தீப்பரவலுக்குள்ளான கப்பல் முருங்கைக் கற்பாறைகளில் சேதத்தை ஏற்படுத்திய வண்ணம் மூழ்கிக் கொண்டிருக்கின்றது : இன்னும் சில காலத்தில் சீன மொழி இலங்கையின் உத்தியோகபூர்வ மொழியாக்கப்படும் - கலாநிதி அஜந்தா பெரேரா - News View

About Us

About Us

Breaking

Sunday, October 17, 2021

தீப்பரவலுக்குள்ளான கப்பல் முருங்கைக் கற்பாறைகளில் சேதத்தை ஏற்படுத்திய வண்ணம் மூழ்கிக் கொண்டிருக்கின்றது : இன்னும் சில காலத்தில் சீன மொழி இலங்கையின் உத்தியோகபூர்வ மொழியாக்கப்படும் - கலாநிதி அஜந்தா பெரேரா

(நா.தனுஜா)

தீப்பரவலுக்குள்ளான எம்.வி. எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் கடலின் கீழுள்ள முருங்கைக் கற்பாறைகளில் சேதத்தை ஏற்படுத்திய வண்ணம் மூழ்கிக் கொண்டிருக்கின்றது. இவ்வாறு சேதமடைந்துள்ளவற்றில் வெறுமனே 3 சென்ரி மீற்றர் முருங்கைக் கற்பாறைகள் மீளுருவாவதற்கு சுமார் ஒரு வருட காலம் தேவைப்படும். எனவே பல வருட காலமாக சிறிது சிறிதாக உருவான முருங்கைக் கற்பாறைகளை எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் படிப்படியாக அழித்துக் கொண்டிருக்கின்றது என்று சூழலியளார் கலாநிதி அஜந்தா பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.

அதுமாத்திரமன்றி பொட்டாசியம் குளோரைட்டு அடங்கிய உரத்தை நாட்டிற்குக் கொண்டுவந்துவிட்டு, அது இரசாயன உரம் அல்ல என்று கூறுகின்றார்கள். அந்த உரம் நீரில் கரைந்து ஆறுகள், குளங்களுடன் கலந்து பாரதூரமான பாதிப்புக்கள் ஏற்படும்போதுதான் அது என்ன உரம் என்பது பலருக்கும் தெரியவரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு அரசாங்கத்தின் முறைகேடான செயற்பாடுகள் மற்றும் தீவிரமடைந்து வரும் சூழல் மாசடைவுகள் தொடர்பில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது, நாட்டு மக்கள் வாக்களித்து பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் மிக மோசமான சுயநலவாதிகளாவர். அவர்களில் பலர் பௌத்த தேரர்களைப் பயன்படுத்தியே வாக்குகளைப் பெற்றுக் கொண்டார்கள். அத்தகைய நபர்களையே மக்கள் தமது விருப்பின் பேரில் பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைத்திருக்கின்றார்கள்.

ஒருபுறம் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து செல்கின்றது. மறுபுறம் சுற்றுச் சூழல் மாசடைவு தீவிரமடைந்துள்ளது. அதுமாத்திரமன்றி நாட்டின் எதிர்காலம் குறித்து எதனையும் எதிர்வுகூற முடியாத நிலையில் பொதுமக்கள் இருக்கின்றார்கள்.

எந்தவொரு நாட்டினதும் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு முறையான செயற்திட்டமொன்று இருக்க வேண்டும். அந்த வகையில் 'சுபீட்சமான எதிர்காலத்திற்கான நோக்கு' என்ற கொள்கைளை முன்நிறுத்தியே தற்போதைய அரசாங்கம் தேர்தலில் களமிறங்கியது.

அவ்வாக்குறுதியின்படி தற்போது சுபீட்சமடைந்திருப்பது யார்? உண்மையைக் கூறுவதானால், சீனாவே சுபீட்சம் பெற்றிருக்கின்றது. இலங்கைக்கு வழங்கிய கடன்களுக்குப் பதிலாக நாட்டின் பெறுமதி வாய்ந்த சொத்துக்களையும் நிலப்பகுதிகளையும் சீனா தன்வசமாக்கிக் கொண்டிருக்கின்றது. இன்னும் சில காலத்தில் சீன மொழி இலங்கையின் உத்தியோகபூர்வ மொழியாக்கப்படும். அதனைத் தொடர்ந்து சீன ஜனாதிபதி இலங்கைக்கு வருகை தந்து, இதுவும் தமது நாடு என்று கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

மறுபுறம் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் இந்தியாவும் சுபீட்சமடைந்திருக்கின்றது. நாம் பல தரப்பட்ட பொருட்களையும் கொள்வனவு செய்கின்ற ஜோன்கீல்ஸ் நிறுவனம் இந்தியாவின் அதானி நிறுவனத்திற்குச் சொந்தமானதாகும்.

அத்தோடு முத்துராஜவெலவிற்குச் சொந்தமான இடத்தில் மின் நிலையமொன்றை அமைத்து, அதனை அமெரிக்காவிற்கு வழங்கி அவர்களுக்கும் அரசாங்கம் சுபீட்சமளிக்கவுள்ளது.

எனவே தற்போதைய அரசாங்கம் ஆட்சிபீடமேறியதன் விளைவாக பிற நாடுகள் சுபீட்சமடைந்திருக்கும் அதேவேளை, எமது நாடு சீர்குலைவடைந்திருப்பதை இப்போதேனும் நாட்டு மக்கள் புரிந்துகொண்டிருப்பார்கள்.

அடுத்ததாக தீப் பரவலுக்குள்ளான எம்.வி. எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் கடலின் கீழுள்ள முருங்கைக் கற்பாறைகளில் சேதத்தை ஏற்படுத்திய வண்ணம் மூழ்கிக் கொண்டிருக்கின்றது. இவ்வாறு சேதமடைந்துள்ளவற்றில் வெறுமனே 3 சென்ரி மீற்றர் முருங்கைக் கற்பாறைகள் மீளுருவாவதற்கு சுமார் ஒரு வருட காலம் தேவைப்படும்.

எனவே பல வருட காலமாக சிறிது சிறிதாக உருவான முருங்கைக் கற்பாறைகளை எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் படிப்படியாக அழித்துக் கொண்டிருக்கின்றது.

2004 ஆம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தினால் ஒரே தடவையில் சுமார் 35,000 பேர் உயிரிழந்தார்கள். அடுத்த சுனாமி அனர்த்தத்தில் எத்தனை பேர் மரணிப்பார்கள் என்று கணிப்பீடுசெய்து பார்க்க முடியாத நிலையில் நாம் இருக்கின்றோம்.

நைற்றிரிக் அமிலம் வைக்கப்பட்டிருந்த, இலகுவாகத் தீப் பரவலுக்குள்ளாகக் கூடிய எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் நாட்டிற்குள் நுழைவதைத் தவிர்ப்பதற்கான வாய்ப்புக்கள் இருந்த போதிலும், அது உள்நுழைவதற்கு அனுமதி வழங்கப்பட்டது என்பது அனைவரும் அறிந்த விடயமாகும்.

நைற்றிரிக் அமிலம் ஏற்றப்பட்டிருந்த கப்பலில் மில்லியன் கணக்கான பிளாஸ்டிக் துணிக்கைகள் எவ்வாறு ஏற்றப்பட்டன? அத்தோடு இக்கப்பல் இலகுவாகத் தீப்பிடிக்கக் கூடியவாறான கூறுகளும் வைக்கப்பட்டிருந்தன.

எனவே எமது கடற் பரப்பிற்குள் தீப் பரவலை ஏற்படுத்தி, அதனை எமது கடலிலேயே மூழ்கடிக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட கப்பலே இதுவாகும்.

மறுபுறம் பொட்டாசியம் குளோரைட்டு அடங்கிய உரத்தை நாட்டிற்குக் கொண்டுவந்துவிட்டு, அது இரசாயன உரம் அல்ல என்று கூறுகின்றார்கள். அந்த உரம் நீரில் கரைந்து ஆறுகள், குளங்களுடன் கலந்து பாரதூரமான பாதிப்புக்கள் ஏற்படும்போதுதான் அது என்ன உரம் என்பது பலருக்கும் தெரிய வரும்.

அதேவேளை தமது நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உரம் தொடர்பில் எமது நாட்டின் தாவரவியல் பரிசோதனை மையத்தினால் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள் தவறானவை என்று சீனா கூறுகின்றது. ஆனால் இவை தொடர்பில் அரசாங்கம் எதுவும் கூறாமல், வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றது என்று குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment