(எம்.மனோசித்ரா)
நாடளாவிய ரீதியிலுள்ள பாடசாலைகளில் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான கல்வி செயற்பாடுகள் இன்று திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகின்றன. இதற்காக பாடசாலைகளில் சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும், மாணவர்கள் பாடசாலை சீருடையில் சமூகமளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்தார்.
அத்தோடு ஒரே சந்தர்ப்பத்தில் ஆகக்கூடியது 20 மாணவர்கள் மாத்திரமே அனுமதிக்கப்பட வேண்டும் என்றும், சகல மாணவர்களுக்கும் ஒரு மீற்றர் இடைவெளியைப் பேணக்கூடிய வகுப்பறை வசதிகள் காணப்படுமாயின் அதற்கு ஏற்ற எண்ணிக்கையிலான மாணவர்களை அனுமதிப்பது தொடர்பில் பாடசாலை அதிபர்கள் தீர்மானிக்க முடியும் என்றும் மேலதிக செயலாளர் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்தார்.
இன்றையதினம் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான கல்வி செயற்பாடுகள் ஆரம்பமாகவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் வினவிய போது மேலதிக செயலாளர் எல்.எம்.டி.தர்மசேன வீரகேசரிக்கு இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தரம் 1 தொடக்கம் 5 வரையான வகுப்பு மாணவர்களுக்கு இன்று கற்பித்தல் செயற்பாடுகள் ஆரம்பமாகவுள்ளன.
இவ்வற்றில் ஒவ்வொரு வகுப்புக்களிலும் 20 க்கும் அதிக மாணவர்கள் காணப்படுவார்களாயின் ஒரு சந்தர்ப்பத்தில் 20 மாணவர்களுக்கு மாத்திரமே கற்பித்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும். எஞ்சிய மாணவர்களுக்கு மறுநாள் கற்பித்தலை முன்னெடுக்க வேண்டும்.
இவ்வாறு மாணவர்களை தொகுதிகளாக பிரித்து எந்தெந்த மாணவர்கள் எந்தெந்த நாட்களில் பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டும் என்பதை அதிபர்களும், வகுப்பாசிரியர்களும் தீர்மானிக்க முடியும்.
எவ்வாறிருப்பினும் உயர்தரம் வரையான வகுப்புக்களை கொண்ட பாடசாலைகளில் 6 ஆம் தரத்திற்கு மேலுள்ள வகுப்பறைகள் எஞ்சியிருக்கும். அவ்வாறான வகுப்பறைகளைக் கொண்ட பாடசாலைகளில் 20 இற்கும் அதிகமான மாணவர்கள் ஒரு மீற்றர் இடைவெளியைப் பேணக் கூடிய வசதிகள் காணப்பட்டால் அனைத்து மாணவர்களையும் பாடசாலைக்கு அழைக்க முடியும்.
அத்தோடு மாணவர்கள் கட்டாயம் பாடசாலை சீருடையில் வருகை தர வேண்டிய தேவை கிடையாது. சாதாரண ஆடைகள், பாதணிகளுடன் வருகை தர முடியும். நீண்ட நாட்களின் பின்னர் பாடசாலைக்கு சமூகமளிக்கும் மாணவர்களின் மனநிலையைக் கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்த சுற்றுநிரூபம் உரிய தரப்பினருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றார்.
No comments:
Post a Comment