அரசாங்கத்திற்குள் இருக்கும் எதிர்க்கட்சியாக நாம் செயற்படுகின்றோம் : ஆட்சிக்கு வந்தும் மாற்றங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்பதை ஏற்றுக் கொள்வேன் - ஆதங்கத்தில் உதய கம்மன்பில - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 12, 2021

அரசாங்கத்திற்குள் இருக்கும் எதிர்க்கட்சியாக நாம் செயற்படுகின்றோம் : ஆட்சிக்கு வந்தும் மாற்றங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்பதை ஏற்றுக் கொள்வேன் - ஆதங்கத்தில் உதய கம்மன்பில

கெரவலபிட்டிய மின் நிலையத்தை அமெரிக்காவிற்கு கொடுத்ததன் மூலமாக சீனாவை நாம் பகைத்துக் கொள்ள நேர்ந்துள்ளது. அதுமட்டுமல்லாது எரிவாயு ஆதிக்கம் அமெரிக்காவின் கைகளுக்கு சென்ற பின்னர் நாட்டின் தேசிய விவகாரங்களில் தலையிட்டு நாட்டை சமஷ்டியாக்கும் அழுத்தம் கொடுக்கப்படலாம் எனவும் வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில கூறுகின்றார்.

அரசாங்கத்திற்குள் இருக்கும் எதிர்க்கட்சியாக நாம் செயற்பட்டுக் கொண்டுள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார்.

எரிபொருள் நெருக்கடி நிலைமைகள் மற்றும் அரசாங்கத்திற்குள் எழுந்துள்ள நெருக்கடி நிலைமைகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், எரிபொருள் எமது பிரதான இறக்குமதியாக உள்ள நிலையில் நாட்டின் ஏதேனும் பொருளாதார நெருக்கடிகள் இருக்கையில் முதலில் எரிபொருள் இறக்குமதியையே அது பாதிக்கும். ஆனால் நாம் அதற்கு இடம் வழங்காது எரிபொருள் இறக்குமதியை மேற்கொண்டு வருகின்றோம். கடந்த காலங்களில் மிகவும் சிரமங்களுக்கு மத்தியில் இறக்குமதி செய்தோம், அடுத்த இரண்டு மாதங்கள் கடினமாக இருக்கும். எமக்கு கிடைக்கும் பணத்தில் எரிபொருள் இறக்குமதிக்கே அதிக செலவுகள் செல்கின்றன.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் அரசாங்கத்தை உருவாக்கும் வேளையில் நாட்டின் பொருளாதாரம் மிக மோசமாக வீழ்ச்சி கண்டுள்ளது, நெருக்கடி நிலைமைகள் உள்ளது என்பதை நாம் கூறினோம், ஆனால் கொரோனா வைரஸ் தொற்று உருவாகும் என நாம் யாருமே எதிர்பார்க்கவில்லை. ஏற்கனவே வீழ்ச்சி கண்டிருந்த பொருளாதாரம் கொரோனா வைரஸ் பரவலினால் மேலும் நசுக்கப்பட்டுள்ளது.

வைரஸ் பரவல் எமது அரசாங்கத்தினால் உருவாகவில்லை. எனினும் மக்கள் இன்று கஷ்டப்படுகின்றனர். ஆனால் இதில் யாரையும் குறை கூறிக்கொண்டு இருக்காது சகலரும் இணைந்து தீர்வுகளை பெற்றுக் கொள்ள வேண்டும்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் எதிர்பார்க்காத பல விடையங்கள் இடம்பெற்றுள்ளன. அரசாங்கம் பல தவறுகளை விடுத்துள்ளது. இவற்றை நாம் கடந்த வாரம் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி சுட்டிக்காட்டினோம். அரசாங்கத்தில் பங்காளிக் கட்சிகளாக நாம் எடுத்துக் கூறிய ஒரு சில முக்கிய விடயங்களை தீர்மானம் எடுக்கும் நபர்கள் செய்யவில்லை.

வாக்குறுதியளித்த விடயங்களை செய்யாதிருப்பத்தை விடவும், வாக்குறுதி வழங்காத விடயங்களை செய்கின்றமை அரசாங்கத்தின் தவறாகும். அதுமட்டுமல்ல நாம் ஆட்சிக்கு வந்துள்ள நிலையிலும் மாற்றங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்பதை நான் ஏற்றுக் கொள்வேன்.

அரசாங்கத்தில் முறையான பேச்சுவார்த்தைகள் மூலமாக தீர்வுகள் எட்டப்படுவதில்லை. குறிப்பாக கெரவலபிட்டிய மின் உற்பத்தி நிலைய விடயத்தில் எமது எதிர்ப்பை தொடர்ந்தும் நாம் முன்வைத்து வருகின்றோம். நள்ளிரவு 12 மணிக்கு செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் என்னவென்பதை நாம் இன்னமும் பார்க்கவில்லை.

அதுமட்டுமல்ல கேள்வி மனுக் கோரலுக்கு விடப்பட்ட ஒரு அபிவிருத்தி வேலைத்திட்டத்தை கேள்வி மனுக் கோரலுக்கு பங்குபற்றாத அமெரிக்காவுக்கு கொடுத்தமை பிழையான தீர்மானமாகும்.

ஏற்கனவே இந்தியா, சீனா, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாட்டுகள் இதில் ஏற்கனவே உடன்பட்டிருந்தன. அவ்வாறான நிலையில் சீனாவுக்கே அதிகளவில் இந்த வேலைத்திட்டம் வழங்கப்பட அதிக வாய்புகள் இருந்தன, கடந்த காலத்தில் மனித உரிமைகள் விடயத்தில் இலங்கையை பாதுகாத்த சீனாவை நிராகரித்து விட்டு எமக்கு எதிராக பிரேரணைகளை கொண்டுவந்து தண்டிக்க நினைத்த அமெரிக்காவிற்கே இதனை வழங்குவதன் மூலமாக சீனாவை நாம் பகைத்துக் கொள்ள நேரிடும்.

அதனையும் தாண்டி எரிவாயு ஆதிக்கத்தை அமெரிக்கா கையில் கொடுத்து விட்டு, நாட்டை சமஷ்டியாக்காவிட்டால் எரிவாயு வழங்க மாட்டோம் என அமெரிக்கா கூறலாம். அவ்வாறான நிலையில் நாம் என்ன செய்வது, நாட்டை இருளில் தள்ளினால் என்ன செய்வது? அதுமட்டுமல்ல மன்னார் எரிவாயு திட்டத்தையும் அமெரிக்கா கைப்பற்றினால் இலங்கையின் பொருளாதாரத்தை முழுமையாக பாதிக்கும். இவ்வாறான பல்வேறு காரணிகள் எம்மை சார்ந்துள்ளது.

இதனை அமைச்சரவையில் நான் எடுத்துக் கூறினேன். அமெரிக்காவின் அடிமையாக மாற்றும், பூகோள அரசியலில் குழப்பங்களை ஏற்படுத்தும் தீர்மானங்களை எடுக்கும் நபர்கள் அரசாங்கத்தில் இருக்கின்றனர். யார் தவறிழைத்தாலும் தவறு தவறு தான். எமது தலைவரா அல்லது எதிர்க்கட்சி தலைவரா என்பது முக்கியமல்ல. ஆகவே இப்போது நடக்கும் தவறுகளை சுட்டிக்காட்டி அரசாங்கத்திற்குள் இருக்கும் எதிர்க்கட்சியாக நாம் செயற்பட்டுக் கொண்டுள்ளோம் என்றார்.

கேசரி

No comments:

Post a Comment