வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை : இந்த முறை நீர்மூழ்கிக் கப்பல் மூலம் நடத்தியது - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 19, 2021

வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை : இந்த முறை நீர்மூழ்கிக் கப்பல் மூலம் நடத்தியது

நீண்ட தூரம் சென்று இலக்கை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனையை நீர்மூழ்கிக் கப்பல் மூலம் நடத்தியுள்ளது வட கொரியா.

வட கொரியாவுக்கும், அதன் பக்கத்து நாடான தென் கொரியாவுக்கும் இடையே நிரந்தர பகை உள்ளது. தென் கொரியாவுக்கு அமெரிக்கா ஆதரவாக இருக்கிறது.

எனவே தென் கொரியாவையும், அமெரிக்காவையும் மிரட்டும் வகையில் வட கொரியா அடிக்கடி அணுகுண்டு சோதனை, ஏவுகணை சோதனை, நவீன ஆயுத சோதனைகள் போன்றவற்றை நடத்தி வருகிறது.

கடந்த 2 மாதங்களாக இந்த சோதனைகளை வட கொரியா தீவிரப்படுத்தி உள்ளது. அதன்படி சில வாரங்களுக்கு முன்பு ரயிலில் இருந்து ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. அதன் பின்னர் அணுகுண்டை ஏந்தி செல்லும் சக்தி வாய்ந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது.

எதிரிகள் விமானத்தை தாக்கும் புதிய ரக ஏவுகணை சோதனையும் நடந்தது. கடந்த 28ஆம் திகதி அதிக சக்தி வாய்ந்த மற்றொரு ஏவுகணை சோதனையையும் நடத்தினார்கள்.

இந்த நிலையில் வட கொரியா மற்றொரு புதிய ஏவுகணை சோதனையை நடத்தி இருக்கிறது. வட கொரியா நீர் மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவுகணையை ஜப்பான் கடற்பரப்பில் ஏவிப் பரிசோதித்துள்ளதாக தென் கொரியா குற்றம் சாட்டியுள்ளது.

உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை காலை 10:17 மணிக்கு (01:17 GMT) வட கொரியாவின் சின்போவுக்கு அருகில் இருந்து பாலிஸ்டிக் ஏவுகணை ஏவப்பட்டது என்று தென் கொரியாவின் கூட்டுத் தலைமை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தென் கொரியா மற்றும் அமெரிக்காவின் உளவுத்துறை அதிகாரிகள் தற்போது ஏவுகணை சோதனை பற்றிய கூடுதல் விவரங்கள் குறித்து முழுமையான பகுப்பாய்வை நடத்தி வருகின்றனர் என்று தென்கொரியாவின் யோன்ஹாப் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

சமீபத்திய வாரங்களில் வட கொரியா ஹைப்பர்சோனிக் மற்றும் கண்டம் விட்டு கண்டம் செல்லும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைகளல் தீவிரமாக இறங்கியுள்ளனர். இந்த சோதனைகளில் சில கடுமையான சர்வதேச தடைகளை மீறுகின்றன.

ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுதங்களை வட கொரியா சோதனை செய்வதற்கு ஐக்கிய நாடுகள் சபை தடை விதித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment