இந்தியாவின் இரட்டை நிலைப்பாடுகளால் இலங்கை முஸ்லிம்கள் பெரும் ஏமாற்றம் - நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட் - News View

Breaking

Monday, October 11, 2021

இந்தியாவின் இரட்டை நிலைப்பாடுகளால் இலங்கை முஸ்லிம்கள் பெரும் ஏமாற்றம் - நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட்

ஏ.எச்.ஏ. ஹுஸைன் 

முஸ்லிம்களின் அரசியல் தீர்வு அதிகாரப் பகிர்வு மற்றும் அபிலாஷைகள் தொடர்பான விடயங்களில் இந்தியா தொடர்ந்தும் இரட்டை முகத்துடன் செயற்படுவதாக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

சம காலத்தில் இலங்கை தொடர்பான இந்தியாவின் ஈடுபாடு தொடர்பாகவும் அதில் இலங்கை முஸ்லிம்களைப்பற்றிய இந்தியாவின் கண்ணோட்டம் தொடர்பாகவும் நஸீர் அஹமட் செவ்வாய்க்கிழமை 12.10.2021 கருத்து வெளியிட்டார்.

இதுபற்றி மேலும் தெரிவித்த அவர் இந்திய - இலங்கை ஒப்பந்த காலம்தொட்டு முஸ்லிம்களின் அரசியல் தீர்வு அதிகாரப் பகிர்வு மற்றும் அபிலாஷைகள் தொடர்பான விடயங்களில் இந்தியா தொடர்ந்தும் இரட்டை முக செயற்பாடு நீடித்து வருவதாகச் சுட்டிக்காட்டிய அவர் இவ்வாறான அபிலாஷைகளை பகிர்ந்துகொள்வதற்கு சாத்தியமான தெரிவைத் தேட வேண்டிய நிலைமைகள் ஏற்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

இலங்கையின் அரசியல் பிரச்சினையில் தமிழர்களுக்குச் சம அளவிலான இழப்புக்கள் முஸ்லிம்களுக்கும் ஏற்பட்டிருக்கிறது. உயிரழிவு இடப்பெயர்வு உடமைகள் சேதம் எல்லாம் முஸ்லிம் சமூகத்திற்கும் ஏற்பட்டுள்ளது.

எனினும் தமிழர்களுக்கு தீர்வு கிடைப்பதற்கு மட்டுமே இந்தியா அதிக அக்கறையுடன் செயற்படுகிறது. அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தினூடாக மாகாண சபை முறைமைகளை அறிமுகப்படுத்தியதும் இந்தியாதான்.

வடக்கு கிழக்கு மாகாணங்களும் இந்தியாவின் அழுத்தத்துடன்தான் இணைக்கப்பட்டன. இந்த நிலைமைகளால் முஸ்லிம்களுக்கு ஏற்படப்போகும் ஆபத்துக்கள் பற்றி எந்தக் கரிசனையும் இந்தியாவுக்கு இருக்கவில்லை.

மேலும் இவ்விடயங்களில் முஸ்லிம்களின் அபிலாஷைகள் ஆதங்கங்கள் பற்றி இதுவரை எந்தக் கலந்துரையாடல்களும் நடத்தப்பட்டதும் கிடையாது.

இவை மட்டுமல்ல இலங்கைக்கு வரும் இந்திய உயரதிகாரிகள் எவரும் முஸ்லிம் அரசியல் தலைவர்களையோ அல்லது முஸ்லிம் சிவில் சமூகப்பிரதிநிதிகளையோ சந்திப்பதும் இல்லை.

அண்மையில் கூட இலங்கைக்கு வந்த இந்திய வெளிவிவகார செயலாளர் ஸ்ரீஹர்ஸ் வர்தன் ஷ்ரிங்லா (Shri Harsh Vardhan Shringla)கூட எந்த இலங்கையின் எந்தவொரு முஸ்லிம் அரசியல் வாதியையும் சந்திக்கவில்லை.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீமை கூட சந்திப்பதில் இவர் நாட்டம் காட்டவில்லை. இதனால் இந்தியா குறித்த நம்பிக்கையை முஸ்லிம்கள் இழந்து வருகின்றனர்.

ஐரோப்பா அமெரிக்கா போன்ற சக்திகள் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் செல்வாக்கில்தான் இலங்கை விடயத்தை அணுக முயற்சிக்கின்றன.

இன்னும் தமிழ் கட்சிகளோ அல்லது தலைமைகளுமோ முஸ்லிம்கள் விடயத்தில் மாற்றாந்தாய் மனநிலையுடனே செயற்படுகின்றன.

இதனால்தான் சம அளவிலான நியாயங்களைப் பெற அல்லது சந்தர்ப்பங்களைப் பெறும் சூழலுக்காக வேறு சாத்திய வழிகளை முஸ்லிம்கள் தேட நேரிட்டுள்ளது.

இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வில் முஸ்லிம்கள் எழுபது வருடங்களாக ஓரங்கட்டப்படுவதனால் இன்னும் நிரந்தர தீர்வு கிடைக்காமல் உள்ளது.

இது இனப்பிரச்சினைத் தீர்வில் முஸ்லிம்களுக்குரிய முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகின்றது என்ற யதார்த்தத்தை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.” என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment