ரிஷாத், அவரது சகோதரர் ரியாஜ் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனு : பரிசீலிக்க உயர் நீதிமன்றம் தீர்மானம் - News View

Breaking

Tuesday, October 12, 2021

ரிஷாத், அவரது சகோதரர் ரியாஜ் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனு : பரிசீலிக்க உயர் நீதிமன்றம் தீர்மானம்

(எம்.எப்.எம்.பஸீர்)

முன்னாள் அமைச்சரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன், அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோர் தம்மை பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்து தடுத்து வைத்துள்ளதை ஆட்சேபித்து தலா 500 கோடி ரூபா நட்ட ஈடு பெற்றுத் தரக் கோரி உயர் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள மனுக்களை எதிர்வரும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதி பரிசீலிக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

குறித்த இருவரும் தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் இன்று மனுதாரர் தரப்பின் நகர்த்தல் பத்திரத்துக்கு அமைய பரிசீலனைக்கு வந்தது.

உயர் நீதிமன்றின் நீதியரசர்களான விஜித் மலல்கொட, முர்து பெர்ணான்டோ மற்றும் காமினி அமரசேகர ஆகியோர் கொன்ட நீதியரசர்கள் குழாம் முன்னிலையிலேயே குறித்த வழக்கு பரிசீலிக்கப்படும் நிலையில், இன்று நீதியரசர் விஜித் மலல்கொட சமூகமளித்திராத நிலையில் முர்து பெர்ணான்டோ மற்றும் காமினி அமரசேகர ஆகிய இருவர் கொன்ட குழாம் முன்னிலையில் மனு பரிசீலனைக்கு வந்தது.

இதன்போது மனுதாரர்கள் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரனிகளான என்.எம்.சஹீட், ருஷ்தி ஹபீப், புலஸ்தி ஹேவமான்ன உள்ளிட்டோருடன் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா மன்றில் ஆஜரானார்.

பிரதிவாதிகளுக்காக இந்த மனு மீதான பரிசீலனைகளில் ஆஜராகி வரும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் மாதவ தென்னகோன் மன்றில் ஆஜராகாத நிலையில், அத்திணைக்களம் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் நரின் புள்ளே மற்றும் சிரேஷ்ட அரச சட்டவாதி கலாநிதி அவந்தி பெரேரா ஆகியோர் மன்றில் ஆஜராகினர்.

இந்நிலையிலேயே பல்வேறு காரணிகளை கருத்தில் கொண்டு மனுக்கள் மீதான பரிசீலனைகளை எதிர்வரும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுக்க நீதிமன்றம் தீர்மானித்தது.

No comments:

Post a Comment