அரசாங்கத்தின் இயலாமையின் வெளிப்பாடுகளை தற்போது காணக்கூடியதாக உள்ளது, இதன் தாக்கம் 2022 இல் இரட்டிப்பாக காணப்படும் - ரணில் விக்கிரமசிங்க - News View

About Us

About Us

Breaking

Sunday, October 17, 2021

அரசாங்கத்தின் இயலாமையின் வெளிப்பாடுகளை தற்போது காணக்கூடியதாக உள்ளது, இதன் தாக்கம் 2022 இல் இரட்டிப்பாக காணப்படும் - ரணில் விக்கிரமசிங்க

(லியோ நிரோஷ தர்ஷன்)

தேசிய பொருளாதார முகாமைத்துவத்தில் அரசாங்கத்தின் இயலாமையின் வெளிப்பாடுகளை தற்போது நாட்டில் காணக்கூடியதாக உள்ளது. இதன் தாக்கம் 2022 ஆம் ஆண்டில் இரட்டிப்பாக காணப்படும் என எச்சரித்துள்ள ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, பொருளாதார சவால்களை கணிப்பிட்டு சிறப்பு திட்டம் ஒன்றை வகுக்க வேண்டிய நிலையில் இலங்கை உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் தொடர்ந்தும் விளக்கமளிக்கையில், உலக பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை கருத்தில் கொண்டு தேசிய பொருளாதார சவால்களை முகாமைத்துவம் செய்ய இயலாமையின் வெளிப்பாடுகளையே இன்று நாட்டில் காண்கின்றோம்.

பொருளாதார முகாமைத்துவத்தில் அரசாங்கம் தோல்வியை ஏற்றுக் கொள்ள வேண்டும். மக்கள் இந்த இயலாமையை புரிந்து கொண்டுள்ளனர். 2022 ஆம் ஆண்டில் இதன் தாக்கம் இரட்டிப்பாக இருக்கும். மக்களால் வாழ முடியாதளவிற்கு நிலைமை மோசமடைந்துள்ளது. இதனை மேலும் நெருக்கடிக்குள் கொண்டு செல்லும் வகையில் அரசாங்கத்தின் தீர்மானங்கள் அமைகின்றன. எதிர்க்கட்சியும் வெறுமனே விமர்சிப்பவர்களாக உள்ளது.

எனவே தற்போதைய சவால்களை கணிப்பிட்டு சிறப்பு திட்டம் ஒன்றை வகுக்க வேண்டிய நிலையில் நாம் உள்ளோம். இதனை கூடிய விரைவில் செய்து மக்கள் மயப்படுத்தும் செயற்பாடுகளை ஐக்கிய தேசிய கட்சி முன்னெடுக்கவுள்ளது. நாட்டின் பொருளாதார அபிவிருத்தியில் ஐக்கிய தேசிய கட்சியின் சாதனைகளை யாரும் மறந்து விட முடியாது. அதற்கு வரலாறு சாட்சி பகிரும்.

அதே போன்று விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் என பல துறை சார்ந்தவர்களும் இன்று அரசாங்கத்திற்கு எதிராக குரல் எழுப்புகின்றனர். அவற்றுக்கு பதிலளிக்கவோ தீர்வை முன்வைக்கவோ முடியாத நிலையில் அரசாங்கம் உள்ளது.

அரசாங்கத்திற்கு எதிரான பரந்துப்பட்ட எதிர்ப்புகள் மற்றும் நாட்டில் மேலோங்கியுள்ள பொருளாதார, வாழ்வாதார அழுத்தங்களினால் மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். எனவே ஒன்றிணைந்து மக்கள் நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டும். ஐக்கிய தேசிய கட்சி இதற்கு தலைமை தாங்கும் என ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment