நா.தனுஜா
நாட்டிற்கான கிருமிநாசினி தேவைப்பாட்டில் 92 சதவீதமானவற்றை விநியோகிக்கும் உரிமையை இரு பெரும் பல் தேசிய நிறுவனங்களிடம் வழங்குவதற்கான ஆயத்தங்கள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் விளைவாக விவசாயிகள் வெகுவாகப் பாதிப்படைய நேர்வதுடன் மாத்திரமன்றி, நாட்டின் விவசாயத்துறை பாரிய அழிவிற்கு முகங்கொடுக்கும் என்று ஊவா, மத்திய மற்றும் தென் மாகாணங்களுக்கான முன்னாள் ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னகோன் எச்சரித்துள்ளார்.
இது குறித்து தெளிவுபடுத்தும் வகையில் முன்னாள் ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னகோனால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது, விவசாயம் மற்றும் பயிர்ச் செய்கை நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் கிருமிநாசினிகளை விநியோகிப்பதற்கான உரித்தை இரண்டு பல் தேசிய நிறுவனங்களிடம் வழங்குவதற்கான முயற்சிகள் விவசாயத்துறை அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இரசாயன உரத்தின் பயன்பாட்டை இல்லாதொழிப்பதற்கான கொள்கையின் ஊடாக அதற்குத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, தற்போது இரசாயன உரத்தை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது.
அதேபோன்று மறுபுறம் நாட்டிற்கான கிருமிநாசினி தேவைப்பாட்டில் 92 சதவீதமானவற்றை விநியோகிக்கும் உரிமையை இரு பெரும் பல் தேசிய நிறுவனங்களிடம் வழங்குவதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதன் மூலம் கமநல சேவை மத்திய நிலையங்கள் ஊடாக விவசாயிகளின் பயிர்ச் செய்கை நடவடிக்கைகளுக்கு அவசியமான கிருமிநாசினிகள் மற்றும் மருந்துகளைப் பணத்திற்கு விற்பனை செய்வதற்குத் தனியார் வர்த்தகர்கள் முயற்சிக்கின்றனர்.
சுதந்திர சந்தை செயற்பாடுகளில் தடைகளை ஏற்படுத்தி, தமக்கு நெருக்கமானவர்களைப் பயனடையச் செய்யும் நோக்கிலேயே அரசாங்கத்தினால் இத்தகைய செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
கடந்த காலங்களில் இடம்பெற்ற மத்திய வங்கி பிணைமுறி மோசடி, சீனி மோசடி போன்று இதுவும் பட்டபகலில் இடம்பெறுகின்ற கொள்ளையாகும்.
விவசாயிகள் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டு, அதற்கு அவசியமான கிருமிநாசினிகள் மற்றும் மருந்துப் பொருட்களை நீண்ட வரிசைகளில் நின்று கொள்வனவு செய்து, மீண்டும் தமது பயிர் நிலங்களுக்குத் திரும்பும்போது அவை முழுமையாகச் சேதமடைந்து விடும் நிலையே காணப்படுகின்றது.
விவசாய அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதித் ஜயசிங்க சேதன உரம் தொடர்பான ஓர் முகவராக செயற்பட்டார். ஆனால் இரசாயன உரத்தை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டவுடன், ஏற்கனவே வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் தவறானது என்றுகூறி அரசாங்கத்தின் கொள்கையைக் காட்டிக் கொடுத்தார். இவற்றிலிருந்து அரசாங்கத்திடம் எந்தவொரு துறைசார்ந்தும் நிலையானதொரு கொள்கை இல்லையென்பது தெளிவாகியுள்ளது.
எனவே தற்போதேனும் சேதன உரம் தொடர்பான 'நாடகத்தை' ஜனாதிபதி முடிவிற்குக் கொண்டுவர வேண்டும். அரசாங்கத்திற்கு நெருக்கமான குழுவினர் நாட்டின் விவசாயத்துறையை அழித்தொழிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கக் கூடாது என்று ரஜித் கீர்த்தி தென்னகோன் அவ்வறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment