தேவையற்ற தலையீடுகளை நியாயப்படுத்தும் கருவியாக மனித உரிமைகள் தவறாக பயன்படுத்தப்படக் கூடாது - சவுதி தூதுவரிடம் தெரிவித்தார் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 6, 2021

தேவையற்ற தலையீடுகளை நியாயப்படுத்தும் கருவியாக மனித உரிமைகள் தவறாக பயன்படுத்தப்படக் கூடாது - சவுதி தூதுவரிடம் தெரிவித்தார் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்

(எம்.மனோசித்ரா)

அரசுகளின் உள்ளக விவகாரங்களில் தேவையற்ற தலையீடு அல்லது குறுக்கீட்டை நியாயப்படுத்தும் கருவியாக மனித உரிமைகள் தவறாக பயன்படுத்தப்படக் கூடாது என்று வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான சவுதி அரேபிய தூதுவர் அப்துல் நாசர் அல் ஹர்தி மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸை ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்விடயம் தொடர்பில் தெரிவித்துள்ளார்.

இலங்கை - சவுதி அரேபியாவிற்கிடையிலான சிறந்த, நீண்ட கால நட்புறவு இதன்போது நினைவு கூரப்பட்டதுடன், முஸ்லிம்களின் புனித நகரமான சவுதி அரேபியாவின் ஹஜ் வருடாந்த இஸ்லாமிய யாத்திரையின் போது இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு சவுதி அரேபிய அரசாங்கம் வழங்கிய மரியாதைக்கு அமைச்சரால் நன்றி தெரிவிக்கப்பட்டது.

பல சர்வதேச அரங்குகளில் சவுதி அரேபியாவின் புரிந்துணர்வு மற்றும் ஆதரவுக்கு அமைச்சர் இதன் போது தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

இந்த ஆதரவு ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் சீரானதாக அமைந்திருந்ததுடன், ஒரு கொள்கை நிலையில் நிறுவப்பட்டது. இந்தக் கொள்கை ரீதியான நிலைப்பாடு இலங்கையால் பகிரப்பட்ட மூன்று ஆழமான நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டது.

முதலாவதாக ஒவ்வொரு தேசிய அரசினதும் தனித்துவமான அடையாளமும் கண்ணியமும் அதன் கலாச்சாரமும் மதிக்கப்படல் வேண்டும். இரண்டாவதாக, தேசிய நிறுவனங்கள் மற்றும் கட்டமைப்புக்கள் அதன் ஆணைகளை நிறைவேற்றுவதற்குத் தேவையான முழுமையான இடம் கொடுக்கப்படல் வேண்டும். இறுதியாக, அந்த அரசுகளின் உள்ளக விவகாரங்களில் தேவையற்ற தலையீடு அல்லது குறுக்கீட்டை நியாயப்படுத்தும் கருவியாக மனித உரிமைகள் தவறாக பயன்படுத்தப்படக் கூடாது.

இலங்கையின் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சவுதி அரேபியா உதவியமையைப் பாராட்டிய அமைச்சர், இலங்கையர்களுக்கான வேலை வாய்ப்புக்கள் இரு நாடுகளினதும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் உதவியுள்ளதாக வலியுறுத்தினார்.

திறமையான மற்றும் தொழில்முறைப் பிரிவுகளில் இலங்கையர்களுக்கு அதிகமான வாய்ப்புக்களை வழங்குமாறும் அமைச்சர் இதன்போது கேட்டுக் கொண்டார்.

கொவிட்-19 தொற்றுநோயின் ஆரம்பக் கட்டங்களில் இலங்கையின் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை திருப்பி அனுப்ப உதவிய சவுதி அரேபிய அரசாங்கத்துக்கு அவர் நன்றிகளைத் தெரிவித்தார். இலங்கையின் தேசிய அபிவிருத்தியில் சவுதி நிதியத்தின் பங்களிப்பையும் அமைச்சர் நன்றியுடன் குறிப்பிட்டார்.

இலங்கையுடனான இரு தரப்புக் கூட்டாண்மைக்கு சவுதி அரேபியா தொடர்ந்தும் முக்கியத்துவமளித்து வருவதாகவும், கொவிட்-19 நிலைமை சீரானவுடன் இலங்கையால் அடையாளம் காணப்பட்ட முன்னுரிமைப் பகுதிகளில் இரு தரப்பு உறவுகளை மேலும் விரிவுபடுத்துவதாகவும் அமைச்சருக்கு தூதுவர் உறுதியளித்தார்.

No comments:

Post a Comment