அரசியல் நோக்கங்களைக் கொண்ட அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கங்களே பரிந்துரைகளை ஏற்க மறுக்கின்றன - நாமல் ராஜபக்ஷ - News View

About Us

About Us

Breaking

Sunday, October 17, 2021

அரசியல் நோக்கங்களைக் கொண்ட அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கங்களே பரிந்துரைகளை ஏற்க மறுக்கின்றன - நாமல் ராஜபக்ஷ

(எம்.மனோசித்ரா)

அரசியல் நோக்கங்களைக் கொண்ட அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கங்களே அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றன. அரசியல் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு மாணவர்களின் எதிர்காலத்தை காட்டிக் கொடுக்க முடியாது. மாணவர்களின் சார்பில் நின்று அவர்களின் கல்விக்கு முன்னுரிமையளிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை நாம் நடைமுறைப்படுத்துவோம் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

அதிபர் - ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், அதிபர் - ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு தொடர்பில் ஆராய்வதற்கு கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் அமைச்சர் டலஸ் அழகப்பெரும உள்ளிட்ட அமைச்சர்கள் அடங்கிய அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்பட்டு அக்குழுவினால் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன.

அந்த பரிந்துரைகளின் அடிப்படையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர் உப குழு உறுப்பினர்கள் அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து அவை தொடர்பில் தெளிவுபடுத்தினர்.

எனினும் அரசியல் நோக்கம் கொண்ட தொழிற்சங்கள் அவற்றை ஏற்றுக் கொள்ளவில்லை. சிறுவர்களின் நலனில் அக்கறை கொண்டுள்ள தொழிற்சங்கள் அவற்றை ஏற்றுக் கொண்டுள்ளன.

எவ்வாறிருப்பினும் கல்வி அமைச்சர், சுகாதாரத்துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளார். அதற்கமைய நாம் பாடசாலைகளை ஆரம்பிப்போம். அரசியல் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு மாணவர்களின் எதிர்காலத்தை காட்டிக் கொடுக்க முடியாது.

அதிபர் - ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு 20 ஆண்டுகள் தொடரும் பிரச்சினை என்றால், ஏன் கொவிட் நெருக்கடிக்கு மத்தியில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது ? எனவே இதில் அரசியல் நோக்கம் காணப்படுகிறது என்பது தெளிவாகிறது.

அனைவருக்கும் அரசியல் நோக்கங்கள் இருக்கின்றதல்லவா? எனினும் நாம் மாணவர்களின் சார்பில் நின்று அவர்களின் கல்விக்கு முன்னுரிமையளிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை நாம் நடைமுறைப்படுத்துவோம் என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment