இலங்கை இளையோர் மெய்வல்லுநர் குழாம் தெரிவு : பங்குபற்றுவோருக்கான தகுதி மட்டங்கள் வெளியானது - News View

Breaking

Monday, October 18, 2021

இலங்கை இளையோர் மெய்வல்லுநர் குழாம் தெரிவு : பங்குபற்றுவோருக்கான தகுதி மட்டங்கள் வெளியானது

(எம்.எம்.சில்வெஸ்டர்)

இலங்கை இளையோர் மெய்வல்லுநர் குழாத்தினரை தெரிவு செய்வதற்கான முதற்கட்ட தெரிவு போட்டிகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடத்துவதற்கு இலங்கை மெய்வல்லுநர் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஆண்கள் மற்றும் பெண்கள் என இரண்டு பிரிவுகளிலும் தலா 12 போட்டி நிகழ்வுகள் நடத்தப்படவுள்ளதுடன், இப்போட்டிகளில் பங்குகொள்வதற்கான தகுதி மட்டங்களை இலங்கை மெய்வல்லுநர் சங்கம் வெளியிட்டுள்ளது.

2005 மற்றும் 2006 ஆகிய ஆண்டுகளில் பிறந்த 18 வயதுக்குட்பட்ட வீர, வீராங்கனைகள் மாத்திரமே இதில் பங்கேற்க முடியும்.

மேலும், 2019.08.01 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் திறமைகளை வெளிப்படுத்திய வீர, வீராங்கனைகளாக இருக்க வேண்டும்.

இதற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 29 ஆம் திகதிக்கு முன்னதாக இலங்கை மெய்வல்லுநர் சங்கம், இலக்கம். 33,டொரிங்டன் பிளேஸ், கொழும்பு -07 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கும்படி அச் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த தகுதிகாண் ‍போட்டியில் 100 மீற்றர் (ஆண்கள் மற்றும் பெண்கள்), 200 மீற்றர் (ஆண்கள் மற்றும் பெண்கள்), 400 மீற்றர் (ஆண்கள் மற்றும் பெண்கள்), 800 மீற்றர் (ஆண்கள் மற்றும் பெண்கள்), 3000 மீற்றர் (ஆண்கள் மற்றும் பெண்கள்), 110 மீற்றர் சட்ட வேலி (ஆண்கள்), 100 மீற்றர் சட்டவேலி (பெண்கள்), 400 மீற்றர் சட்டவேலி (ஆண்கள் மற்றும் பெண்கள்), 2000 மீற்றர் தடைத்தாண்டல் (ஆண்கள் மற்றும் பெண்கள்), உயரம் பாய்தல் (ஆண்கள் மற்றும் பெண்கள்), நீளம் பாய்தல் (ஆண்கள் மற்றும் பெண்கள்), முப்பாய்ச்சல் (ஆண்கள் மற்றும் பெண்கள்), ஈட்டி எறிதல் (ஆண்கள் மற்றும் பெண்கள்) ஆகியன இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment