தொழிலாளர் உரிமைகளை உறுதிப்படுத்துவதை இலக்காகக் கொண்டு இயங்கி வரும் ஸ்டான்ட் அப் அசோசியேஷன் என்ற அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அஷிலா தந்தெனிய இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுவரிடம் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்களில் பணிபுரியும் ஊழியர்கள் முகங்கொடுத்திருக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு கால அவகாசத்தை வழங்குமாறும் அவர் ஐரோப்பிய ஒன்றியத் தூதுவருக்கான கடிதத்தில் கோரியுள்ளார்.

அக்கடிதத்தில் அவர் மேலும் கூறியிருப்பதாவது, இலங்கை முதலீட்டுச் சபையின் கீழ் பதினைந்து முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்கள் இயங்குகின்றன. அவற்றில் சுமார் மூன்றரை இலட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றுகின்றார்கள். இலங்கை அதன் வருடாந்த ஏற்றுமதி வருவாயில் 14 சதவீதமான வருமானத்தை இதனூடாகப் பெற்றுக் கொள்கின்றது.

தொழிலாளர்கள் உரிமைகளைப் பாதுகாப்பதற்கென தொழிற்துறைத் தகராறு சட்டம், தொழிற்சாலைகள் சட்டம், இலங்கை முதலீட்டு வலயச் சட்டம், தொழிலாளர்கள் பணி நீக்கச் சட்டம் என்பன உள்ளடங்கலாக பல சட்டங்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருப்பதுடன் அதனுடன் தொடர்புடைய ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடனங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ள போதிலும், தொழிற்சாலை உரிமையாளர்களால் அவை உரியவாறு பின்பற்றப்படுவதில்லை.

அதுமாத்திரமன்றி முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்களில் பணி புரியும் ஊழியர்களைப் பாதுகாப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் அரசாங்கமும் முதலீட்டுச் சபையும் பின்நிற்கின்றன.

பிரன்டிக்ஸ் நிறுவனத்தில் கடந்த வருடம் ஏற்பட்ட கொவிட்-19 வைரஸ் பரவல் கொத்தணி தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையானது, தொழிற்சாலை உரிமையாளர்களின் அழுத்தத்தின் காரணமாக இன்னமும் வெளியிடப்படவில்லை.

இதனால் தொழில்சாலை உரிமையாளர்கள் பலர் அரசாங்கத்தை விடவும் பலம் வாய்ந்தவர்களாக மாறியிருப்பதுடன் அதிக இலாபம் உழைப்பதை மாத்திரம் நோக்காகக் கொண்டு தொழிலாளர்களின் உரிமைகளைப் புறக்கணிக்கின்றனர்.

கொவிட்-19 வைரஸ் பரவலையடுத்து நாடளாவிய ரீதியில் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போதிலும், முதலீட்டு ஊக்குவிப்பு வலய செயற்பாடுகள் அத்தியாவசிய சேவை பட்டியலில் சேர்க்கப்பட்டு, அங்கு பணி புரியும் ஊழியர்கள் தமது அன்றாட பணிகளை முன்னெடுப்பதற்காக வரவழைக்கப்பட்டார்கள்.

இருப்பினும் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்ட ஏனைய துறையினருக்கு வழங்கப்பட்ட வசதிகள் மற்றும் சலுகைகள் என்பன முதலீட்டு ஊக்குவிப்பு வலய ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை என்பதுடன் அவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலேயே தமது பணிகளை முன்னெடுத்தார்கள்.

தொழிற்சாலைகளில் கொவிட்-19 வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு அவசியமான சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பதற்கு உரிமையாளர்கள் தவறியமையினால், பாதுகாப்பற்ற சூழலில் பணியாற்றிய சுமார் 50,000 தொழிலாளர்கள் கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளானார்கள். அதுமாத்திரமன்றி தொற்றுக்குள்ளான காலப்பகுதியிலும் அவர்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலையேற்பட்டது.

எனவே இவ்வாறானதொரு சூழ்நிலையில் இலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை வழங்குவதற்கு முன்னதாக, முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்களில் பணியாற்றும் ஊழியர்களின் நிலை தொடர்பில் ஆராயுமாறும் இது பற்றிக் கலந்துரையாடுவதற்காக கால அவகாசத்தை வழங்குமாறும் கோருகின்றேன் என்று அவர் அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment