சமையல் எரிவாயு விலையேற்றத்தினால் மாற்றுவழிகளைத் தேடும் மக்கள் : சூடு பிடிக்கும் மண்ணெண்ணை அடுப்பு வியாபாரம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 13, 2021

சமையல் எரிவாயு விலையேற்றத்தினால் மாற்றுவழிகளைத் தேடும் மக்கள் : சூடு பிடிக்கும் மண்ணெண்ணை அடுப்பு வியாபாரம்

(நா.தனுஜா)

சமையல் எரிவாயு சிலிண்டர் விலையேற்றத்தையடுத்து கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளிலும் மண்ணெண்ணெய் அடுப்பிற்கான கேள்வி சடுதியாக உயர்வடைந்துள்ளது.

அதுமாத்திரமன்றி முன்னைய விற்பனை விலையுடன் ஒப்பிடுகையில் சிறிய மண்ணெண்ணெய் அடுப்பின் விலை 500 ரூபாவினாலும் பெரிய மண்ணெண்ணெய் அடுப்பின் விலை 1,000 - 1,500 ரூபாவினாலும் அதிகரித்துள்ளது.

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தினால் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் புதிய விலைகள் திங்கட்கிழமை வெளியிடப்பட்டன. அதன்படி 12.5 கிலோ கிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 1,182 ரூபாவினாலும் 5 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயுவின் விலை 473 ரூபாவினாலும் 2.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயுவின் விலை 217 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

அதேபோன்று லாப் ரக சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளைப் பொறுத்தமட்டில், 12.5 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயுவின் விலை 984 ரூபாவினாலும் 5 கிலோ கிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டரின் விலை 393 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே கொவிட்-19 வைரஸ் பரவல் காரணமாகப் பலர் தொழில் வாய்ப்பையும் வருமானத்தையும் இழந்திருந்த சூழ்நிலையில், மறுபுறும் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தினால் பொதுமக்கள் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருந்தனர்.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளில் ஏற்பட்ட சடுதியான அதிகரிப்பினால், மக்கள் மாற்றுவழிகளைத்தேட ஆரம்பித்திருக்கின்றார்கள்.

அந்த வகையில் கொழும்பு, புறக்கோட்டையில் உள்ள பல்பொருள் விற்பனை நிலையங்களில் மண்ணெண்ணெய் அடுப்புகளைக் கொள்வனவு செய்வோரின் எண்ணிக்கை கடந்த சில நாட்களில் வெகுவாக அதிகரித்திருப்பதாக அங்குள்ள கடை உரிமையாளரொருவர் கூறினார்.

புறக்கோட்டையில் சமையலறை உபகரணங்களை விற்பனை செய்து வரும் பிறிதொரு வியாபாரியான மொஹமட் அசீஸிடம் சமீப காலத்தில் மண்ணெண்ணெய் அடுப்புக்களுக்கான கேள்வி அதிகரித்திருக்கின்றதா? என்று வினவினோம்.

அதற்கு 'ஆம்' என்று பதிலளித்த அவர், 'சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையேற்றத்தைத் தொடர்ந்து மண்ணெண்ணெய் அடுப்பைக் கொள்வனவு செய்வதில் மக்கள் அதிக நாட்டம் காண்பிக்கின்றார்கள். இவ்வாரத்தில் மண்ணெண்ணெய் அடுப்பைக் கொள்வனவு செய்தவர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டிருக்கின்றது' என்று குறிப்பிட்டார்.

அதுமாத்திரமன்றி மண்ணெண்ணெய் அடுப்பிற்கான கேள்வி உயர்வடைந்ததைத் தொடர்ந்து அதன் விலைகளும் அதிகரித்திருப்பதாக அவர் தெரிவித்தார். அவரது கூற்றின்படி முன்னர் விற்பனை செய்யப்பட்ட விலைகளுடன் ஒப்பிடுகையில், சிறிய மண்ணெண்ணெய் அடுப்பின் விலை 500 ரூபாவினாலும் பெரிய மண்ணெண்ணெய் அடுப்பின் விலை 1,000 - 1,500 ரூபாவினாலும் அதிகரித்திருக்கின்றது.

அதன் பிரகாரம் முன்னர் 2800 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட சில்வர் மண்ணெண்ணெய் அடுப்பு இப்போது 4200 ரூபாவிற்கும் முன்னர் 2,500 விற்பனை செய்யப்பட்ட ஸ்டவ் அடுப்பு இப்போது 4,000 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

அதுமாத்திரமன்றி சமையல் எரிவாயு சிலிண்டர் விலைகள் சடுதியாக அதிகரிக்கப்பட்டமையினால் மண்ணெண்ணெய் அடுப்பிற்கான கேள்வியில் சடுதியாக அதிகரிப்பு ஏற்பட்டது. அதன் விளைவாக சிறிய அடுப்பிற்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக மற்றுமொரு வியாபாரியான ராஜேந்திரன் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

கேசரி 

No comments:

Post a Comment