எமது சிறு கட்சி கலந்துரையாடலில் ஜேவீபி கலந்துகொள்ளாதது தொடர்பில் கவலையடைகிறேன் - தமுகூ தலைவர் மனோ கணேசன் - News View

About Us

About Us

Breaking

Sunday, October 31, 2021

எமது சிறு கட்சி கலந்துரையாடலில் ஜேவீபி கலந்துகொள்ளாதது தொடர்பில் கவலையடைகிறேன் - தமுகூ தலைவர் மனோ கணேசன்

தேர்தல் முறைமை சீர்திருத்தம் தொடர்பில் நேற்று நடைபெற்ற சிறு கட்சிகளின் கலந்துரையாடலில் கலந்துக்கொள்ளும்படி ஜேவீபி தலைவர் நண்பர் அனுர திசாநாயக்காவை ஏற்பாட்டாளர்களின் சார்பாக நான் நேரடியாக அழைத்திருந்தேன். அதேபோல் நண்பர் விஜித ஹேரதுக்கும் நான் நேரடியாக அழைப்பு விடுத்திருந்தேன். நிகழ்வில் கலந்துக்கொள்வதாகவே இருவரும் என்னிடம் கூறினார்கள். ஆனால், ஜேவீபி சார்பாக எவரும் கலந்துக்கொள்ளவில்லை. இதையிட்டு நான் கவலையடைகிறேன். சிறுகட்சி என்றால் தமிழ், முஸ்லிம் சிறுபான்மை கட்சிகள் மட்டுமல்ல. ஜேவீபி போன்ற அரசியல் சிறுகட்சிகளினதும் இருப்புகளை இந்த அரசாங்கம் இன்று கேள்விக்குறிக்கு உள்ளாக்கியுள்ளது என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

இதுபற்றி மனோ கணேசன் எம்பி மேலும் கூறியதாவது, கண்டி சமூக அபிவிருத்தி மன்றம் நடத்திய இந்த கலந்துரையாடல் இந்த தேர்தல் முறைமை சீர்திருத்தம் தொடர்பான கலந்துரையாடல், தமிழ், முஸ்லிம் கட்சிகளுக்கு மட்டும் வரையறையானதல்ல. இதுபற்றி நான் நேற்று எனது உரையில் மிக தெளிவாக கூறினேன்.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமை, 20ம் திருத்தத்தின் மூலம் மேலும் பலமாக்கப்பட்ட பின்னணியில், பாராளுமன்றத்தையும் இரண்டு கட்சிகளுக்கு மட்டும் வரையறை செய்ய இந்த அரசாங்கம் முயல்கிறது. தமிழ், முஸ்லிம் சிறுபான்மை கட்சிகளை போலவே, ஜேவீபி போன்ற மாற்று அரசியல் கொள்கைகளை முன்னெடுக்கும் கட்சிகளின் இருப்பையும் இது இல்லாதொழிக்க முயல்கிறது.

பல கட்சி பிரதிநிதித்துவங்களுக்கு பாராளுமன்றமும், மாகாணசபைகளும் இன்றைய விகிதாசார முறையில் கீழேயே சாத்தியம். எனவே இத்தகைய பன்மைத்தன்மை வாய்ந்த பிரதிநிதித்துவம் மூலமேயே நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை கண்காணிக்க முடியும். இது இந்நாட்டு ஜனநாயகத்துக்கு அடிப்படை அவசியமாகும்.

எனவே இந்த ஜனநாயகத்தை பாதுகாக்கும் பல கட்சி ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் விகிதாசார தேர்தல் முறைமையை பாதுகாக்கும் செயற்பாட்டில் ஜேவீபி முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என நான் விரும்பியிருந்தேன். ஆகவே இதை விளக்கி கூறி, நண்பர்கள் அனுர, விஜித ஆகியோரை நான் ஏற்பாட்டாளர்களின் சார்பில் அழைத்திருந்தேன். ஆனால், அவர்கள் வரவில்லை. அவர்கள் எங்களுடன் இது தொடர்பில் கரங்கோர்க்க வேண்டும் என விரும்புகிறோம். எனினும் இதுபற்றி அவர்கள்தான் இனி முடிவு செய்ய வேண்டும்.

நண்பர் ரிசாத் பதுர்தீன் கொழும்பில் இல்லாததால் கலந்துக்கொள்ளவில்லை. அவரது கட்சி உறுப்பினர்கள் கலந்துக்கொண்டார்கள். ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்து எம்பீக்களுக்கும் களுத்துறையில் பாதீடு தொடர்பில் செயலமர்வு நடைபெறுவதால் எவரும் கலந்துகொள்ளவில்லை. எனினும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நேற்று தொலைபேசியில் அழைத்து எமது கலந்துரையாடல் தீர்மானங்களுக்கு தனது முழுமையான ஆதரவை என்னிடம் தெரிவித்தார்.

No comments:

Post a Comment