பசில் ராஜபக்ஸவும் ஞானசார தேரருடன் உள்ளார் என்பது தெளிவாகியுள்ளது : அரசுக்கு ஆதரவளித்த முஸ்லிம் உறுப்பினர்களின் கடைசி ஆயுதமும் புஷ்வாணமாகியுள்ளது - இம்ரான் - News View

About Us

About Us

Breaking

Sunday, October 31, 2021

பசில் ராஜபக்ஸவும் ஞானசார தேரருடன் உள்ளார் என்பது தெளிவாகியுள்ளது : அரசுக்கு ஆதரவளித்த முஸ்லிம் உறுப்பினர்களின் கடைசி ஆயுதமும் புஷ்வாணமாகியுள்ளது - இம்ரான்

பசில் ராஜபக்ஸவும் ஞானசார தேரருடன் உள்ளார் என்பது தெளிவாகியுள்ளது .அரசுக்கு ஆதரவளித்த முஸ்லிம் உறுப்பினர்களின் கடைசி ஆயுதமும் இதனால் புஷ்வாணமாகியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ஆளும் கட்சி கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அதாவுல்லா ஞானசார தேரர் தொடர்பாக வெளியிட்ட கருத்தையும் அதற்கு அமைச்சர் பசில் ராஜபக்ஸ வழங்கிய பதிலையும் ஊடகங்கள் வாயிலாக அறிய கிடைத்தது.

இது தொடர்பாக பசில் ராஜபக்ஸ அளித்த பதிலில் இருந்து அவரும் ஏனைய ராஜபக்ஸக்களை போல் ஞானசார தேரருடனேயே உள்ளார் என்பது தெளிவாக தெரிந்தது.

அரசுக்கு ஆதரவளிக்கும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பசில் ராஜபக்ஸ இனவாதமற்றவர், முஸ்லிம்களுக்கு சார்பானவர், அவர் ஜனாதிபதியானால் இனவாதிகளை அடித்து விரட்டி விடுவார் என்ற பிரச்சாரத்தையே இதுவரை காலமும் முன்னெடுத்து வந்தனர்.

இவ்வாறு அடுத்த தேர்தலில் பசில் ராஜபக்ஸவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய அவர்கள் வைத்திருக்க கடைசி ஆயுதமும் இதன் மூலம் புஷ்வாணமாகிவிட்டது.

பசில் ராஜபக்ஸ உட்பட அனைத்து ராஜபக்ஸக்களும் ஞானசார தேரரின் பின்னால் உள்ளனர். ராஜபக்சக்களின் அரசியல் நிகழ்ச்சி நிரலையே ஞானசார தேரர் நிறைவேற்றுகிறார்.

இதுவரை காலமும் வாயை மூடியிருந்த பாராளுமன்ற உறுப்பினர் அதாவுல்லா இப்பொழுதாவது வாயை திறந்திருப்பது பாராட்டுக்குரியது.

அமைச்சு பதவி கிடைக்கவில்லை, அவர் எதிர்பார்த்த சலுகைகள் எதுவும் கிடைக்கவில்லை. இருந்தும் இருபதாம் திருத்த சட்டமூலத்துக்கு வாக்களித்தார், துறைமுக நகர சட்டமூலத்துக்கு ஆதரவளித்தார். காதி நீதிமன்றம் ,மாடறுப்பு தடை என பல சட்டமூல திருத்தங்கள் தொடர்பாக பேசப்பட்டபோதும் அமைதியாக இருந்தார். ஆனால் தொடர்ந்தும் இவ்வாறு அமைதியாக இருந்தால் தனது அரசியல் இருப்பே கேள்விக்குறியாக மாறிவிடும் என உணர்ந்து இப்போது பேசியுள்ளார்.

அத்துடன் சீனாவுக்கு துறைமுக நகரம், இந்தியாவுக்கு மேற்கு முனையம் என வழங்கப்பட்ட போது அமைதியாக இருந்த அதாவுல்லா உட்பட விமல் கூட்டணி அமெரிக்காவுக்கு மின்னுற்பத்தி நிலையத்தை வழங்கும்போது கூட்டாக எதிர்ப்பதின் பின்னணியில் சீனா உள்ளதா என்ற சந்தேகமும் நிலவுகிறது என்றார்.

No comments:

Post a Comment