மக்களே அவதானம் ! மூன்று நீர்த் தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, October 31, 2021

மக்களே அவதானம் ! மூன்று நீர்த் தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

நாட்டில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக தெதுரு ஓயா, ராஜாங்கன மற்றும் அங்கமுவ ஆகிய நீர்த் தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

குறித்த நீர்த் தேக்கங்களில் நீரின் அளவு அதிகரித்துள்ளமையால் இவ்வாறு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

இதன்படி, தெதுரு ஓயா நிர்த் தேக்கத்தின் நான்கு வான் கதவுகள் மூன்று அடி வரையும், ராஜாங்கன நீர்த் தேக்கத்தின் நான்கு வான் கதவுகள் நான்கு அடி வரையும், அங்கமுவ நீர்த் தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் ஒரு அடி வரையும் திறக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய கடமை நேர அதிகாரியொருவர் தெரிவித்தார்.

குறித்த நீர்த் தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால், தெதுரு ஓயா, ராஜாங்கன மற்றும் அங்கமுவ நீர்த் தேக்கங்களுக்கு அண்டிய தாழ் நிலப் பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்களை அவதானமாக இருக்குமாறும் அந்த அதிகாரி கேட்டுள்ளார்.

மேலும், தொடர்ச்சியாக மழை பெய்தால் குறித்த நீர்த் தேக்கங்களின் மேலதிக வான் கதவுகளும் திறக்கப்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் பல பிரதேசங்கள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளன.

புத்தளம் மாவட்டத்தில் உள்ள 16 பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட தாழ் நிலப் பகுதிகள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ள போதிலும், இதுவரை எவரும் இடம்பெயரவில்லை என புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் கடமைநேர அதிகாரி மேலும் கூறினார்.

புத்தளம் நிருபர் ரஸ்மின்

No comments:

Post a Comment