இலங்கையில் எட்டு பெண்களில் ஒருவருக்கு மார்பகப் புற்று நோய் : பரிசோதனைகளை இலவசமாக செய்து கொள்ள முடியும் என்கிறார் விசேட வைத்திய நிபுணர் ஹசந்தி ஜயலத் - News View

About Us

About Us

Breaking

Monday, October 11, 2021

இலங்கையில் எட்டு பெண்களில் ஒருவருக்கு மார்பகப் புற்று நோய் : பரிசோதனைகளை இலவசமாக செய்து கொள்ள முடியும் என்கிறார் விசேட வைத்திய நிபுணர் ஹசந்தி ஜயலத்

(எம்.மனோசித்ரா)

இலங்கையில் பதிவாகும் புற்று நோயாளர்களில் 27 சதவீதமான பெண்கள் அதாவது நான்கில் ஒரு பகுதியினர் மார்பகப் புற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர். இலங்கையில் எட்டு பெண்களில் ஒருவருக்கு மார்பகப் புற்று நோய் காணப்படுவதாக மார்பகப் புற்று நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் ஹசந்தி ஜயலத் தெரிவித்தார்.

எவ்வாறிருப்பினும் மார்பகப் புற்று நோயினை ஆரம்பத்திலேயே கண்டறிவதன் மூலம் மார்பகங்களை அகற்றாமல், புற்று நோய் கட்டிகளை மாத்திரம் அகற்றி அதனை நூறு வீதம் குணப்படுத்த முடியும் என்றும் வைத்திய நிபுணர் ஹசந்தி ஜயலத் தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் , இலங்கையில் பதிவாகும் புற்று நோயாளர்களில் 27 சதவீதமான பெண்கள் அதாவது நான்கில் ஒரு பகுதியினர் மார்பகப் புற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர்.

இலங்கையில் எட்டு பெண்களில் ஒருவருக்கு மார்பகப் புற்று நோய் காணப்படுகிறது. 2019 ஆம் ஆண்டு தரவுகளின் அடிப்படையில் புதிதாக 4500 பேருக்கு மார்பகப் புற்று நோய் இனங்காணப்பட்டுள்ளது. அதற்கமைய இலங்கையில் நாளொன்றில் சுமார் 12 பெண்கள் மார்பகப் புற்று நோய்க்கு உள்ளாகியுள்ளமை இனங்காணப்படுகிறது.

45 - 69 வயதுக்கு இடைப்பட்ட பெண்களுக்கே மார்பகப் புற்று நோய் அதிகளவில் ஏற்படுகிறது. பெண்களுக்கு மாத்திரமின்றி ஆண்களில் ஒரு சதவீதமானோருக்கு மார்பகப் புற்று நோய் ஏற்படுகிறது.

புற்று நோய்க்கான காரணங்களாக அதிக உடற் பருமன், மது மற்றும் புகைப்பொருள் பாவனை உள்ளிட்டவை காணப்படுகின்றன. இவை தவிர்க்கக் கூடிய காரணிகளாகும். எனினும் பரம்பரையின் காரணமாக சிலருக்கு மார்பகப் புற்று நோய் ஏற்படும். அதே போன்று இது போன்ற எந்த காரணிகளும் இன்றியும் இந்நோய் சிலருக்கு ஏற்படக் கூடும். இவை தவிர்க்க முடியாத காரணிகளாகும்.

எவ்வாறிருப்பினும் மார்பகப் புற்று நோயை ஆரம்பத்திலேயே இனங்காண்பதன் மூலம் மார்பகங்களை அகற்றாமல், புற்று நோய் கட்டிகளை மாத்திரம் அகற்றி அதனை நூறு வீதம் குணப்படுத்த முடியும். இதற்கு ஆரம்பத்திலேயே கண்டறிவது மிகவும் முக்கியத்துவமுடையதாகும்.

எனவே 20 - 40 வயதுக்கு இடைப்பட்ட பெண்கள் 3 வருடங்களுக்கு ஒரு முறையும், 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் வருடத்திற்கு ஒரு முறையும் மார்பக பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும்.

20 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் சுய மார்பக பரிசோதனை தொடர்பான விழிப்புணர்வைக் கொண்டிருக்க வேண்டும். அத்தோடு சகல வைத்தியசாலைகளிலும், சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளிலும் மார்பக பரிசோதனைகளை இலவசமாக செய்து கொள்ள முடியும் என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment